தேடுதல்

சிரியா போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகள், உணவைப் பகிர்ந்துகொள்ளும் காட்சி சிரியா போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகள், உணவைப் பகிர்ந்துகொள்ளும் காட்சி 

சிரியாவின் சிறார், போரைத்தவிர வேறெதையும் அறியாதவர்கள்

சிரியாவில், இடம்பெற்ற போரின்போது, குறைந்தது 19,700 கோடி டாலர் மதிப்புடைய உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது – உலக வங்கி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிரியா நாட்டின் சிறார் போரைத்தவிர வேறெதையும் அறியாதவர்கள் என்று, அந்நாட்டில் உள்நாட்டுப் போர் தொடங்கியதன் பத்தாண்டு நிறைவையொட்டி வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது, உலகளாவிய கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு

மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அரபு நாடாகிய சிரியாவில், 2011ம் ஆண்டிலிருந்து இடம்பெற்றுவரும் போரினால், குறைந்தது 19,700 கோடி டாலர் மதிப்புடைய உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது என்று உலக வங்கி கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது, காரித்தாஸ் அமைப்பு. 

மார்ச் 15, இத்திங்களன்று, சிரியாவில் போர் தொடங்கியதன் பத்தாண்டுகள் நிறைவுற்றதை நினைவுகூர்ந்த உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, மருத்துவ, மனிதாபிமான, மற்றும், கல்வி சார்ந்த வளங்கள் அதிகம் தேவைப்படும் சிரியாவின் சிறார்க்கு, தனது இணையதளத்தில் உதவிகள் கேட்டு விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளது.  

“நாளை நம் கரங்களில்” என்ற தலைப்போடு, சிரியா நாட்டு சிறாரின் கல்வி வாய்ப்புக்களுக்கு உதவிகள் கேட்டு விண்ணப்பித்துள்ள காரித்தாஸ் அமைப்பு, கோவிட்-19 பெருந்தொற்று, சிரியாவின் கல்வி அமைப்பில், ஐம்பது விழுக்காட்டைப் பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

2019ம் ஆண்டின் இறுதியில் எடுத்த கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 2 கோடியே 45 இலட்சம் சிரியா நாட்டுச் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தநிலையில், தற்போது, மூன்று சிறாருக்கு இருவர், பள்ளிக்குச் செல்வதில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளது, காரித்தாஸ் அமைப்பு.

சிரியாவில், பத்து பேருக்கு எட்டுப் பேர், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர். அதாவது, ஏறத்தாழ ஒரு கோடியே 11 இலட்சம் பேருக்கு, ஏதாவது ஒரு வகையில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. இவர்களில், 2020ம் ஆண்டில் மட்டும், 47 இலட்சம் பேருக்கு இந்த உதவிகள் தேவைப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2021, 14:54