தேடுதல்

Vatican News
இலங்கை கிறிஸ்தவ கோவில் இலங்கை கிறிஸ்தவ கோவில்  

விசாரணை முறைகள் குறித்து இலங்கை கர்தினால் அதிருப்தி

2019ம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லையெனில், இவ்வழக்கை, அனைத்துலக நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக, கர்தினால் இரஞ்சித் எச்சரிக்கை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து இடம்பெற்ற விசாரணைகள் பற்றி தன் அதிருப்தியை வெளியிட்டுள்ள அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், இறுதி அறிக்கையின் ஒரு பிரதி தனக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளார்.

2019 கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவன்று, மூன்று கிறிஸ்தவ கோவில்களும், மூன்று பயணியர் விடுதிகளும் வெடிகுண்டால் தாக்கப்பட்டு 279 பேர் உயிரிழந்தது, மற்றும், ஏறக்குறைய 500 பேர் காயமடைந்தது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட கொழும்பு பேராயர், கர்தினால் இரஞ்சித் அவர்கள், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லையெனில், இவ்வழக்கை அனைத்துலக நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லவும் தான் தயாராக இருப்பதாக உரைத்தார்.

CID எனும் இலங்கையின் குற்றவியல் விசாரணை அமைப்பில் இடமபெற்ற விசாரணை முறைகள் குறித்து தனக்கு திருப்தியில்லை என்று கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், அரசின் இந்த போக்குகளை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்றும், வேறுவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

யாரெல்லாம் இந்த தாக்குதல்களை தடுக்க முனையவில்லை என்பது குறித்து மட்டுமல்ல, இதற்கெல்லாம் யார் யார் காரணம் என்பதையும் தீவிரமாக ஆராயவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புவதாக கூறினார், கர்தினால் இரஞ்சித்.

2019ம் ஆண்டு இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து முன்னாள் அரசுத்தலைவர் மைத்ரிபாலா சிறிசேனா அவர்களால் உருவாக்கப்பட்ட விசாரணை அவை, தற்போது, பிப்ரவரி மாதம் முதல் தேதி, 472 பக்க அறிக்கையை அரசுத்தலைவர் கோத்தபயா ராஜபக்ஷா அவர்களிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அதன் ஒரு பிரதி, மக்கள் பார்வைக்கென, தனக்கும் வழங்கப்பட வேண்டும் என விண்ணப்பித்துள்ளார், கர்தினால்  இரஞ்சித். (UCAN)

13 February 2021, 15:34