தேடுதல்

Vatican News
ஈராக்கின் ஊர் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ் ஈராக்கின் ஊர் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் தேசிய ஒன்றிப்பை...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கிற்கு மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்தை (மார்ச் 5-8,2021) சிறப்பிக்கும் விதமாக, அந்நாட்டு அரசு, மார்ச் 6ம் தேதியை, சகிப்புத்தன்மை நாளாக அறிவித்துள்ளது.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டிற்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க திருத்தூதுப்பயணத்தின் நல்தாக்கங்கள், உயிர்த்துடிப்புடன் காக்கப்படுமாறு, ஈராக், மற்றும், மத்தியக் கிழக்குப் பகுதியின் மக்கள் அனைவருக்கும் எழுதிய மடல் ஒன்றில், அழைப்பு விடுத்துள்ளார், ஈராக் திருஅவைத் தலைவர்.

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப்பயணம், பொருளாதாரம், சுற்றுலா, தேசிய ஒன்றிப்பு, நாட்டின் பல்வேறு குழுக்கள் மத்தியில் பல்சமய உரையாடல் போன்றவற்றை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படவேண்டும் என்று, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் இரஃபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள், தன் மடலில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வகுப்புவாத காழ்ப்புணர்வு, மோதல்கள், மற்றும், கருத்து முரண்பாடுகள் ஆகிய, கடந்தகால வேதனைநிறைந்த அனைத்தையும் முற்றிலும் புறக்கணித்து, அமைதி, உடன்பிறந்தஉணர்வு, ஒருமைப்பாடு மற்றும், ஒருவர் ஒருவரை மதிக்கும் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, இத்திருத்தூதுப்பயணம் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக, வன்முறை, அழிவு, மற்றும், பிரிவினைகளுக்குக் காரணமாக அமைந்திருந்த பிரிவினைவாதம், மற்றும், இனவாதம், ஆகியவற்றைப் புறக்கணித்து வாழுமாறு, மத்தியக் கிழக்கின் அனைத்து மக்களையும், அரசுகளையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் சாக்கோ.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஈராக் திருத்தூதுப்பயணத்தைக் கொண்டாடும் வகையில், தேசிய நாள் ஒன்றை உருவாக்குமாறும், நாட்டைவிட்டு வெளியேறியுள்ள ஈராக்கியர்கள், தங்களின் சொந்த நாட்டில் முதலீடு செய்யுமாறும், கர்தினால் சாக்கோ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து, அனைத்து ஈராக் மக்களும் சிந்தித்துப் பார்ப்பதற்கும், ஈராக் அரசுத்தலைவர், அமைச்சர்கள் மற்றும், மதத் தலைவர்களோடு கலந்துரையாடலை மேற்கொள்ளவும், கர்தினால் சாக்கோ அவர்களின் இந்த மடல் உதவும் என்று, ஆசியச் செய்தி கூறியுள்ளது.

இதற்கிடையே, மார்ச் மாதம் 6ம் தேதியை, சகிப்புத்தன்மை நாளாக, ஈராக் அரசு அறிவித்துள்ளது. இந்நாள், சகிப்புத்தன்மை, மற்றும், அன்பைப் பரப்புவதற்கு, முயற்சிகளை மேற்கொள்ளும் நாளாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. (AsiaNews)

26 March 2021, 15:30