தேடுதல்

Vatican News
ஆபிரகாமும், ஈசாக்கும், எரிபலி நிறைவேற்ற மலையேறிச் செல்லுதல் ஆபிரகாமும், ஈசாக்கும், எரிபலி நிறைவேற்ற மலையேறிச் செல்லுதல் 

தவக்காலம் 2ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

அக்காலத்தில், கடவுள் ஆபிரகாமை நோக்கி, “நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை எரிபலியாக நீ பலியிடவேண்டும்” என்றார் - தொடக்கநூல் 22 : 1-2

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தவக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

உலகில் வடதுருவம், தென்துருவம் என்று இரு துருவங்கள் உள்ளன என்பதை புவியியலில் படித்திருக்கிறோம். உலகின் மூன்றாவது துருவம் என்று கருதப்படுவது, இந்தியாவின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலைச்சிகரம். கடல் மட்டத்திலிருந்து இச்சிகரம் 8,848 மீட்டர், (29,029 அடி) உயரமானது.

உலகின் வடதுருவத்தை 1909ம் ஆண்டிலும், தென்துருவத்தை 1911ம் ஆண்டிலும் மனிதர்கள் சென்றடைந்தனர். ஆனால், மூன்றாவது துருவமான எவரெஸ்ட் சிகரத்தை அடைய கூடுதலாக 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1953ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி, நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலரி (Edmund Hillary) அவர்களும், நேபாள இந்தியரான டென்சிங் நோர்கே (Tenzing Norgay) அவர்களும், இந்தச் சாதனையை முதல்முறை செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, இதுவரை, 5000த்தி்ற்கும் அதிகமானோர் இச்சிகரத்தை எட்டிப்பிடித்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. மலைச் சிகரங்கள் மீது மனிதர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பு, தணியாத ஓர் ஈர்ப்பு.

மலைச்சிகரங்கள்... உடலிலும் மனதிலும் மாற்றங்களை உருவாக்கும் அற்புத இடங்கள். மலையுச்சியில் நிலவும் அமைதி, அல்லது, இயற்கையின் அழகிய ஒலி, மலைச்சிகரங்களில் வீசும் தூய்மையான காற்று, அங்கு பரவியிருக்கும் குளிர் ஆகியவை, நம்மில் புத்துணர்வைத் தூண்டும்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நம்மில் பலர், குறிப்பாக, நகரங்களில் வாழ்வோர், வீட்டைவிட்டு வெளியேறவோ, வெளிக்காற்றைச் சுவாசிக்கவோ பயந்து, முகக்கவசங்களோடு வாழ்ந்துவருகிறோம். இவ்வேளையில், மலைச்சிகரங்களில் நாம் அனுபவிக்கக்கூடிய அற்புதங்களை, மனத்தளவிலாவது எண்ணிப்பார்ப்பது, உதவியாக இருக்கும்.

இறைவனின் இருப்பிடங்களாக, பல மதங்களிலும், கலாச்சாரங்களிலும் கருதப்படும் மலைகள், இந்த ஞாயிறு வழிபாட்டின் முக்கிய அடையாளமாக நம்மை வந்தடைந்துள்ளன. மலைச்சிகரங்களை அடைய ஒருவர் மேற்கொள்ள வேண்டிய தியாகங்கள், மலையுச்சியில் நிகழும் அற்புதங்கள், அந்த அற்புதங்களிலேயே தங்கிவிடாமல், மீண்டும் தரையிறங்கி வந்து, நாம் சந்திக்கவேண்டிய சராசரி வாழ்க்கை, என்ற கோணங்களில் சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு உதவியாக உள்ளன.

பாலை நிலத்தில் நாற்பது நாள்களாக கடுந்தவம் மேற்கொண்ட இயேசுவை, வலுவற்ற நிலையில், சென்ற ஞாயிறன்று சந்தித்தோம். இந்த ஞாயிறோ, மலையுச்சியில், அவரை, உன்னதமான ஒரு நிலையில் சந்திக்க வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் வேறுபட்ட இரு நிகழ்வுகள், இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் தரப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளில், ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கொடுமையான சோதனையில், நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம். தொடக்கநூலிலிருந்து வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தின் அறிமுக வரிகள், இதோ:

  • தொடக்கநூல் 22 : 1-2
  • அக்காலத்தில், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, “ஆபிரகாம்!” என, அவரும் “இதோ! அடியேன்” என்றார். அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிடவேண்டும்” என்றார்.

