தேடுதல்

Vatican News
புனித திருத்தந்தை முதலாம் மார்ட்டின் புனித திருத்தந்தை முதலாம் மார்ட்டின் 

திருத்தந்தையர் வரலாறு-ஒரு புனித திருத்தந்தையின் துயர்கள்–பகுதி 2

இரத்தம் சிந்தலை தவிர்க்கும் நோக்கத்தில், தானே முன்வந்து கைது செய்யப்பட அனுமதித்து, தன்னை, பேரரசரிடம் கையளித்த திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவையின் வரலாற்றில்  மிகச் சோதனையான தருணங்கள் குறித்து கடந்தவாரம் சிந்தித்தோம். இன்று தொடர்கிறோம். நேர்மையாக இருந்த ஒரே காரணத்துக்காக சொல்லொண்ணா அவமானங்களையும் கொடுமைகளையும் சந்தித்த திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள், எல்லா சித்ரவதைகளையும் இறைவனுக்காக தாங்கிக்கொண்டார். சோகம் நிறைந்ததாக இருந்தாலும், பெருமை மிகுந்ததாக இருக்கிறது, இவரின் வரலாறு. 649ம் ஆண்டு திருஅவையின் தலைமைப் பதவியை ஏற்று, ஏறக்குறைய 6 ஆண்டுகள், திருஅவையை வழிநடத்திய நம் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள், தன் பணியின் துவக்கத்திலேயே பேரரசரோடு முரண்பாட்டு உரசல்களை எதிர்நோக்கினார். ஏனெனில், அரசரின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்னரே, இவர், திருத்தந்தையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதுமட்டுமல்ல, பொறுப்பேற்ற உடனேயே, ஆயர் மாமன்றத்தைக் கூட்டி, மன்னர்கள், திருஅவையின் ஒப்புதலின்றி அறிவித்திருந்த விசுவாச முரண்பாட்டுக் கொள்கைகளை நீக்கும்படி ஆணையிட்டார். இது மட்டுமல்ல, திருஅவையின் அதிகாரப்பூர்வப் படிப்பினைகளுக்கு எதிராகப் போதித்த சில முதுபெரும் தந்தையர்களை திருஅவையிலிருந்து நீக்கினார். பேரரசரின் அங்கீகாரத்திற்கு காத்திருக்காமல் பொறுப்பேற்றுக்கொண்டது, அவர் வெளியிட்ட கிறிஸ்தவ கோட்பாட்டுப் படிப்பினைகளை நீக்கியது, அவருக்கு நெருக்கமாக இருந்த முதுபெரும் தந்தையர்களை நீக்கியது என தொடர்ந்து கொண்டிருந்த திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்களின் துணிச்சல், பேரரசருக்கு கோபத்தை உருவாக்கியது. நிலைமைகளைச் சீராக்க, தன் பிரதிநிதியாக, ஒலிம்பியுஸ் என்பவரை அரசர் அனுப்பிவைத்தார். ஆயர் மாமன்றக் கூட்டம் நடந்தபோது, உரோம் நகருக்கு வந்துசேர்ந்த ஒலிம்பியுஸ், முதலில் திருஅவைக்குள் பிளவினை ஏற்படுத்த முயன்றார். அது வெற்றியடையாதபோது, திருத்தந்தையை தந்திரமாக கொலைச் செய்ய முயற்சி செய்தார். அதற்குள், சிசிலி தீவில் போர் முண்டதால், ஒலிம்பியுஸ் அங்கு செல்லவேண்டியதாகி, அங்கேயே உயிர்துறந்தார்.

இந்த விவரங்களை, கடந்த வாரம் நாம், பார்த்தோம். இவற்றைத்தொடர்ந்து, திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்களின் வாழ்வில் நடந்தவைகளைக் காண்போம்.


