தேடுதல்

வயது முதிர்ந்தோர் மீது பரிவு காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் வயது முதிர்ந்தோர் மீது பரிவு காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் 

மகிழ்வின் மந்திரம் : வயது முதிர்ந்தோர் – ஆசீரா, சுமையா?

பெரும்பாலான குடும்பங்கள், முதியோர் மீது அதிக மரியாதை கொண்டுள்ளன. அவர்களை ஓர் ஆசீராகக் கருதி, அன்பால் சூழ்ந்துகொள்கின்றன. (அன்பின் மகிழ்வு 48)

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான்

"தாத்தா பாட்டிகள் மற்றும், முதியோருக்கென ஓர் உலக நாளை நிறுவ நான் முடிவெடுத்துள்ளேன்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 31, ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார். ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 26ம் தேதி, அன்னை மரியாவின் பெற்றோர்கள், அதாவது, இயேசுவின் தாத்தா பாட்டியான, புனிதர்கள் சுவக்கின், அன்னா திருநாள் சிறப்பிக்கப்படுவதை மனதில் கொண்டு, அந்த நாளை நெருங்கிவரும் ஞாயிறான, ஜூலை மாதம் 4ம் ஞாயிறன்று, 'தாத்தா பாட்டிகள் மற்றும், முதியோர் உலக நாள்' சிறப்பிக்கப்படும் என்று திருத்தந்தை கூறினார்.

முதியோர் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட மதிப்பு, மற்றும் அக்கறையை நாம் அறிவோம். குடும்பங்களை மையப்படுத்தி அவர் உருவாக்கிய, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 48வது பத்தியில், குடும்பங்களில் உள்ள முதியோரின் நிலையைப்பற்றி சிந்திக்கிறார்:

பெரும்பாலான குடும்பங்கள், முதியோர் மீது அதிக மரியாதை கொண்டுள்ளன. அவர்களை ஓர் ஆசீராகக் கருதி, அன்பால் சூழ்ந்துகொள்கின்றன. ஆன்மீக மற்றும் சமுதாய வழிகளில், முதியோருக்குப் பணியாற்றும் சங்கங்கள், மற்றும், குடும்ப இயக்கங்கள் ஆகியவை பாராட்டுக்குரியன.

மிக அதிகமாகத் தொழில்மயமாக்கப்பட்டுள்ள சமுதாயங்களில், வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை கூடுதலாகவும், பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதால், முதியோரை ஒரு சுமையாகக் கருத வாய்ப்புண்டு. அவர்களுக்குத் தேவைப்படும் சிறப்பான பராமரிப்பு, அவரது குடும்பத்தில் வாழும் அன்பு உறவுகளுக்கு, நெருக்கடியை உருவாக்குகிறது.

மரணத்தைப் பற்றிய எண்ணங்களையும், இறந்துகொண்டிருப்போரைப் பற்றிய எண்ணங்களையும் நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இன்றைய சமுதாயத்தில், வாழ்வின் இறுதிக்கட்டத்தில், பரிவும், அக்கறையும் காட்டுவது, அதிகமாகத் தேவைப்படுகிறது. வலுவற்ற நிலையில், பிறரைச் சார்ந்திருக்கும் முதியோர், பொருளாதாரக் காரணங்களுக்காக, முறைகேடாக நடத்தப்படுகின்றனர்.

இறுதி நிலையை நெருங்கிவிட்ட ஒருவருக்கு, நிறைவான உணர்வையும், ஆண்டவரின் உயிர்ப்பு மறையுண்மையில் பங்கேற்பையும் வழங்கமுடியும் என்பதை, பெரும்பாலான குடும்பங்கள் நமக்குக் காட்டுகின்றன. திருஅவை நிறுவனங்களில், பெரும் எண்ணிக்கையில், முதியோர் பராமரிக்கப்படுகின்றனர். இந்நிறுவனங்களில், அவர்கள், குடும்பச் சூழலுடன் அமைதியாக வாழமுடிகிறது.

கருணைக்கொலை, மற்றும், உதவி செய்யப்பட்ட தற்கொலை ஆகியவை, உலகெங்கும், குடும்பங்களுக்கு, பெரும் அச்சுறுத்தல்களாக அமைந்துள்ளன. பல நாடுகளில், இவை, சட்டமயமாக்கப்பட்டுள்ளன. இவற்றை மிக வன்மையாக எதிர்க்கும் திருஅவை, முதியோரையும், நோயுற்றோரையும் பராமரிக்கும் குடும்பங்களுக்கு உதவவேண்டியத் தேவையை உணர்ந்துள்ளது. (அன்பின் மகிழ்வு 48)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2021, 15:02