தேடுதல்

Vatican News
குடியிருப்பு எரிந்ததால் துயரத்தில் இளம் தாய் குடியிருப்பு எரிந்ததால் துயரத்தில் இளம் தாய்  (ANSA)

மகிழ்வின் மந்திரம் : ஏழைக் குடும்பங்களின் நிலை

சில கோட்பாட்டு விதிகள் கொண்டு தீர்ப்பிடாமல், மற்றவர்களைப் புரிந்துகொண்டு, ஒரு தாய்க்குரிய அக்கறையுடன் இறைவனின் கருணையை அவர்களுக்குக் காட்டவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலில், சமுதாயம், கலாச்சாரம், பொருளாதாரம், ஆன்மீகம் என்ற பல தளங்களில், குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு உண்மை நிலைகளை, குறிப்பாக, அவை எதிர்கொள்ளும் போராட்டங்களை, "இன்றையக் குடும்பத்தின் உண்மை நிலை" என்ற தலைப்பின் கீழ் வரிசைப்படுத்தியுள்ளார். இவற்றில், திருமணமாகாத இருவருக்குப் பிறக்கும் குழந்தைகள் (எண் 45), குடிபெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் குடும்பங்கள் (எண் 46), தனிப்பட்ட உதவிகள் தேவைப்படும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் (எண் 47), குடும்பங்களில் உள்ள முதியோரின் நிலை (எண் 48), என்ற நான்கு கருத்துக்களைப் பற்றி 45 முதல் 48 முடிய உள்ள நான்கு பத்திகளில் அலசும் திருத்தந்தை, 49வது பத்தியில், மிகவும் ஏழ்மை நிலையில் வாடும் குடும்பங்களின் நிலையைப்பற்றி பேசுகிறார்:

மிகவும் ஏழ்மை நிலையிலும், போதிய வசதிகளின்றியும் வாழும் குடும்பங்கள் குறித்து எடுத்துரைக்க விரும்புகின்றேன். ஏழைக் குடுமபங்கள் சந்திக்கும் துயர்கள் எண்ணற்றவை. எடுத்துக்காட்டாக, கணவரின்றி வாழும் ஒரு தாய், தன் குழந்தையை வளர்த்தெடுக்கும்போது, பலவேளைகளில், குழந்தையை, வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இத்தகைய ஒரு சூழலில், அக்குழந்தை, பல்வேறு வழிகளில், ஆபத்தையும், தன் வளர்ச்சிக்கான தடைகளையும் சந்திக்க நேர்கிறது. இந்நேரங்களில், தாய் திருஅவை, அவர்களை, சில கோட்பாட்டு விதிகள் கொண்டு தீர்ப்பிடாமல், அவர்களைப் புரிந்துகொண்டு, ஒரு தாய்க்குரிய அக்கறையுடன், இறைவனின் கருணையை அவர்களுக்குக் காட்டவேண்டும். இறை இரக்கத்தின் குணப்படுத்தும் சக்தியையும், நற்செய்தியின் ஒளியையும் வழங்குவதை விடுத்து, அறிவுரைகள் வாழங்குவதிலேயே முழுக்கவனம் செலுத்துவது என்பது, நற்செய்தி மதிப்பீடுகளை, உயிரற்ற கற்களாக பயன்படுத்தி, மற்றவர்களை நோக்கி எறிவதற்குச் சமம். (அன்பின் மகிழ்வு 49)

03 March 2021, 15:19