தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பயணிகளுக்கு நற்செய்தியை வழங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பயணிகளுக்கு நற்செய்தியை வழங்குகிறார் 

மகிழ்வின் மந்திரம்: நற்செய்தி அறிவித்தலின் முக்கியத்துவம்

நற்செய்தியைவிட, மிக உறுதியானதாக, ஆழமானதாக, பாதுகாப்பானதாக, அர்த்தமுள்ளதாக, மற்றும், ஞானமுள்ளதாக வேறெதுவுமே இல்லை (அன்பின் மகிழ்வு 58)

மேரி தெரேசா: வத்திக்கான் 

மார்ச் 19, இவ்வெள்ளியன்று “அன்பின் மகிழ்வு குடும்பம்” (Amoris Laetitia Family) என்ற ஆண்டு துவங்குகின்றது. 2016ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்தை மையப்படுத்தி வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் ஐந்தாம் ஆண்டு நிறைவாக, “அன்பின் மகிழ்வு குடும்ப”ஆண்டு சிறப்பிக்கப்படுகிறது. இவ்வெள்ளியன்று துவங்கும் இந்த சிறப்பு ஆண்டு, 2022ம் ஆண்டு, ஜூன் மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது. இந்த குடும்ப ஆண்டு கத்தோலிக்கத் திருஅவையில், 'அன்பின் மகிழ்வு' மடலை அடிப்படையாகக்கொண்டு, நடைபெறுகிறது. இந்த குடும்ப ஆண்டையும், 'அன்பின் மகிழ்வு' (Amoris Laetitia) மடலையும் மையப்படுத்தி, வத்திக்கான் வானொலியிலும், 'மகிழ்வின் மந்திரம்' என்ற தலைப்பில், முதல் நிமிட சிந்தனை ஒன்றை வழங்கிவருகிறோம். 325 பத்திகள் கொண்ட இந்த திருத்தூது அறிவுரை மடலின், முதல் இரண்டு பிரிவுகளில் (“இறைவார்த்தையின் ஒளியில்”, “குடும்பங்களின் அனுபவங்களும் சவால்களும்”) 57 பத்திகள் வரை வழங்கியுள்ள இந்நிகழ்ச்சியில், இன்று ஆறு துணை தலைப்புக்களுடன் அமைந்துள்ள மூன்றாவது பிரிவைத் (58-88) துவக்குகின்றோம். “இயேசுவை நோக்கிப் பார்த்தல்: குடும்பத்தின் அழைப்பு” என்ற தலைப்பில் துவங்கும் மூன்றாவது பிரிவின் 58வது பத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் இதோ....

குடும்பங்களில், மற்றும், குடும்பங்கள் மத்தியில், நற்செய்தியின் கருத்துக்கள் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும். நற்செய்தியின் மையமாக விளங்குவது அறிவித்தலாகும். இந்த நற்செய்தி, மிகவும் அழகானது, மிகவும் சிறப்பானது, மிகவும் உள்ளத்தைத் தொடுவது, மற்றும், அதேநேரம், மிகவும் தேவையானதும் ஆகும். இந்தச் செய்தி, நற்செய்தி அறிவிப்புப் பணிகள் அனைத்தின் மையத்தை ஆட்கொண்டிருக்கவேண்டும். இதுவே, முதலும், மிக முக்கியமுமான அறிவித்தலாகும். அந்த அறிவிப்பை, பல்வேறு வழிகளில், மீண்டும் மீண்டும் நாம் கேட்கவேண்டும். அச்செய்தி, ஏதாவது ஒரு வடிவில் எப்போதும் அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். உண்மையில், அந்த நற்செய்தியைவிட, மிக உறுதியானதாக, ஆழமானதாக, பாதுகாப்பானதாக, அர்த்தமுள்ளதாக, மற்றும், ஞானமுள்ளதாக வேறெதுவுமே கிடையாது. கிறிஸ்தவ பயிற்சிகள் அனைத்தும், இந்த நற்செய்தி அறிவித்தலில் மிக ஆழமாகச் செல்வதை உள்ளடக்கியதாக அமையவேண்டும் (அன்பின் மகிழ்வு 58).

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2021, 14:56