தேடுதல்

Vatican News
பாக்தாத் பேராலயத்தில் திருத்தந்தையுடன் திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் சாக்கோ பாக்தாத் பேராலயத்தில் திருத்தந்தையுடன் திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் சாக்கோ 

கிறிஸ்தவர், இஸ்லாமியர் அனைவரையும் தொட்ட திருத்தந்தை

பல ஆண்டுகளாக துன்புற்று வந்த ஈராக் நாட்டினருக்கு, திருத்தந்தையின் அருகாமை, பெரும் ஆறுதலாக இருந்தது - கர்தினால் சாக்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, தங்கள் நாட்டில், கிறிஸ்தவர்கள், தங்கள் மத நம்பிக்கையை இன்னும் பெருமிதத்துடன் மற்றவர்களிடம் வெளிப்படுத்தமுடியும் என்று, ஈராக் நாட்டு கர்தினால் ஒருவர் கூறினார்.

திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்தைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள், திருத்தந்தையின் சொற்களும், செயல்பாடுகளும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் என்ற பாகுபாடு ஏதுமின்றி, நாட்டிலுள்ள அனைவரையும் தொட்டன என்று கூறினார்.

பல ஆண்டுகளாக துன்புற்று வந்த ஈராக் நாட்டினருக்கு, திருத்தந்தையின் அருகாமை, பெரும் ஆறுதலாக இருந்தது என்று கூறிய கர்தினால் சாக்கோ அவர்கள், திருத்தந்தையை நேரில் சந்திக்க இயலாத பல்லாயிரம் மக்கள், அவரை, தொலைக்காட்சியில் கண்டு ஆறுதல் அடைந்தனர் என்று கூறினார்.

பாக்தாத் தூதரகத்திலிருந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராலயத்திற்கு செல்லும் வழியில், வழியெங்கும் இருந்த கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய வீடுகளில், கதவுகள் திறந்திருந்ததும், ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் நின்ற மக்கள், ஏற்றப்பட்ட மெழுகுதிரியையும், ஒலிவக் கிளையையும் கரங்களில் வைத்திருந்ததும், பொருள்நிறைந்த செயலாகத் தெரிந்தன என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஷியா இஸ்லாமியர்களின் தலைவர், பெரும் அயத்துல்லா அல்-சிஸ்தானி அவர்களை திருத்தந்தை சந்தித்தது, இப்பயணத்தின் மிக முக்கியமான ஒரு தருணம் என்று கூறிய கர்தினால் சாக்கோ அவர்கள், இவ்விருவருக்கும் இடையே வெறும் சொற்கள் பரிமாறப்படவில்லை, மாறாக, உண்மையான நட்பும், அன்பும் பரிமாறப்பட்டதை அனைவரும் கண்டனர் என்பதை குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த சந்திப்பின் வழியே, கிறிஸ்தவ இஸ்லாம் உரையாடலுக்கு திருத்தந்தை ஒரு விதையை ஊன்றியிருக்கிறார் என்றும், இதைத் தொடர்ந்து, பராமரித்து, நீரூற்றி வளர்ப்பது, ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள், மற்றும் இஸ்லாமியரின் பொறுப்பு என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.

ஈராக் நாட்டில் வாழும் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவருமே இந்நாட்டில் சம உரிமைகள் பெற்ற குடிமக்கள் என்பதை, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் வலியுறுத்திச் சென்றுள்ளது என்று கூறிய கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் சாக்கோ அவர்கள், இனிவரும் நாள்களில் பிரிவுகளை வளர்க்காமல், ஒற்றுமையை வளர்க்க, இந்தப் பயணம் பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என்று கூறினார். (AsiaNews)

11 March 2021, 12:54