தேடுதல்

'ஒரு கத்தோலிக்கருக்கு ஒரு மரம்' - பங்களாதேஷ் தலத்திருவை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய Laudato si’ திருமடலுக்கு பதிலிறுக்கும் வண்ணம், பங்களாதேஷ் தலத்திருவை, மரம் நடும் முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய 'இறைவா உமக்கே புகழ்' (Laudato si’) திருமடலுக்கு பதிலிறுக்கும் வண்ணம், பங்களாதேஷ் தலத்திருவை, மரம் நடும் முயற்சியொன்றை மேற்கொண்டுள்ளது.

2015ம் ஆண்டு வெளியான Laudato si’ திருமடலின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, பங்களாதேஷ் நாட்டில் வாழும் கத்தோலிக்கர்கள் சார்பில், 'ஒருவருக்கு ஒரு மரம்' என்ற கணக்கில், 4,00,000 மரங்கள் நடப்படும் என்று, டாக்கா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், கர்தினால் பாட்ரிக் டி'ரொசாரியோ அவர்கள் கூறினார்.

படைப்பவர், படைப்பு, மனித இனம் ஆகிய மூன்றுக்கும் உள்ள தொடர்பினை உணர்த்தும்வண்ணம், இந்த மரம் நடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள் கூறினார்.

2021ம் ஆண்டில், பங்களாதேஷ் நாட்டை உருவாக்கிய, ஷேக் முஜிபுர் இரஹ்மான் அவர்கள் பிறந்ததன் 100ம் ஆண்டு நினைவையும், பங்களாதேஷ் நாடு விடுதலையடைந்த 50ம் ஆண்டு நினைவையும் சிறப்பிக்க, மரம் நடும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள் எடுத்துரைத்தார்.

பங்களாதேஷ் நாட்டில் உள்ள 8 மறைமாவட்டங்களுக்கு உரிய வளாகங்கள், நிலங்கள் ஆகியவற்றில் மரங்களை நடும் முயற்சிகள் நடைபெறும் என்றும், இதைத்தொடர்ந்து, கத்தோலிக்கர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் வெளிப்பாடாக இன்னும் பிற இடங்களில் மரங்கள் நடும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும், கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள் எடுத்துரைத்தார்.

பங்களாதேஷ் ஆயர்கள் மரம் நடுதல்
பங்களாதேஷ் ஆயர்கள் மரம் நடுதல்

மாணவச் சமுதாயம் பழ மரங்களை நடும்படி உற்சாகப்படுத்திய கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், நீடித்த பயனளிக்கும் தேக்கு மரங்களை மக்கள் நடவேண்டும் என்ற சிறப்பான பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

மழையை வருவிக்கும் மரங்கள், மண் அரிப்பை தடுக்கவும் வழிவகுக்கின்றன என்று கூறிய கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், சுற்றுச்சூழலின் சீரழிவைத் தடுக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருமடல் வழியே விடுத்துள்ள அழைப்பை அனைவரும் ஏற்கும் முக்கிய காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.

1920ம் ஆண்டு பிறந்த முஜிபுர் இரஹ்மான் அவர்களது பிறப்பின் முதல் நூற்றாண்டு இவ்வாண்டு சிறப்பிக்கப்படுகிறது. அத்துடன், 1971ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் நாடு விடுதலையடைந்ததன் 50ம் ஆண்டு கொண்டாட்டங்கள், இவ்வாண்டு மார்ச் 26ம் தேதி முதல் 2022ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2021, 14:54