தேடுதல்

அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. 

அருள்பணி சுவாமி: பிணையல் வழங்கும் விசாரணை தள்ளி வைப்பு

அருள்பணி ஸ்டான் சுவாமியைத் தாக்கியுள்ள நரம்பு தளர்ச்சி நோய், மற்றும், அவரது முதிர்ந்த வயதைக் காரணம் காட்டி பிணையலுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தேசத் துரோக நடவடிக்கையில் ஈடுபட்டார் என அநீதியாய் குற்றம் சுமத்தப்பட்டு, ஐந்து மாதங்களுக்குமேல் மும்பை டலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள வயதுமுதிர்ந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை, பிணையலில் விடுவிக்கவேண்டும் என்ற மனுவை, மூன்றாம் முறையாக தள்ளி வைத்துள்ளது, சிறப்பு நீதிமன்றம் ஒன்று.

84 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்குப் பிணையல் வழங்கவேண்டும் என்று சமர்ப்பிக்கப்பட்ட மனுவை முதலில், பிப்ரவரி 16, பின்னர், மார்ச் 02, பின்னர், மார்ச் 16 என ஒவ்வொரு முறையும் விசாரணை தேதிகளை தள்ளிவைத்த நீதிமன்றம், தற்போது அந்த தேதியை மார்ச் 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. 

NIA எனப்படும், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின், சிறப்பு நீதிமன்றம், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் தொடர்பான பிணையல் மனுவை விசாரிக்கும் தேதிகளை தள்ளிவைத்து வருவதுபற்றி கருத்து தெரிவித்த, இயேசு சபை வழக்கறிஞர் அருள்பணி சந்தானம் அவர்கள், நீதிமன்றம், இந்த விசாரணையை தாமதப்படுத்துவதற்கு, பல்வேறு சாக்குப்போக்குகளைப் பயன்படுத்துகின்றது என்று கூறியுள்ளார்.

இந்த சிறப்பு நீதிமன்றம், மார்ச் 22ம் தேதியில் இந்த வழக்கை விசாரித்து, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை விடுதலை செய்யும் என்று நம்பிக்கையோடு உள்ளோம் என்றும், அருள்பணி சந்தானம் அவர்கள், யூக்கா செய்தியிடம் கூறினார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைத் தாக்கியுள்ள  நரம்பு தளர்ச்சி (பார்க்கின்சன்) நோய், மற்றும், அவரது முதிர்ந்த வயதைக் காரணம் காட்டி பிணையலுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த மனு பற்றிய விசாரணை தேதி, தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுவருகிறது. (UCAN)

19 March 2021, 12:24