தேடுதல்

Vatican News
புத்த துறவிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கர்தினால் இரஞ்சித் புத்த துறவிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கர்தினால் இரஞ்சித் 

ஆலய தாக்குதல்களின் முழு விவரங்களுக்காக தொடரும் போராட்டம்

இலங்கையின் ஆலயங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களைப் பற்றிய முழு விவரங்களும் வெளிவரும் வரையில், தங்கள் போராட்டம் தொடரும் - கர்தினால் மால்கம் இரஞ்சித்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று இலங்கையின் ஆலயங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களைப் பற்றிய முழு விவரங்களும் வெளிவரும் வரையில், தங்கள் போராட்டம் தொடரும் என்று, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தத் தாக்குதல்களைக் குறித்து, இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் குற்றத்திற்கு யார் உண்மையிலேயே பொறுப்பு என்பதும், இதற்கு நிதி உதவிகள் வழங்கினவர்கள் யார் என்றும் கூறப்படாததால், இந்த அறிக்கையை கத்தோலிக்க ஆயர்களும், கத்தோலிக்க மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று, கர்தினால் இரஞ்சித் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

கத்தோலிக்கர்களாய் இருந்த ஒரே காரணத்திற்காக தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் துண்டு, துண்டாக சிதைக்கப்பட்டிருந்ததை தான் நேரடியாகக் கண்டதாக கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்தக் காட்சியை வேறு எந்த அரசியல்வாதியும் நேரில் கண்டனரா என்பது தெரியவில்லை என்பதை, குறிப்பிட்டுப் பேசினார்.

அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை பெரும்பாலான மக்கள் நம்பவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிப் பேசிய கொழும்புப் பேராயர் கர்தினால் இரஞ்சித் அவர்கள், அதிகாரமும், பணபலமும் கொண்ட அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து இலங்கை சமுதாயத்தைக் காப்பது மிகவும் அவசியம் என்று கூறினார்.

கடந்த 40 அல்லது 50 ஆண்டுகளாக துயரங்களையே பெரும்பாலும் கண்டுவந்துள்ள இலங்கை மக்களுக்கு, நேர்மையான, ஒளிவு மறைவற்ற அரசியல் சூழலை உருவாக்கும் உண்மையான தலைவர்கள் தேவை என்பதை, கர்தினால் இரஞ்சித் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இதற்கிடையே, தற்போது வெளியான அறிக்கையை மறுபரிசீலனை செய்துவரும் ஒரு குழு, 80 விழுக்காடு பணிகளை நிறைவு செய்துள்ளது என்றும், அடுத்துவரும் நாள்களில் இந்த அறிக்கையின் முழு விவரங்கள் வெளியிடப்படும் என்றும் மறுபரிசீலனைக் குழுவின் உறுப்பினரான அமைச்சர் பிரசன்னா இரணத்துங்கா அவர்கள் கூறியுள்ளார். (AsiaNews)

18 March 2021, 14:28