திருத்தந்தையை பணிய வைக்க முயற்சி செய்த தன் திட்டம் நிறைவேறாமல் போனதால் கோபமடைந்த பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ஸ், மீண்டும் தன் பிரதிநிதியாக தியோதோர் கல்லியோபாஸ் (Theodore Calliopas) என்பவரை அனுப்பி, திருத்தந்தையை கான்ஸ்தாந்திநோபிளுக்கு கொண்டுவரப் பணித்தார். 653ம் ஆண்டு, ஜூன் 15ந்தேதி உரோம் நகருக்கு வந்த கல்லியோபாஸ், இரண்டு நாட்களுக்குப்பின் இலாத்தரன் பெருங்கோவிலில் நுழைந்து, அங்குள்ள திருஅவை அதிகாரிகளிடம், திருத்தந்தை மார்ட்டின் அவர்களை, பேரரசர் பதவி நீக்கம் செய்துவிட்டதாகவும், அவர்கள் வேறு ஒருவரை புதிய திருத்தந்தையாக தேர்வு செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மக்கள் இதனை எதிர்த்தனர். இரு தரப்பினருக்கும் மோதல் உருவாகும் சூழலில் தலையிட்ட திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள், இரத்தம் சிந்தலை தவிர்க்க அழைப்பு விடுத்து, தானே பேரரசரிடம் வருவதாக உறுதியளித்து, தன்னைக் கையளித்தார். அவர் கைதுசெய்யப்பட்டு கான்ஸ்தாந்திநோபிளுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இத்திருத்தந்தை சிறைக்கைதியாக  கான்ஸ்தாந்திநோபிளுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது, ஒரு சிலரே அவருக்கு பணிவிடை புரிய, உடன்செல்ல அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு உடல் நோய்களால் துன்புற்றுவந்த திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள், ஏறக்குறைய 3 மாதங்களுக்குப்பின் Naxos தீவை சென்றடைந்தார். அவரை அங்கே கைதியாக வைத்துவிட்டு, அவரின் வருகையை பேரரசருக்கு அறிவிக்க தூதர்கள் சென்றனர். பின், கான்ஸ்டான்டிநோபிளில் கப்பலிலேயே பல மணி நேரம் காக்கவைக்கப்பட்ட  திருத்தந்தையை காணவந்த மக்கள் கூட்டம், அவரை ஏளனம் செய்து, கடவுளின் எதிரி எனவும், தேசத்துரோகி என்றும் தூற்றியது. மனத்துணிவும், பொறுமையும் கொண்ட திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள்,  அனைத்தையும் இறைவனுக்காக தாங்கிக்கொண்டார். பல மணி நேரங்கள் துறைமுகத்திலேயே வைக்கப்பட்டிருந்த திருத்தந்தை முதலாம் மார்ட்டின், மாலையில் Prandearia என்ற சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே, போதிய உணவும், தண்ணீரும் இன்றி  கொடுமையான முறையில் 93 நாட்கள் வைக்கப்பட்டார். தாங்கமுடியாத குளிர் வேறு. திருத்தந்தை, இவற்றால் மனத்தளர்ச்சியடையவில்லை.

 93 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின், டிசம்பர் மாதம் 19ந்தேதி அரசவை அங்கத்தினர்கள்முன் கொணரப்பட்டு, அரச கருவூல அதிகாரி முன்னர், பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டார். அதில் முக்கியமானது, மன்னர் வெளியிட்ட விசுவாச அறிக்கையில் திருத்தந்தை கையெழுத்திடாதது. பின்னர், பேரரசரும் அமர்ந்திருக்க, மக்கள் கூட்டத்தின்முன், வெளி மைதானத்தில் கொணரப்பட்டு, அவரை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என அனைத்து மக்களும் குரல் எழுப்புமாறு கேட்கப்பட, ஒரு சிலரே அக்கட்டளைக்குப் பணிந்தனர். பின்னர், ஆடைகள் களையப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் தெருத்தெருவாக இழுத்து அவமானப்படுத்தப்பட்டு, Diomede என்ற சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும், 85 நாட்களை செலவிட்டார், திருத்தந்தை மார்ட்டின். திருமறையின் முரண்பாடான படிப்பினைகளை ஏற்றுக்கொள்வதாக இவர் கையெழுத்திட்டிருந்தால், இத்தளை பிரச்சனைகள் வந்திருக்காது. ஆனால், இத்தனை துன்பங்களுக்குப் பின்னரும், திருஅவை படிப்பினைகளின் பாதுகாவலராக நின்ற இத்திருத்தந்தை, ஒரு கப்பலில் ஏற்றப்பட்டு, பேரரசரால் நாடு கடத்தப்பட்டார்.

திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள், நாடுகடத்தப்பட்ட இடம் கிரேக்க காலனியான Cherson என்பதாகும். இன்று அதே நகரம் Sebastopoli என்ற பெயருடன் உக்ரைனில் உள்ளது. கப்பலில் 49 நாள் பயணத்திற்குப்பின் Chersonக்கு வந்தபோது, அவர் கண்டதெல்லாம் அந்நகரின் பசி மற்றும் பஞ்சச் சாவுகளை. தன் இயலாநிலையிலும் அம்மக்களுக்கு உதவ முன்வந்ததுதான், இவரைப்பற்றி அம்மக்கள் இன்றும் நினைவுகூருவது. அங்கேயே 655ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மரணமடைந்து, Cherson நகருக்கு அருகிலுள்ள Blachernæ நமதன்னை ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட  இப்புனிதத் திருத்தந்தை, அங்கு வாழ்ந்த காலத்திலும், அவரது மரணத்திற்குப் பின்னரும் பல புதுமைகளை நிகழ்த்தியதாக வரலாறு கூறுகிறது. சிறிது காலத்திற்குப்பின், இவரது கல்லறை திறக்கப்பட்டு, உடலின் எஞ்சிய பகுதி, உரோம் நகருக்கு கொணரப்பட்டு, San Martino ai Monti என்ற கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.

வீரத்துவம் நிறைந்த ஒரு புனிதத் திருத்தந்தையின் வாழ்வு, இன்றைய திருஅவையின் வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டிற்கும் சிறப்புச் சேவையாற்றியுள்ளது என்ற பெருமித உணர்வு, அவர் அடைந்த துன்பங்களையும் தாண்டி நிற்கிறது.

24 February 2021, 15:06