தேடுதல்

திருத்தந்தையை சந்தித்த ஒரு குடும்பம் திருத்தந்தையை சந்தித்த ஒரு குடும்பம் 

மகிழ்வின் மந்திரம்: இயேசுவின் வாழ்வு காட்டும் குடும்ப வாழ்வு

நாடு கடத்தப்பட்டவர்களாக தன் மக்கள் வாழ்ந்து அனுபவித்ததில் பங்கு கொள்ளும்படியாக, இயேசுவும் எகிப்துக்கு தப்பியோடியதை தியானிக்க வேண்டியுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2016ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' (Amoris Laetitia) திருத்தூது அறிவுரை மடலில், “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” என்ற தலைப்பில் துவங்கும் மூன்றாவது பிரிவின் 65வது பத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் இதோ....

நாசரேத்து என்ற ஊரில் வாழ்ந்த ஒரு மனித குடும்பத்திற்குள் வார்த்தை மனுவுருவானார் என்ற புத்தம் புதிய நிலை, உலக வரலாற்றையே மாற்றியமைத்தது. இயேசுவின் பிறப்பு, அன்னைமரியா வானதூதரின் முன்னறிவிப்பின்போது ‘ஆகட்டும்’ என சொல்லியது, வார்த்தையானவர் அன்னைமரியாவின் வயிற்றில் உருவெடுத்தது, இயேசுவுக்கு பெயரிட்டதுடன், அன்னைமரியாவை பாதுகாத்த புனித யோசேப்பின் 'ஆம்' என்ற வார்த்தை, என்ற மறையுண்மைக்குள் நாம் நுழைய வேண்டியுள்ளது. மாட்டைக் குடிலில் இயேசுவைக் கண்ட இடையர்களின் மகிழ்வு, மூன்று ஞானிகள் வந்து வணங்கியது, நாடு கடத்தப்பட்டவர்களாக தன் மக்கள் வாழ்ந்து பல்வேறு துயர்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்ததில் பங்குகொள்ளும்படியாக இயேசு எகிப்துக்கு கைக்குழந்தையாய் தப்பியோடியது, ஆகியவைகளை நாம் ஆழமாக தியானிக்க வேண்டியுள்ளது. செக்கரியாவின் மத ரீதியான எதிர்பார்ப்பு, மற்றும் திருமுழுக்கு யோவானின் பிறப்பில் அவரின் மகிழ்வு, வயதில் முதிர்ந்த சிமியோனுக்கும் அன்னாவுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறியது, சிறுவன் இயேசுவின் அறிவுத்திறனைக் கண்டு எருசலேம் கோவிலில் போதகர்கள் வியப்பில் ஆழ்ந்தது, ஆகியவைகளை நாம் அழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும், இயேசு வெளியுலகுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், தன் கைகளாலேயே உழைத்து, பாரம்பரிய செபங்களை செபித்து, தன் மக்களின் விசுவாச வெளிப்பாடுகளில் பங்குபெற்று, இறையரசின் மறையுண்மையில் கனிதரும் வரை வாழ்ந்தது குறித்தும் நாம் அவரது வாழ்வின் உள் சென்று நோக்க வேண்டியுள்ளது. இதுவே, கிறிஸ்து பிறப்பின் மறையுண்மை, நாசரேத்தின் இரகசியம், மற்றும் குடும்ப வாழ்வின் அழகை கசிந்து வெளிக்காட்டுகிறது. இதுவே, அசிசியின் புனித பிரான்சிஸ், குழந்தை திரேசா, Charles de Foucauld ஆகியோர்களை கவர்ந்து ஈர்த்ததுடன், கிறிஸ்தவ குடும்பங்களை நம்பிக்கையிலும் மகிழ்விலும் தொடர்ந்து நிறைத்துவருகிறது. (அன்பின் மகிழ்வு -65)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 March 2021, 14:43