தேடுதல்

Vatican News
மியான்மாரில் போராடிவரும் இளையோர் மியான்மாரில் போராடிவரும் இளையோர்  (AFP or licensors)

மியான்மார் இளையோர், இருளை ஒளியினால் வெல்ல...

வரலாற்றை மாற்றியமைக்க முயலும் எந்த ஓர் இயக்கமும் இதுவரை சந்தித்துள்ள சவால்களை, மியான்மார் நாட்டு மக்களும் சந்தித்துவருகின்றனர் - கர்தினால் சார்ல்ஸ் மாங் போ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டின் இளையோரும், குடிமக்கள் அனைவரும், அந்நாட்டின் வளர்ச்சிக்கென செய்துள்ள தியாகங்களை வரலாறு அறியும் என்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரும், யாங்கூன் பேராயருமான கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.

மியான்மார் நாட்டில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்கள், அவற்றைத் தடுக்க இராணுவம் மேற்கொண்டுள்ள கடுமையான அடக்குமுறைகள் ஆகியவற்றை, உரையாடல் வழியே முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன், கர்தினால் போ அவர்கள், மார்ச் 24, இப்புதனன்று சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் நன்மையை விரும்பும் குடிமக்களும், இளையோரும் இணைந்து உருவாக்கியுள்ள இயக்கம், குடியாட்சி, சமத்துவம், ஒற்றுமை, அகிம்சை ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இவ்வியக்கத்தின் செயல்பாடுகள், உலக மக்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது என்றும் கர்தினால் போ அவர்கள் தன் செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றை மாற்றியமைக்க முயலும் எந்த ஓர் இயக்கமும் இதுவரை சந்தித்துள்ள சவால்களை, மியான்மார் நாட்டு மக்களும் சந்தித்துவருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள அடக்குமுறையும், வன்முறைகளும், அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களையும் அனுமதிக்காதது குறித்து தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

அமைதியான போராட்டங்களுக்கு அர்த்தம் இல்லையென்ற முடிவுக்கு வரும் இளையோர், ஆயுதம் தாங்கிய வன்முறை என்ற வழியைப் பின்பற்ற தூண்டப்படுகின்றனர் என்பதை, கர்தினால் போ அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இளையோரின் வேதனை, கோபம் ஆகியவற்றை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று இம்மடலில் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், வன்முறை வழிகளைப் பின்பற்ற விழையும் இளையோர், இந்த சோதனையை எதிகொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார்.

மியான்மார் நாட்டுக்குத் தேவையான தீர்வுகள், விரைவாக, எளிதாக கிடைக்கப்போவதில்லை என்று தன் மடலில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் போ அவர்கள், வெறுப்பை, வெறுப்பினால் விரட்டமுடியும் என்ற எண்ணத்தை கைவிட்டு, வெறுப்பை அன்பினாலும், இருளை ஒளியினாலும் வெல்ல இளையோர் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

வன்முறையற்ற வழிகளைப் பின்பற்றுவதை, மியான்மார் நாட்டின் அனைத்து உண்மை மதங்களும், உலகின் அனைத்து மதத்தினரும் விரும்புகின்றனர் என்றும், நாட்டில் தற்போது நிலவும் வன்முறைகளைக் குறைக்க தான் முழு மூச்சுடன் முயற்சி செய்வதாகவும் கூறி, கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் தன் சுற்றுமடலை நிறைவு செய்துள்ளார்.

24 March 2021, 15:53