தேடுதல்

Vatican News
போலந்து ஆயர் பேரவையின் உயர் அதிகாரிகள் போலந்து ஆயர் பேரவையின் உயர் அதிகாரிகள்  (ADAN STEPIEN-511404463)

பாலியல் முறைகேடுகளுக்குப் பலியான சிறார்க்காக இறை வேண்டல்

பாலியல் முறைகேடுகளுக்குப் பலியானவர்களை நினைத்து செபிப்பது, அவர்கள், உணர்வளவிலும், ஆன்மீக அளவிலும் அனுபவிக்கும் மனவேதனைகளை புரிந்துகொள்வதற்கு, ஒரு வாய்ப்பாக இருக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்க திருஅவை நிறுவனங்களில் பாலியல் முறைகேடுகளுக்குப் பலியான சிறாரை நினைவுகூர்ந்து, அவர்களுக்காக, சிறப்பு இறைவேண்டல்கள் மற்றும், தவ முயற்சிகளை மேற்கொள்ளும் நாள், பிப்ரவரி 19, இவ்வெள்ளியன்று, இந்தியா, போலந்து உட்பட பல நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டுவரும் இந்த நாள் பற்றி ஆசியச் செய்தியிடம் பேசிய, இயேசு-மரியா சபையின் அருள்சகோதரி அரினா கொன்சால்வெஸ் (Arina Gonsalves RJM) அவர்கள், இந்த நாளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

பாலியலுக்குப் பலியானவர்களை நினைத்து செபிப்பது, அவர்கள், உணர்வளவிலும், ஆன்மீக அளவிலும் அடையும் மனவேதனைகளையும், சிறாரை பாலியல் முறைகேடுகளிலிருந்து பாதுகாப்பதற்கு நாம் தவறியுள்ளதையும், புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும், அருள்சகோதரி கொன்சால்வெஸ் அவர்கள் கூறினார். 

இவர்களுக்காகச் செபிப்பது, அவர்களின் காயங்கள் குணப்படுத்தப்படவும், அவர்களின் ஏமாற்றம், மற்றும், புண்பட்ட உணர்வுகளை குடும்பங்கள் புரிந்துகொள்ளவும் உதவும் என்றும் கூறிய, திருப்பீட சிறார் பாதுகாப்பு குழுவின் உறுப்பினராகிய அருள்சகோதரி கொன்சால்வெஸ் அவர்கள், நம் சமுதாயத்தில், குறிப்பாக டிஜிட்டல் உலகில், இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்று கூறினார். (AsiaNews)

போலந்து திருஅவை

மேலும், இந்த இறைவேண்டல் நாளில் திருப்பலி நிறைவேற்றிய, போலந்து ஆயர் பேரவையின் செயலர் ஆயர் Artur Miziński அவர்கள், பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சிறார், தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதற்கு, நல்லதொரு சூழலை, இந்த நாள் உருவாக்கிக் கொடுக்கிறது என்று கூறினார்.

இத்தகைய குற்றங்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்காக, திருஅவை எடுத்துவரும் முயற்சிகளையும் இந்த நாள் வெளிப்படுத்துகின்றது என்று, ஆயர் Miziński அவர்கள் கூறினார்.

20 February 2021, 14:57