 

அக்காலத்தில், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார் என்ற அறிமுகச் சொற்களைக் கேட்கும்போது, நம் வாழ்வில் பலமுறை, நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாம் எழுப்பியுள்ள ஓர் வேதனையான கேள்வி நினைவுக்கு வருகிறது. "ஏன்தான் கடவுள் என்னை இவ்வளவு சோதிக்கிறாரோ?" என்ற வேதனை நிறைந்த கேள்வியை நாம், அவ்வப்போது, அல்லது, அடிக்கடி எழுப்பியிருக்கிறோம்.  இப்படி ஒரு கேள்வியை மற்றவர் என்னிடம் எழுப்பும்போது, ஓர் அருள்பணியாளர் என்ற முறையில், பல வேளைகளில் பதில்சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன். நான் சொல்ல முயன்ற பதில்களில், எனக்கே ஓரளவு தெளிவைத் தந்த பதில் இதுதான்: "கடவுள் யாரை அதிகம் நேசிக்கிறாரோ, அவர்களுக்கு அதிகம் சோதனைகள் தருகிறார்... விசுவாசத்தில் யார் அதிகம் வேரூன்றியிருக்கிறார்களோ, அவர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த சவால்களை அனுப்புகிறார். அந்தச் சோதனைகளை, சவால்களை வெல்வதன் வழியே, மற்றவர்களுக்கு நம்பிக்கைத் தரும் ஒரு பாடமாக அவர்கள் வாழ்வு அமையவேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்" என்ற பதிலே, எனக்கும், பிறருக்கும், ஓரளவு தெளிவைத் தந்த பதில்.

வாழ்க்கையோடு போராடும் பலரை நாம் சந்தித்திருக்கிறோம். அந்தப் போராட்டங்களில் அவர்கள் வெற்றி கண்டனரா, இல்லையா, என்பதைவிட, அவர்கள் அந்தப் போராட்டங்களை எதிர்கொண்டவேளையில் வெளிப்படுத்திய நம்பிக்கை, நமக்குப் பாடமாக அமைகின்றது. விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல எடுத்துக்காட்டான மனிதர்களின் வாழ்வில் இது நடைபெற்றுள்ளது. ஆபிரகாமில் ஆரம்பித்து, மோசே, யோபு, இறைவாக்கினர்கள், மரியா, இயேசு, சீடர்கள் என்று, பலருக்கும், 'சோதனை மேல் சோதனை' கூடிக்கொண்டே சென்றதை நாம் பார்க்கிறோம்.

ஆபிரகாமை இறைவன் சோதித்த நிகழ்வின் வழியே நாம் பயிலக்கூடிய பாடங்கள் பல உள்ளன. இறைவன் ஆபிரகாமுக்குத் தந்தது, ஒரு கொடுமையான சோதனை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த ஆபிரகாமுக்கு, ஈசாக்கு பிறந்தபோது, அவரது வயது 100 (தொ.நூல் 21:5). ஈசாக்கு வழியாக, ஆபிரகாமின் சந்ததி, வானில் உள்ள விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் என்று கூறிய அதே இறைவன், இப்போது அந்த நம்பிக்கையை வேரறுக்கும் வண்ணம், ஈசாக்கைப் பலியிடச் சொல்கிறார்.

தான் பிறந்து வளர்ந்த நாட்டைவிட்டுப் புறப்படச்சொல்லி, (தொ.நூல் 12:1) இறைவன் வழங்கிய கட்டளையில் துவங்கி, அவர் வழங்கிய கட்டளைகள் அனைத்திற்கும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பணிந்து பழகிப்போன ஆபிரகாமுக்கு, மகனைப் பலிதரவேண்டுமென இறைவன் கொடுத்த கட்டளை பேரதிர்ச்சியைத் தந்திருக்கும். இந்தக் கொடுமையை நிகழ்த்த இறைவன் ஓர் இடத்தையும் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மலை.

