தேடுதல்

மியான்மாரில் மார்ச் 14 ஞாயிறன்று இளையோர் மேற்கொண்ட அமைதி போராட்டம் மியான்மாரில் மார்ச் 14 ஞாயிறன்று இளையோர் மேற்கொண்ட அமைதி போராட்டம் 

அமைதிப் போராட்டக்காரர்களுடன் கர்தினாலின் ஒருமைப்பாடு

மக்களாட்சி, விடுதலை, அமைதி, மற்றும் நீதியை பத்தாண்டுகளாக அனுபவித்து வந்த மியான்மார் மக்கள், தற்போது மீண்டும் இருளின் காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் மக்களாட்சி திரும்பவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் போராடியவர்களுள் ஏறக்குறைய 70 பேர் இராணுவ அடக்குமுறையால் கொல்லப்பட்டுள்ள நிலையில், இராணுவ வீரர்கள் அனைவரும் ஆயுதங்களைக் கைவிட்டு, கொடுங்கோலாட்சியை முடிவுக்குக் கொணரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன், அமைதிப் போராட்டக்காரர்களுடன் தன் ஒருமைப்பாட்டையும் அறிவித்துள்ளார், கர்தினால் சார்லஸ் மாங் போ.

மியான்மார் நாட்டிற்கான உலக இறைவேண்டல் நாள், மார்ச் 14, ஞாயிறன்று, CSW எனப்படும் உலக அளவிலான கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, செய்தியொன்றை வழங்கியுள்ள அந்நாட்டு கர்தினால் போ அவர்கள், பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்காமல், பிப்ரவரி முதல் தேதியிலிருந்து இராணுவ ஆட்சியைக் கொணர்ந்துள்ளவர்கள், உரையாடல் வழியாக இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

சவால்கள், மற்றும் புயல்கள் காலத்திற்குப்பின், மக்களாட்சி, விடுதலை, அமைதி, மற்றும் நீதியை பத்தாண்டுகளாக அனுபவித்துவந்த மியான்மார் மக்கள், தற்போது மீண்டும் இருள், அடக்குமுறை, இரத்தம் சிந்தல் எனும் அத்தியாயத்தை அனுபவித்து வருவதாக தன் கவலையை வெளியிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், மக்களாட்சி, மற்றும் விடுதலையை பாதுகாப்பதற்கென மக்கள் தீர்மானத்துடன் போராடிவருவது குறித்த தன் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தெருக்களில் சுடப்பட்டு இறந்தும், காயப்பட்டும் வருவது, பல ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளது, மற்றும் காணாமல்போயுள்ளது, பல ஆயிரக்கணக்கானோர் குடிபெயர்ந்து வாழும் நிலை என பல்வேறு மனிதகுல நெருக்கடிகள், அண்மைக்காலங்களில் உருவாகியுள்ளது குறித்த கவலையும் கர்தினாலின் செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

மியான்மாரின் இருள் சூழ்ந்த இக்காலக் கட்டத்தில், நீதி, அமைதி, மற்றும் ஒப்புரவின் கருவிகளாக தலத்திருஅவை செயல்படவேண்டும் என இறைவன் விடுக்கும் அழைப்பைக் கேட்கமுடிகிறது என தன் செய்தியில் கூறும், மியான்மார் ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் போ அவர்கள், மக்களைத் தாக்குவது அல்ல, மாறாக, அவர்களை காப்பதே இராணுவத்தின் பணி என்பதை, இராணுவ வீரர்கள் உணர்ந்தவர்களாக, ஆயுதங்களை கைவிட்டு, தங்கள் கடமையை ஆற்றுமாறு தான் விண்ணப்பிப்பதாக அதில் கூறியுள்ளார்.

நாட்டில் காணாமல்போயுள்ளோர், மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோர், சிறைப்படுத்தப்பட்டுள்ளோர், குடிபெயர்ந்துள்ளோர், மக்களாட்சித் தலைவர்கள், சிறுபான்மையினர், மதத்தலைவர்கள், மனந்திரும்ப வேண்டிய இராணுவத்தினர் என அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறும், தன் செய்தியில் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார், மியான்மார் கர்தினால் சார்லஸ் போ.

15 March 2021, 14:57