தேடுதல்

தவக்காலம் - மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம் தவக்காலம் - மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம் 

தவக்காலம் முதல் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

சோகத்தை முன்னிறுத்தாமல், தவக்காலத்தை, ‘மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம்’ என்ற கோணத்தில் பார்க்க, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

தவக்காலம் முதல் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

தவக்காலத்தை ஆரம்பித்திருக்கிறோம். இந்த வழிபாட்டு காலத்திற்கு, நாம் வழங்கியுள்ள பெயர், நமது ஞாயிறு சிந்தனையைத் துவக்கிவைக்கின்றது. தமிழில் ‘தவக்காலம்’ என்று நாம் அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent அல்லது Lenten Season என்று அழைக்கிறோம்.

Lent என்ற சொல், 'lente' என்ற இலத்தீன் சொல்லுடன் தொடர்பு கொண்டுள்ளது. இலத்தீன் மொழியில், 'lente' என்றால், ‘மெதுவாக’ என்று பொருள். Lenten என்ற சொல், Lencten என்ற ஆங்கிலோ சாக்ஸன் (Anglo Saxon) சொல்லுடன் தொடர்பு கொண்டுள்ளது. இதன் பொருள் 'வசந்தகாலம்'. 'மெதுவாக', 'வசந்தகாலம்' என்ற இவ்விரு அர்த்தங்களையும் இணைக்கும்போது உருவாகும், ‘மெதுவாக வரும் வசந்தகாலம்’ என்ற சொற்றொடர், தவக்காலத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவியாக உள்ளது.

உலகின் பல நாடுகளில், மூன்று மாதங்கள் கடும் குளிர்காலம். குளிர்காலத்திற்கு முன்னர், மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, ஏறத்தாழ ஆறு, அல்லது ஏழு மாதங்கள், மரங்களும் செடிகளும், தங்கள் இலைகளை இழந்து, பொழியும் பனியில் புதைந்துபோகும். இந்த மாதங்களில், தாவர உலகைப் பார்க்கும்போது, அதில் உயிர் உள்ளதா, அது பிழைக்குமா என்ற ஐயம் மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும், சிறு துளிர்கள், கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனிப்போர்வை, சிறிது சிறிதாகக் கரையும்போது, புதைந்துபோன துளிர்கள், தலை நிமிரும். தாவர உலகம் மீண்டும் தழைத்துவரும் இக்காலத்தை, நாம் வசந்தகாலம் என்றழைக்கிறோம்.

'வசந்தம்' - கேட்பதற்கு அழகான சொல். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்குமுன், பனியின் ஆதிக்கத்தை முறியடிக்கும் போராட்டங்கள், பொறுமையாக நிகழவேண்டும். ஆறு மாதங்களாய் உயிரற்று காணப்படும் தாவர உலகில், திடீரென, ஓரிரவில், மாற்றங்கள் உருவாகி, அது பூத்துக் குலுங்குவது கிடையாது. நம் கண்ணையும், கருத்தையும், ஈர்க்காத வகையில், மிக, மிக மெதுவாக, வசந்தகாலம் வந்துசேர்கிறது. மெதுவாக, நிதானமாக, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

அடையாளங்கள், மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ‘தவக்காலம்’ என்ற சொல்லைக் கேட்டதும், பொதுவாக, சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்ற சோகமான அடையாளங்களே நமது மனதை அதிகமாக நிரப்பும். ஆனால், சோகத்தை முன்னிறுத்தாமல், தவக்காலத்தை, ‘மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம்’ என்ற கோணத்தில் பார்க்க, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார்.

மாற்றத்தை, மிகக் குறிப்பாக, மனமாற்றத்தை உருவாக்க நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு, தவக்காலம். மாற்றத்தை நமக்கு நினைவுறுத்த, தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று நாம் பயன்படுத்தும் ஓர் அடையாளம் - சாம்பல். சாம்பலைக்கொண்டு, நம் நெற்றியில் சிலுவை அடையாளம் வரையப்படுகிறது, அல்லது, சாம்பல் நம் தலைமீது தூவப்படுகிறது. இந்த சடங்கின்போது, மாற்றத்தை வலியுறுத்தும் வண்ணம், "மனம் திரும்பி நற்செய்தியை நம்புவாயாக" என்ற சொற்களோ, நம் இறுதி முடிவை நினைவுறுத்தும் வண்ணம், "நீ மண்ணாக இருக்கிறாய்; மண்ணுக்கேத் திரும்புவாய்" என்ற சொற்களோ சொல்லப்படுகின்றன.

சாம்பலை, அழிவாக, மரணமாக மட்டும் எண்ணிப்பார்க்காமல், புதிய மாற்றங்களைக் கொணரும் அடையாளமாகவும் காண்பதற்கு, நம் அனைவருக்கும் தெரிந்த 'சின்டரெல்லா' (Cinderella) என்ற பாரம்பரியக் கதை உதவியாக இருக்கும். 'சின்டரெல்லா' என்ற இந்தப் பெயர், இரு சொற்களின் இணைப்பு. 'Cinders', அதாவது, சாம்பல், மற்றும், 'Puella', அதாவது, 'சிறுமி' அல்லது 'சிறிய பெண்' என்ற இரு சொற்களும் இணைந்து உருவானதே, Cinderella.