மலைகள் இறைவனின் இருப்பிடம்; அங்கு இறைவனைச் சந்திக்கலாம், இறைவனின் அருள்கொடைகளால் நிறைவடையலாம் என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர் ஆபிரகாம். நிறைவடைவதற்குப் பதில், தன்னிடம் உள்ளதை பறித்துகொள்வதற்கு இறைவன் தன்னை ஒரு மலைக்கு அழைக்கிறார் என்ற எண்ணம், ஆபிரகாமின் உள்ளத்தில் பெரும் போராட்டத்தை உருவாக்கியிருக்கும். இருந்தாலும் புறப்படுகிறார். அவர் புறப்பட்டுச்சென்ற அந்தப் பயணம், அணு, அணுவாக, அவரை, சித்ரவதை செய்த பயணம். இந்தப் பயணத்தை, இன்னும் சற்று ஆழமாகச் சிந்திப்பது நல்லது.

ஒரு நொடியில் உயிர் துறப்பதற்கும், மணிக்கணக்கில், அல்லது, நாள்கணக்கில், சித்ரவதை அடைந்து உயிர் துறப்பதற்கும், உள்ள வேறுபாட்டை எண்ணிப்பார்க்கலாம். அத்தகையச் சித்ரவதையை, ஆபிரகாம் அடைந்தார். தன் மகனைப் பலியிடச் சொல்லி, இறைவன் விடுத்த கட்டளையை, ஆபிரகாம், தன் வீட்டுக்கருகில், நிறைவேற்றவில்லை. அவருக்கு இறைவன் சொன்ன அந்த மலையை அடைய, அவர், மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டார். அந்த மூன்று நாட்களும் அந்தத் தந்தையின் மனம் எத்தகையச் சித்ரவதையை அடைந்திருக்கும் என்பதை நாம் கற்பனைசெய்து பார்க்கலாம்.

அவர்கள் மலையை அடைந்தபின், ஆபிரகாம், சிறுவன் ஈசாக்கின் தோள்மீது விறகுகட்டைகளை சுமத்துகிறார். சிறுவனும், அந்தக் கட்டைகளைச் சுமந்துகொண்டு மலைமீது ஏறுகிறான். போகும் வழியில்,  தந்தையிடம், "அப்பா, இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" (தொ.நூல் 22:7) என்று கேட்கிறான். கள்ளம் கபடமற்ற அக்குழந்தையின் கேள்வி, ஆபிரகாமின் நெஞ்சத்தை, ஆயிரம் வாள் கொண்டு கீறியிருக்கும். கண்களில் பொங்கியக் கண்ணீரை மறைப்பதற்கு, தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு, ஆபிரகாம், "கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" என்று, ஏதோ ஒரு பதிலை, ஒப்புக்காகச் சொல்லி, சமாளிக்கிறார்.

மகனைப் பலிதருவது என்பதே, மிக, மிக அரக்கத்தனமான கட்டளை. அந்தக் கட்டளையை ஆபிரகாம் உடனடியாக நிறைவேற்ற விடாமல், இறைவன், அவருக்கு, கூடுதலாக, ஏன் மூன்று நாள் நரக வேதனையையும் தந்தார்?

எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இது. விவிலிய விரிவுரையாளர்கள் இதற்குக் கூறும் விளக்கம் இவ்வாறு அமைந்துள்ளது: இந்நிகழ்வு, பல வழிகளில், கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. ஆபிரகாம் மேற்கொண்ட சித்ரவதைப் பயணம் மூன்று நாள்கள் நிகழ்ந்ததைப்போல, இயேசுவின் பாடுகள் மூன்று நாள்கள் தொடர்ந்தன. சிறுவன் ஈசாக்கு பலிக்குத் தேவையான கட்டைகளைச் சுமந்து, மலைமீது ஏறியதுபோல், இயேசுவும் சிலுவையைச் சுமந்து, கல்வாரி மலைமீது ஏறினார். ஈசாக்கு கேட்ட கேள்விகளுக்குப் பதில்சொல்ல இயலாமல், ஆபிரகாம் துன்புற்றார். பாடுகளின்போது, இயேசு கேட்ட கேள்விகளுக்கு, விண்ணகத் தந்தை பதில் ஏதும் தரவில்லை. இந்த நிகழ்வில், ஆபிரகாம் மூன்று நாட்கள் நரக வேதனை அடைந்ததைப் போல, தந்தையாம் இறைவனும், இயேசுவின் பாடுகளின்போது, வேதனை அடைந்தார். இப்படி பல ஒப்புமைகள் வழியே, இந்நிகழ்வு, கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது என்று, விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

