தேடுதல்

படுகொலைகளுக்கு நீதி கேட்டு பல்மத அமைதி ஊர்வலம் படுகொலைகளுக்கு நீதி கேட்டு பல்மத அமைதி ஊர்வலம்  

இலங்கையில் கத்தோலிக்கர்களின் கறுப்பு ஞாயிறு பேரணி

கர்தினால் இரஞ்சித் : 279 பேரின் உயிரிழப்புகளுக்குக் காரணமான வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்த உண்மைகள் வெளிவரும்வரை ஓயப்போவதில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு, இயேசுவின் உயர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் குறித்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன், புத்த மதத்தினர், மற்றும், இஸ்லாமியர்களின் ஒருமைப்பாட்டுடன், நீதிக்கான அமைதிப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர், இலங்கை கத்தோலிக்கர்.

மிகத் துல்லியமாக நடத்தப்பட்ட இத்தாக்குதல்களுக்கு பின்னிருந்து திட்டமிட்டவர்கள் யார் என்பது குறித்து அறியும்வரை ஓயமாட்டோம் எனவும், எதற்கும் அஞ்சமாட்டோம் எனவும், இவ்வூர்வலத்தில் பங்குபெற்றோர் முழக்கமிட்டனர்.

கருப்பு ஞாயிறு என்ற அடைமொழியுடன் கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட இந்த அமைதி அடையாள ஊர்வலம், கொழும்பு கர்தினால் மால்கம் இரஞ்சித், மற்றும் அனைத்து இலங்கை ஆயர்களின் ஆதரவுடன் இடம்பெற்றது.

குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்களைத் தண்டிப்பதில், தயக்கம் காட்டிவரும் அரசுக்கு, எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாகவும், உயிரிழந்தவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாகவும், இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டோர், கறுப்பு உடைகளை அணிந்திருந்தனர்.

279 பேரின் உயிரிழப்புகளுக்குக் காரணமான வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்த உண்மைகள் வெளிவரும்வரை ஓயப்போவதில்லை என, பத்திரிகையாளர்களிடம், இஞ்ஞாயிறு திருப்பலிக்குப்பின் அறிவித்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், அனைவருக்கும் நீதி கிட்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடனேயே இந்த அமைதி ஊர்வலத்தை நடத்துவதாகவும் தெரிவித்தார்.

நேர்மையான விசாரணைக்கு தங்களை அர்ப்பணிப்பதுடன், தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதில் தீவிரமும் காட்டப்படும் வரை, இத்தகைய அமைதிப் போராட்டங்கள் தொடரும் என்று கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், நீதிக்கான போராட்டம், கத்தோலிக்கர்களுக்கு மட்டுமானதல்ல, மாறாக, அனைத்து இலங்கை குடிமக்களுக்குமானது, என கூறினார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி உயிர்ப்புப் பெருவிழாவன்று, கொழும்புவின் மூன்று கோவில்களிலும், மூன்று உணவு, மற்றும் தங்கும் விடுதிகளிலும் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில், 279 பேர் கொல்லப்பட்டது குறித்த அரசு விசாரணைகள், நீதியான முறையில் இடம்பெறவில்லை என, கத்தோலிக்கத் தலைவர்களும், அந்நாட்டின் சமுதாயத் தலைவர்களும் தொடர்ந்து கவலையை வெளியிட்டு வருகின்றனர்.

11 March 2021, 14:31