இந்தப் பாரம்பரியக் கதையின் மையக்கருத்து, மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. "ஒருவர் அழகு மிக்கவராக, அனைவராலும் விரும்பித் தேடப்படுபவராக, பெரும் விருந்துகளில் கலந்துகொள்பவராக மாறுவதற்கு முன், சாம்பலுடன், தனிமையில் நேரத்தைச் செலவிடவேண்டும். அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை, யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், பணிவோடு செய்யவேண்டும்" என்பதே, சின்டரெல்லா கதை நமக்குச் சொல்லித்தரும் பாடம். இத்தகையதொரு பாடத்தை நமக்கு நினைவுறுத்த, தவக்காலத்தின் ஆரம்பத்தில், சாம்பல் என்ற அடையாளம் உதவியாக உள்ளது.

ஒரு பொருள், நெருப்பில் அழிந்ததும், உருவாவது சாம்பல். எனவே, சாம்பலை நாம் அழிவின் அடையாளமாகவே பெரும்பாலும் கருதுகிறோம். ஆனால், அதே சாம்பல், பயிர்களை வளர்க்கும் உரமாகவும், பொருள்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்கி, அவற்றை ஒளிமயமாக்கும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சாம்பலையும், அதை உருவாக்கும் நெருப்பையும், அழிவின் அடையாளங்களாக நாம் கருதுவதுபோல், பெருவெள்ளமாக வரும் நீரையும், அழிவின் அடையாளமாகக் கருதுகிறோம். பெருவெள்ளத்தின் அழிவிலிருந்து, அற்புதங்களை நிகழ்த்திய இறைவனை, இன்றைய முதல் வாசகம் நமக்கு நினைவுறுத்துகிறது. நோவா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில், இறைவன், புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். கிறிஸ்தவ மறையில் மட்டுமல்லாமல், பல்வேறு மறைகளிலும், கலாச்சாரங்களிலும், வானவில், நம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் தொடக்க நூலில் இவ்வாறு ஒலிக்கின்றன:

  • தொடக்கநூல் 9: 8-10,12-13
  • கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: “இதோ! நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும், பேழையிலிருந்து வெளிவந்து உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்... நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.”

வானவில்லை காணும்போது, அதன் பல்வேறு வண்ணங்கள், பொதுவாக, நம் கவனத்தை ஈர்க்கின்றன. பழைய ஏற்பாட்டு காலத்திலோ, வில்லின் வண்ணங்களைவிட, அந்த வில்லின் வடிவம் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. அந்த வில்லை, கடவுள் பயன்படுத்திய ஆயுதமாகவும், அதிலிருந்து விடப்பட்ட அம்புகள், இடியாய், மின்னலாய், மழையாய், புயலாய் மனிதரை நோக்கிப் பாய்ந்ததாகவும் அவர்கள் கருதினர்.

பழம்பெரும் மதங்களில், மின்னலை கையிலேந்தி நிற்கும் தெய்வங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் தவறு செய்யும்போது, அவர்களைத் தண்டிப்பதற்கு, மின்னலை ஓர் ஆயுதமாக தெய்வங்கள் பயன்படுத்தியதாக பாரம்பரியக் கதைகளில் கூறப்பட்டுள்ளன. இக்கதைகளின் தாக்கம், நோவாவைக் குறித்து சொல்லப்பட்டுள்ள கதையில் காணப்படுகிறது.

தீமைகள் செய்தோரை அழிக்க, கடவுள் 40 நாள்களாக இடி, மின்னல், மழை, பெருவெள்ளம் என்று பல்வேறு வடிவங்களில் தண்டனைகளை அனுப்புகிறார். தன் தண்டனை அம்புகளை அனுப்ப, அவர் பயன்படுத்திய வில்லை, அந்த 40 நாள்களுக்குப்பின், மேகத்தின் மேல் வைப்பதாகக் கூறுகிறார். அதன் வழியே, இனி, மனிதர் மீது தண்டனை அம்புகளை தான் அனுப்பப்போவதில்லை என்பதை உணர்த்துகிறார்.

இறைவனின் தண்டனைகள் முடிந்தன என்ற வாக்குறுதியின் அடையாளமாக விளங்கும் வானவில்லைப்பற்றி இன்று, சிந்திக்கும்வேளையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, மனித குலத்தை பல்வேறு வழிகளில் வதைத்துவரும் கோவிட்-19 பெருந்தொற்று தீர்ந்து, மனிதர்கள் மீண்டும் புதுவாழ்வை, வசந்த காலத்தை அனுபவிக்க, இறைவனின் அருளை இவ்வேளையில் வேண்டுவோம்.

தவக்காலத்தை வசந்த காலமாகவும், அந்த வசந்த காலத்தின் வாக்குறுதிகளை நினைவுறுத்தும் தொடக்க நூல் நிகழ்வையும் சிந்தித்த நாம், இனி, நம் சிந்தனைகளை, இன்றைய நற்செய்தியின் பக்கம் திருப்புவோம். ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு, சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார்.

