தேடுதல்

தாய்லாந்தில் மியான்மார் நாட்டிற்காக தாய்லாந்தில் மியான்மார் நாட்டிற்காக 

மியான்மார் நாட்டிற்கு செபங்கள் தேவை

கோவிட்-19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசில் நாட்டில், நம்பிக்கை, மற்றும், ஒன்றிப்பின் அடையாளமாக, ஒவ்வொரு கத்தோலிக்கர் வீட்டிலும் மெழுகுதிரி ஏற்ற அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மாரில் இராணுவத்தால் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும், உயர் அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில், அந்நாட்டிற்காக, இறைவனை உருக்கமாக மன்றாடுமாறு, தலைநகர் யாங்கூன் துணை ஆயர் சா யோ ஹான் (Saw Yaw Han) அவர்கள், விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.

மியான்மார் மக்கள் அச்சத்தில் வாழ்ந்துவரும் இவ்வேளையில், மிகுந்த விழிப்புணர்வு மற்றும், இறைவேண்டல் உணர்வுடன்  வாழவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று, வத்திக்கானின் பிதேஸ் செய்தியிடம் பேசியுள்ள ஆயர் யோ ஹான் அவர்கள், நிலைமை மோசமாக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகத் தெரிவித்தார்.

உணவுப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக, உணவுப்பொருள்களையும், மக்களின் நலவாழ்வைப் பேணுவதற்காக, மருந்துகளையும் சேமித்து வைக்குமாறு, திருஅவையைக் கேட்டுக்கொண்டுள்ள ஆயர் யோ ஹான் அவர்கள், மியான்மாரில் அமைதி நிலவ அனைத்து கத்தோலிக்கரும் செபிக்குமாறும், அருள்பணியாளர்கள் இதே கருத்துக்காக திருவழிபாடுகளை நிறைவேற்றுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

மியான்மாரில், பிப்ரவரி 01, இத்திங்கள் அதிகாலையில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து, நொபெல் அமைதி விருது பெற்ற ஆங் சான் சூச்சி, நாட்டின் அரசுத்தலைவர் Win Myint உட்பட, உயர் அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, மியான்மாரில், ஓராண்டு அவசரகால நெருக்கடி நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கவிழ்ப்பு நடைபெற்ற சமயத்தில், மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், அந்நாட்டின் கச்சின் மாநிலத்தில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டிருந்தார் என்று செய்திகள் கூறுகின்றன.

மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், மியான்மாரில், மக்களாட்சி சார்ந்த சீர்திருத்தங்களில், அனைத்து தலைவர்களும் மிகுந்த ஆர்வம் காட்டுமாறும், வன்முறையைக் கைவிட்டு, மனித உரிமைகள் மற்றும், அடிப்படை உரிமைகளை முழுமையாய் மதிக்கும், அர்த்தமுள்ள உரையாடலை மேற்கொள்ளுமாறும், அழைப்பு விடுத்துள்ளார்.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டு காலம் இராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை சந்தித்த மியான்மாரில், 2011ம் ஆண்டில் மக்களாட்சி அமைக்கப்பட்டது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2021, 16:19