தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசீர்வதித்த திருமணம் (18/07/2018) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசீர்வதித்த திருமணம் (18/07/2018)  (Archivio Personale di Letícia Schafer)

மகிழ்வின் மந்திரம்: திருமணம், கடவுளின் அருள்கொடை

குடும்பத்தின் நற்செய்தியை நடைமுறைப்படுத்தி, அதை வழங்கும் வழிகளைத் தேடும் நம்மோடு ஆண்டவர் இருக்கிறார் (அன்பின் மகிழ்வு 60)

மேரி தெரேசா: வத்திக்கான்    

"அன்பின் மகிழ்வு" திருத்தூது அறிவுரை மடலின் மூன்றாவது பிரிவு, “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” (58-88) என்ற தலைப்பில் துவங்குகிறது. ஆறு துணை தலைப்புக்களைக் கொண்டிருக்கும் இந்தப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய முன்னுரையின் (58, 59, 60) 60வது பத்தியில், நம் நம்பிக்கையால் வழங்கப்பட்டுள்ள ஒளி பற்றி, உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் சொல்ல விழைவதையும், இங்கே நான் குறிப்பிடுவேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். இயேசு, இறையாட்சியின் விழுமியங்களாக, போதித்த உண்மை, பொறுமை, மற்றும், இரக்கம் ஆகியவற்றை, அவர் சந்தித்த பெண்களும் ஆண்களும் வாழ்வதற்கு முயற்சிக்கும்போது, அவர்களோடு உடன்பயணித்து, அவர்களை அன்போடும், கனிவோடும் நோக்கிப் பார்த்தார். அதேபோல், இன்றும், குடும்பத்தின் நற்செய்தியை நடைமுறைப்படுத்தி, அதை வழங்கும் வழிகளைத் தேடும் நம்மோடும் ஆண்டவர் இருக்கிறார் (அன்பின் மகிழ்வு 60). இவ்வாறு இந்த மடலின் 60வது பத்தியை நிறைவுசெய்துள்ள திருத்தந்தை, “இயேசு, கடவுளின் திட்டத்தை மீண்டும் நிலைநிறுத்துகிறார், மற்றும், நிறைவேற்றுகிறார்” (61-66) என்று தொடங்கும் துணை தலைப்பின் 61வது பத்தியில், திருமணம், கடவுளிடமிருந்து பெறும் அருள்கொடை என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். 

திருமணத்தை தீமை என்று புறக்கணிப்பவர்களுக்கு எதிராக, புதிய ஏற்பாடு இவ்வாறு போதிக்கின்றது. “கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே. நன்றி உணர்வுடன் ஏற்றுக் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை” (1திமொ.4:4). திருமணம், ஆண்டவர் தரும் “தனிப்பட்ட அருள்கொடை” (1கொரி.7:7). அதேநேரம், திருமணம் பற்றிய இத்தகைய நேர்மறையான புரிந்துணர்வால், கடவுளின் இந்த அருள்கொடையை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் பற்றி, புதிய ஏற்பாடு அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திக் கூறுகிறது. “திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும்” (எபி.13:4).  இறைவனின் இந்த அருள்கொடையில் பாலியலும் உள்ளடங்கியுள்ளது. “மணவாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கொருவர் மறுக்காதீர்கள்” (1கொரி.7:5). (அன்பின் மகிழ்வு 61)

22 March 2021, 14:39