‘சோதனை’ என்ற வார்த்தையைக் கேட்டதும், அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் என்ற அச்சமே நம்மில் பலருக்கு தோன்றும். ஆறஅமர சிந்தித்தால், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மையை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும், இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தரும் நல்ல பாடங்கள்.

தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று மறையுரையில் என்ன சொல்லலாம் என்பதுபற்றி இன்னொரு அருள்பணியாளரோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். ‘சோதனை’ என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர், "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற பழைய திரைப்படப் பாடலைப் பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது. நம்மால் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கையின்மையை, உள்ளத்தில் ஆழமாக ஊன்றி விடும் ஆபத்தான சொற்கள் இவை. நாம் கடந்துவந்த 2020ம் ஆண்டில், இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ள சொற்களை, பல்வேறு விதங்களில் நாம் எண்ணியிருப்போம், சொல்லியிருப்போம்.

சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? நோவா காலத்தில் வந்ததுபோல், தப்பித்துக்கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளமாக, சோதனைகளையும், அதில் அடித்துச் செல்லப்படும் பரிதாபமானப் பாவிகளாக நம்மையும் எண்ணிப் பார்க்கிறோம். இத்தகைய எண்ணங்களுக்கு இடம்கொடுக்கும்போது, சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படைக் காரணமான தீய சக்திக்கும், அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால், உள்ளத்தில் நம்பிக்கை குலைகிறதே, அதுதான் இன்று நம்மில் பலர் சந்திக்கும் மாபெரும் சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றிபெறவும், நமக்கு சக்தி உள்ளது. இதையும் நாம் நம்பவேண்டும்.

நாம் வாழும் உலகில், ஆக்கப்பூர்வமான செயல்கள், ஆயிரக்கணக்கில், ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. ஆங்காங்கே தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், நல்ல நிகழ்வுகளை காட்டுவது, விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை என்பதாலும், ஊடகங்கள், மீண்டும், மீண்டும், வன்முறைகளையும், குற்றங்களையும், விறுவிறுப்பானச் செய்திகளாகப் படைக்கின்றன. ஊடகங்கள் காட்டிவரும் அந்நிகழ்வுகளின் தொகுப்பையே, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும்போது, "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று நம்மைச் சொல்லவைத்து விடுகின்றது.

இப்படி ஓர் இயலாத்தன்மை ஒவ்வொரு நாளும் நமக்கு ஊட்டப்படும்போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற தவறான முடிவுக்கு நாம் வருகிறோம். இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும்.

தன் பணிவாழ்வைத் துவக்குவதற்கு முன்னதாகவே இயேசு சோதனைகளைச் சந்தித்தார். சோதனைகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால், அவர் தன் மீட்புப் பணியைத் துவக்கியிருக்கவே மாட்டார். நல்லவேளை. இயேசு தனக்கு வந்த சோதனைகளை இனம் கண்டு வென்றதால், துணிவுடன் தன் பணிகளைத் துவக்கினார். அதிலும் குறிப்பாக, தன் உறவினரும், முன்னோடியுமான யோவான் கைது செய்யப்பட்டதை அறிந்தபின், இயேசு, அவரது கைது நிகழ்வால் மனம் தளர்ந்து போகாமல், "கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே கலிலேயாவிற்கு வந்தார்" (மாற்கு 1:14) என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.

"கலிலேயாவிற்கு வந்தார்" என்ற சொற்களில் பொதிந்துள்ள பொருள், நாம் சோதனைகளை எவ்வாறு சந்திக்கவேண்டும் என்பதற்கு மற்றுமொரு பாடமாக அமைகின்றது. யூதேயா, கலிலேயா ஆகிய இரு பகுதிகளும், ஏரோது மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. தன் உறவினரான யோவானைக் கொலை செய்தது ஏரோது  என்பதை அறிந்தும், அவரது அதிகாரத்திற்கு கீழ் இருந்த கலிலேயாவிற்கு இயேசு வந்தார். அவர் அங்கு வந்தது, ஏரோதுக்கு சவால் விடும் தன் துணிவைக் காட்டும் ஒரு வருகை அல்ல, மாறாக, தான் பறைசாற்ற வந்த நற்செய்தியின் சக்தியால் அவர் அந்த முடிவை எடுத்தார்.

இயேசு சோதனைகளைத் துணிவுடன் சந்தித்து வென்றது, அதைத் தொடர்ந்து நற்செய்தியை பறைசாற்ற சென்றது ஆகிய நிகழ்வுகள், நமக்கு நல்லதொரு பாடமாக அமைய வேண்டும்.

நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் ‘மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலமாக’ விளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நிகழவிடாமல், நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு என்ற சோதனையை வெல்வதற்கும், மனத்தளர்வில் ஆழ்ந்திருக்கும் இவ்வுலகிற்கு நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும், தூய ஆவியார் நமக்கு துணிவை வழங்கவேண்டுமென்று மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2021, 13:30