தேடுதல்

மியான்மார் போராட்டத்திற்கு ஆதரவாக, Mandalay உயர்மறைமாவட்ட பேராயர் Marco Tin Win மியான்மார் போராட்டத்திற்கு ஆதரவாக, Mandalay உயர்மறைமாவட்ட பேராயர் Marco Tin Win 

இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக நல்லாயன் சபை

மியான்மாரின் Mandalay உயர்மறைமாவட்ட பேராயர் Marco Tin Win அவர்கள், திருஇதய பேராலயத்திற்குமுன், சில அருள்பணியாளர்களோடு சேர்ந்து, போராடும் மக்களுக்கு தன் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும், கனடாவில் மறைப்பணியாற்றும், நல்லாயனின் பிறரன்பு அன்னை மரியா சபை அருள்சகோதரிகள், மியான்மாரில், அநீதியாய் இடம்பெற்றுள்ள இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக, தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரிய அளவில் போராட்டங்களை நடத்திவரும் அந்நாட்டு மக்களுக்கு, தங்கள் ஆதரவையும் அச்சகோதரிகள் வெளயிட்டுள்ளனர்.

அந்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சுதந்திரமான மற்றும், நியாயமான பொதுத்தேர்தல்களில் அடைந்த தோல்வியை ஏற்க மறுத்து, இராணுவம் ஆட்சியைப் பறித்துக்கொண்டிருப்பது, மியான்மார் மக்களின் விருப்பத்திற்கு இழைக்கும் அநீதி என்றும், நல்லாயன் சபை சகோதரிகள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

நல்லாயன் சபை சகோதரிகள், மியான்மார் நாட்டில் 1865ம் ஆண்டிலிருந்து மறைப்பணியாற்றி வருகின்றனர். (ICN) 

ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக கிறிஸ்தவர்கள்

மேலும், மியான்மார் நாடெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி, இராணுவ ஆட்சிக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவரும்வேளை, அந்நாட்டின் Mandalay உயர்மறைமாவட்ட பேராயர் Marco Tin Win அவர்கள், தனது மற்ற பணிகளுக்கு மத்தியில், திருஇதய பேராலயத்திற்குமுன், சில அருள்பணியாளர்களோடு சேர்ந்து, போராடும் மக்களுக்கு தன் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

“மக்களின் விருப்பம் – கைதுசெய்யப்பட்டுள்ள தலைவர்களின் விடுதலை, இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு” என்று எழுதப்பட்ட விளம்பரத் தட்டியை ஏந்திக்கொண்டு, போராட்டத்தில் கலந்துகொண்டார், பேராயர் Marco Tin Win. 

கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருக்கின்ற ஒரு நாட்டில், கத்தோலிக்கத் தலைவர் ஒருவர், போராடும் மக்களுக்கு, பொதுப்படையாக ஆதரவு அளிப்பது அரிதாக நடைபெறுவது என்று, யூக்கா செய்தி கூறுகிறது.

மியான்மாரின் 5 கோடியே 40 இலட்சம் மக்களில் ஏறத்தாழ ஏழு இலட்சம் பேர் கத்தோலிக்கர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2021, 14:16