தேடுதல்

Vatican News
“Respira Peru” திட்டத்தின் கீழ் ஆக்ஸிஜன் வழங்கும் கருவியை ஆசீர்வதிக்கும் பேராயர் Miguel Cabrejos “Respira Peru” திட்டத்தின் கீழ் ஆக்ஸிஜன் வழங்கும் கருவியை ஆசீர்வதிக்கும் பேராயர் Miguel Cabrejos 

"பெரு நாடே மூச்சுவிடுவாயாக" என்ற முயற்சியின் பலன்

பெரு நாட்டில், “Respira Peru” என்ற பெயரில், அண்மைய சில நாள்களாக மேற்கொள்ளப்பட்ட நிதித்திரட்டும் முயற்சியில் 80 இலட்சம் யூரோக்கள் திரட்டப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெரு நாட்டில், கோவிட்-19 பெருந்தொற்றினால் துன்புறும் மக்களுக்கு உதவிசெய்ய “Respira Peru” அதாவது, "பெரு நாடே மூச்சுவிடுவாயாக" என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கொள்கைப்பரப்பு முயற்சி, மிகுந்த பலனளித்துவருவதாக தலத்திருஅவை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கிய இந்த திட்டத்தில், அண்மைய சில நாள்களாக மேற்கொள்ளப்பட்ட நிதித்திரட்டும் முயற்சியில், 80 இலட்சம் யூரோக்கள் திரட்டப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்கு செய்தியொன்றை அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் பரிவு யாரையும் ஒதுக்கிவிடாமல், ஒவ்வொருவரையும் அடைவதற்கு உதவி செய்யவேண்டும் என்றும், இதன் வழியே, மனிதாபிமானம் மிக்க, உடன்பிறந்த உணர்வுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம் என்றும் திருத்தந்தையின் விண்ணப்பத்தில் கூறப்பட்டிருந்தது.

பெரு நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், லொயோலாவின் புனித இக்னேசியஸ் பல்கலைக்கழகமும் இணைந்து, தொலைக்காட்சி வழியே நடத்திய விண்ணப்ப நிகழ்வில், அமெரிக்க கண்டத்திலிருந்து பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் கலந்துகொண்டன.

திரட்டப்பட்டுள்ள நிதியின் உதவியால், மூச்சுவிட உதவும் கருவிகள், ஆக்சிஜன் வழங்கும் குழாய்கள் ஆகியவை, கோவிட்-19 பெருந்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நிதி திரட்டும் இந்த முயற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும், பெரு நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் மிகுவேல் காப்ரெயோஸ் (Miguel Cabrejos) அவர்களும் புனித இக்னேசியஸ் பல்கலைக்கழகத் தலைவர், Raul Diez Canseco Terry அவர்களும் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

பிப்ரவரி 24, இப்புதன் நிலவரப்படி, பெரு நாட்டில் 13 இலட்சம் பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 45,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

25 February 2021, 15:22