தேடுதல்

Vatican News
உலக மகளிர் தினமன்று போர்த்துக்கல்லில் உலக மகளிர் தினமன்று போர்த்துக்கல்லில் 

மகிழ்வின் மந்திரம் : ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிநிகர் மாண்பு

குடும்பத்திற்குள் வன்முறைகளும், பலவிதமான அடிமை முறைகளும்; ஆணாதிக்க சக்தியை வெளிப்படுத்துவதாக எண்ணும், கோழைத்தனத்தின் வெளிப்பாடுகளாக உள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 50 முதல், 57ம் பத்தி வரை, இன்றைய குடும்பங்கள் சந்திக்கும்  பல்வேறு சவால்கள் குறித்து விவரிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 53ம் பத்தியில், திருமணத்தின் உண்மையான அர்த்தம் கண்டுணரப்பட தடையாக இருக்கும் நிலைகள் குறித்து விவரித்ததைத் தொடர்ந்து, 54ம் பத்தியில், சரிநிகரற்ற நிலையில், சம உரிமைகள் வழங்கப்படாமல், பல சமுதாயங்களில் பெண்கள் நடத்தப்படுவது குறித்து தன் கருத்துக்களை இவ்வாறுப் பகிர்ந்துள்ளார்.

பெண்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதிலும், பொதுவாழ்வில் அவர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதிலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டுவருகின்ற போதிலும், இன்னும் பல நாடுகளில் இவை குறித்த விடயங்களில், நிறைய ஆற்றவேண்டியுள்ளது. ஏற்றுகொள்ளப்பட முடியாத சில பழக்கமுறைகள், முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியுள்ளது.

ஆணாதிக்க சக்தியை வெளிப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, உண்மையில் கோழைத்தனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கும், குடும்ப வன்முறைகள், பலவிதமான அடிமை முறைகள், என பெண்கள் அனுபவித்துவரும் வெட்கத்துக்குரிய முறைகேடுகள் குறித்து, குறிப்பாக, எண்ணிப்பார்க்கிறேன். வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் திருமணங்களில் பெண்கள் அனுபவிக்கும் வன்முறைகள், மணவாழ்வின் ஒன்றிப்புத்தன்மைக்கு எதிராகச் செல்வதாக உள்ளது. சில கலாச்சாரங்களில், பெண்களின் பாலின உறுப்புக்கள் சிதைக்கப்படுவது, மற்றும், மாண்புடன் கூடிய வேலைகள் அவர்களுக்கு கிடைக்காமல் இருப்பது, வாழ்வின் முக்கிய தீர்மானங்களை எடுப்பதில் அவர்களுக்குப் பங்களிக்கப்படாமை, போன்றவைகள் குறித்தும் எண்ணிப்பார்க்கிறேன். பெண்கள் தாழ்வானவர்கள் என எண்ணி நடத்திய ஆணாதிக்க கலாச்சாரங்களின் சுமை, வரலாற்றில் அதிகமாகக் காணப்படுகின்றது. அதேவேளை, நாம் வாழும் இக்காலத்திலும், வாடகைத் தாய்களின் பயன்பாடு, மற்றும், சமூகத் தொடர்புச் சாதனங்களில் பெண்களின் உடல், சுரண்டலுக்கும் வணிகமயமாக்கலுக்கும் உள்ளாக்கப்படுவதை, நாம் கண்டும் காணாமல் சென்றுவிடமுடியாது.

இன்றைய பல்வேறு பிரச்னைகளுக்கு, பெண் விடுதலை என்ற கருத்தே காரணம் என சிலர் எண்ணுகின்றனர். இந்த வாதம் முற்றிலும் உண்மையற்றது, மற்றும், ஆணாதிக்க மனப்பான்மையின் ஒருவித வெளிப்பாடு. ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிநிகர் மாண்பு உள்ளது என்பதை மதித்துச் செயல்படுத்தும்போது, பழைய பாகுபாட்டு நிலைகள் மறைவது குறித்தும், தம்பதியரில் ஒருவருக்கொருவர் மதித்து ஏற்கும் நிலை வளர்வது குறித்தும் நாம் மகிழ முடியும். ஒருசில பெண்ணிய வடிவங்களை, நிறைவற்றதாக நாம் கருதினாலும், பெண்களின் மாண்பையும் உரிமைகளையும் தெளிவாக அங்கீகரிப்பதற்கு, ஆவியானவர்  செயல்படுகிறார் என்பதை, பெண்கள் இயக்கத்தில் நாம் கண்டுணர வேண்டும். (அன்பின் மகிழ்வு 54)

12 March 2021, 14:55