தேடுதல்

Vatican News
மத நம்பிக்கைக்காக துயர்களை அனுபவித்த பாகிஸ்தான் குடும்பத்துடன் திருத்தந்தை மத நம்பிக்கைக்காக துயர்களை அனுபவித்த பாகிஸ்தான் குடும்பத்துடன் திருத்தந்தை 

மகிழ்வின் மந்திரம் : குடும்பப் பிரச்சனைகளும் அழைப்புக்களே...

பலவேளைகளில் தவறி விழுந்தாலும், பல குடும்பங்கள், அன்பில் வாழ்ந்து, தங்கள் அழைப்பை நிறைவேற்றி, முன்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதற்கு இறைவனுக்கு நன்றி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், “குடும்பங்களின் அனுபவங்களும் சவால்களும்” என்ற தலைப்பின்கீழ், இரண்டாவது துணைத் தலைப்பாக, “சில சவால்கள்” (50-57) என்பதை எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதி பத்தியான 57ல் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள்  இதோ....

ஒரு முழுமையான, அப்பழுக்கற்ற வாழ்வை வாழ்வதிலிருந்து தூரமாக இருந்தாலும், பலவேளைகளில் தவறி விழுந்தாலும், பல குடும்பங்கள், அன்பில் வாழ்ந்து, தங்கள் அழைப்பை நிறைவேற்றி, முன்னோக்கிச் சென்றுகொண்டுதானிருக்கின்றன என்பதைக்குறித்து இறைவனுக்கு நன்றிகூறுகிறேன். மிகச் சரியானதொரு குடும்பம் என்பதற்கு எவ்வித வரையறைக் கோடுகளும் இல்லை. பல்வேறு உண்மை நிலைகளால் பின்னப்பட்டு, மகிழ்வுகளும், நம்பிக்கைகளும், பிரச்சனைகளும் நிறைந்து காணப்படுவதே, குடும்பம். நம்மைப் பொருத்தவரையில், நாம் கவலைப்படுவது, அவை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து. சவால்கள் குறித்த கவலைகளில் நம் நேரத்தை வீணாக்காமல், புதிய மறைப்பணி வடிவங்களைக் கண்டுகொள்ள வேண்டும். ஒவ்வொரு சூழலிலும் திருஅவையானது, உண்மை மற்றும் நம்பிக்கையின் வார்த்தைகளை வழங்கவேண்டிய  தேவையை உணர்ந்துள்ளது. திருமணம் மற்றும் கிறிஸ்தவ குடும்பம் குறித்த உயரிய மதிப்பீடுகள், மனித இருப்பின் ஏக்கங்களோடு தொடர்புடையவை. பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, நாம் நம் நம்பிக்கைகளுக்கு உயிரூட்டவும், உருமாற்றும் செயல்பாடுகளாக விளங்கவும், அப்பிரச்சனைகள் நமக்கு அழைப்பு விடுப்பதைக் காண்போம்.

17 March 2021, 15:28