மகனைப் பலிகேட்ட இறைவன், இறுதியில், ஆபிரகாமுக்கு, மலையுச்சியில், இறையனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில், சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில், இயேசுவின் தோற்றமாற்றம் என்ற இறையனுபவம் பெற்ற சீடர்களிடம், இறைவன், பலியை எதிர்பார்க்கிறார். தியாகங்களின் உச்சக்கட்டமாக இறையனுபவத்தைப் பெறுவதும், இறையனுபவத்தின் உச்சக்கட்டமாக, தியாகங்களை மேற்கொள்ள துணிவு பெறுவதும், நம்பிக்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்.

இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வின் இறுதியில், நற்செய்தியாளர் மாற்கு பதிவு செய்துள்ள வரிகள், நமக்கு ஒரு முக்கியப் பாடத்தைச் சொல்லித் தருகின்றன. இயேசுவின் தோற்றமாற்றத்தைக் கண்ட பேதுரு, தன்னிலை மறந்து, பரவசத்தில் மூழ்கினார். பேதுரு இயேசுவைப் பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார். (மாற்கு 9:5).

அதுவரை, இயேசுவை, சாதாரண மனித நிலையில் கண்டு பழகிப் போயிருந்த பேதுருவுக்கு, 'வெள்ளை வெளேரென ஒளி வீசிய' இயேசுவின் தோற்றம், பேரானந்தத்தை அளித்திருக்கவேண்டும். அந்த இயேசுவை விட்டுவிட மனமின்றி, பேதுரு, கூடாரம் அமைக்க முன்வந்தார். பேதுருவின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் மாற்கு, தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. (மாற்கு 9:6) என்ற கூற்றை இணைத்துள்ளார்.

இது நமக்கு ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கிறது. ஆழமான இறையனுபவங்கள் நம்மை நிறைக்கும் வேளையில், அந்த அனுபவங்களை அணைபோட்டுத் தடுக்கும் சுயநல எண்ணங்கள் பிறந்தால், கடவுளுக்கு ஒரு கூடாரம் அமைத்து, அவரை அங்கேயே பூட்டிவைத்து, அவரை, மற்றவர்களோடு பகிர்நதுகொள்ளாமல், நம் தனிப்பட்ட உரிமைச்சொத்தாகக் கொண்டாடும் தவறான முடிவுக்கு வந்துவிடுவோம்.

சொல்வது என்னவென்று அறியாது, பேசிய பேதுருவுக்கு மேகங்களின் வழியாக இறைவன் சொன்ன பதில்: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" (மாற்கு 9:7) என்பதே. அந்த அன்பு மகன் இயேசு என்ன கூறுவார்? “இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி, நம் பணியைத் தொடர்வோம்” என்று இயேசு கூறுவார்.

கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுள் தங்குவதற்கு, கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கடவுளை, கோவில்களில் மட்டுமே பூட்டிவைப்பதோ, அவரைக் காட்சிப்பொருளாக கண்டு மகிழ்வதோடு நின்றுவிடுவதோ தவறு. இறை அனுபவம் என்ற அற்புத உணர்வு தரும் சக்தியோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கி, சராசரி வாழ்வுக்குத் திரும்பவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், இறைவனைக் காணமுடியாமல் தவிப்பவர்களுக்கு, இறைவனைக் காட்டவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

தோற்றமாற்றம் அடைந்த இயேசு, சீடர்களை அழைத்துக்கொண்டு, மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? மக்களில் மாற்றங்களை உருவாக்க. மக்களில் மாற்றங்களைக் கொணர்வதற்கு முன், நமக்குள் மாற்றங்கள் நிகழவேண்டும். அதற்கு, தவக்காலம் தகுந்ததொரு காலம். நம்மில் மாற்றங்களைக் கொணரவிழையும் இறைவனிடம், நாம், இந்த தவக்காலத்தில் சரணடைவோம்!

27 February 2021, 14:45