தேடுதல்

Vatican News
மியான்மாரில் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் மியான்மாரில் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் 

மியான்மாரில் அமைதி நிலவ ஆசிய ஆயர்கள்

மியான்மாரில் நிலைமை மோசமாகிக்கொண்டே வரும் இவ்வேளையில், இவ்விவகாரம் குறித்து, உலகளாவிய சமுதாயம் அக்கறை காட்டவேண்டும் – ஐ.நா. சிறப்புத் தூதர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் இடம்பெறும் வன்முறையை முடிவுக்குக் கொணருமாறு அந்நாட்டினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவரும் அந்நாட்டுத் திருஅவை, மற்றும், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்களுடன் தங்களின் தோழமையை வெளிப்படுத்தியுள்ளனர், ஆசியத் திருஅவைத் தலைவர்கள்.

ஆசியாவின் 12 கர்தினால்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மாரில் அமைதி மற்றும், ஒப்புரவை நிலைபெறச் செய்யுமாறு, அந்நாட்டின் இராணுவம், அரசியல்வாதிகள், போராட்டதாரர்கள், சமயத்தலைவர்கள், மற்றும், திருஅவைக்கு உருக்கமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் முயற்சியால், “அமைதி, அமைதி, அமைதி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில், அமைதி இயலக்கூடியதே, மற்றும், அது தேவையானதே என்று கூறப்பட்டுள்ளது.

மியான்மாரில், கடந்த பிப்ரவரி முதல் தேதி இராணுவம், ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தி, சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி உட்பட பல அரசியல் தலைவர்களை கைதுசெய்தது. இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும், மற்றும், நாட்டில் மக்களாட்சி நிலைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடு முழுவதும், அமைதியான முறையில், எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த போராட்டதாரர்கள் மீது இராணுவம் நடத்திய வன்முறையில் இதுவரை 270க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். (AsiaNews)

இதற்கிடையே, மியான்மாரில் மனித உரிமைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும், ஐ.நா.வின் சிறப்பு தூதர் Tom Andrews அவர்கள், மியான்மாரில் நிலைமை மோசமாகிக்கொண்டே வருகின்றது என்று குறிப்பிட்டு, இவ்விவகாரம் குறித்து, உலகளாவிய சமுதாயம் அவசர கூட்டம் ஒன்றை கூட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மியான்மாரில், ஏறத்தாழ பத்து இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று ஐ.நா. கூறியுள்ளது. (UN)

26 March 2021, 15:22