தேடுதல்

Vatican News
டன்சானியா நாட்டு ஆயர்கள் டன்சானியா நாட்டு ஆயர்கள் 

நாட்டின் நலனை மனதில்கொண்டு செயல்பட அழைப்பு

பெருந்தொற்று தொடர்புடைய கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பாங்காற்றவேண்டும் என அழைக்கும் தவக்காலச் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அனைத்து மக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று தொடர்புடைய கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பாங்காற்றவேண்டும் என தங்கள் தவக்காலச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளனர் டன்சானியா நாட்டு ஆயர்கள்.

உலகை ஆட்டிப்படைத்து வரும் இந்த பெருந்தொற்று நோய் குறித்த உண்மை நிலைகளை ஏற்றுக்கொள்வதுடன், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்குரிய வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டிய கட்டாயம் குறித்தும் தங்கள் தவக்காலச் செய்தியில் விண்ணப்பித்துள்ள ஆயர்கள், நாட்டின் நலனை மனதில்கொண்டு ஒவ்வொருவரும், தங்களையும் பிறரையும் காப்பாற்றவேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர்.

டன்சானியா ஆயர்கள் சார்பில், ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Gervas Nyaisonga அவர்களால் கையெழுத்திடப்பட்டுள்ள இச்செய்தி, மக்கள் அச்சத்திற்கு அடிமையாக வேண்டாம் எனவும் விண்ணப்பித்துள்ளது.

மக்களை பலவீனப்படுத்தும் ஆயுதமாக செயல்படும் இந்த பெருந்தொற்று குறித்து அச்சம் கொள்ளாமல், இதிலிருந்து நம்மை காப்பாற்றும்படி இறைவனை நோக்கி இறைவேண்டல் செய்வோம் எனவும் ஆயர்கள் தங்கள் செய்தியில் விண்ணப்பித்துள்ளனர்.

ஏறத்தாழ 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 20 பேர் இப்பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், இதுவரை, அந்நோயால் அதிக அளவில் பாதிப்படையாமல் இருந்து வந்த டன்சானியா நாடு, அண்மைக் காலங்களில், தென்னாபிரிக்காவில் உருவான, உருமாறிய கோவிட் கிருமியால் தற்போது நலப்பிரச்சனையை சந்தித்துவருவது குறித்து டன்சானியா ஆயர்கள், தங்கள் ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.

23 February 2021, 15:32