தேடுதல்

தவக்காலம் துவங்கியுள்ளது தவக்காலம் துவங்கியுள்ளது 

தவக்கால எதிர்பார்ப்புகள்

மண்ணுலக செல்வங்கள் மீதானப் பற்றை விடுத்து, விண்ணுலக செல்வங்கள் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளத் தூண்டுவதாக இத்தவக்காலம் நமக்கு அமையட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

அன்புள்ளங்களே, தவக்காலம் என்பது, உடலை வருத்திக்கொள்வதற்காக அல்ல. உள்ளத்தைத் திருத்திக்கொள்ளவே அழைப்புவிடுக்கிறது. மனமாற்றம் என்பது ஒரு பயணம்; இருளிலிருந்து ஒளியை நோக்கி, பாவத்திலிருந்து புனிதத்தை நோக்கி, சாவிலிருந்து வாழ்வை நோக்கி, வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி, இயேசுவின் பாதையில் நடைபோடும் புனித பயணம். இப்பயணத்தில் நம்மிடம் எதிர்பார்ரக்கப்படும் சில பயண விதிகள் குறித்து தற்போது காண்போம்.

ஏன் இத்தவக்காலம்

ஒருமுறை திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம் சென்று, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?, மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார். இயேசு கிறிஸ்துவின் இந்த கூற்றின் அடிப்படையிலேயே, நோன்புக் காலமாகிய தவக்காலத்தை தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் உருவாக்கினர். கி.பி. 2-ம் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவுக்குத் தயாரிப்பாக, இரண்டு நாட்கள் நோன்பிருக்கும் வழக்கம் கிறிஸ்தவர்கள் மத்தியில் தோன்றியது. புனித வெள்ளி, புனித சனி ஆகிய நாட்களில் உணவும், தண்ணீரும் இன்றி 40 மணி நேரம் அவர்கள் தொடர்ந்து நோன்பு கடைப்பிடித்தனர். 3-ம் நூற்றாண்டில், புனித வாரம் முழுவதும் ஒருவேளை உணவுடன் நோன்பிருக்கும் நடைமுறை உருவானது. 4-ம் நூற்றாண்டில், உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்பு 40 நாட்களை தவக்காலமாக கடைப்பிடிக்க வேண்டுமென திருஅவை அறிவித்தது.

நோவா காலத்துப் பெருவெள்ளம் நாற்பது பகலும், நாற்பது இரவும் நீடித்தது. சீனாய் மலையில் பத்துக் கட்டளை பெறும் முன் மோசே நாற்பது பகல், நாற்பது இரவு உண்ணாமல் கடவுளுடன் இருந்தார். ஒரேப் மலையில், கடவுளுடன் நாற்பது பகல்,  நாற்பது இரவுகள் எலியா நடந்துள்ளார். இந்த நாற்பது என்ற எண், விவலியத்தில் ஆன்மிகப் பொருள் மிகுந்த எண்ணாகக் கருதப்படுகிறது.  இயேசு கிறிஸ்துகூட, தன் பொதுவாழ்வில்  தனது பணியைத் தொடங்கும் முன், பாலைவனத்தில் நாற்பது பகலும், இரவும் நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். இப்படியான விவிலிய வார்த்தைகள் மற்றும் திருச்சபை மரபுப் பின்னணிகள் நமது நாற்பது நாட்கள் தவக்கால நோன்பைப் பொருள் உள்ளதாக்குகின்றன.

தவக்காலத்தை சிறப்பித்துவரும் நாம், இக்காலத்தோடு தொடர்புப்படுத்தும் இயேசுவின் மூன்று அறிவுரைகளை சிறிது ஆழமாகக் காணபோம்.

முதல் விதி

“நீங்கள் நோன்பு இருக்கும்போது, மக்கள் பார்க்கவேண்டுமென்று வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது. மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் விண்ணகத் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 6:16-18) என்பதே இயேசுவின் போதனை.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மக்கள் பலரும் தங்கள் பாவங்களுக்காக சாக்கு உடை அணிந்து நோன்பிருந்து மன்றாடியதால் கடவுளின் மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற்றதாகக் காண்கிறோம். தொடக்கத் திருஅவையிலும், பெரிய பாவங்களைச் செய்தவர்கள் சாக்கு உடையுடன் சாம்பல் பூசி நோன்பிருக்கும் வழக்கம் இருந்தது.

கி.பி.10-ம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்த இவ்வழக்கத்தின் எச்சமாகவே, சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் தவக்கால நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் 11-ம் நூற்றாண்டில் உருவானது. மனமாற்றத்தின் அடையாளமாக விவிலியப் பின்னணியில் தோன்றிய அந்த வழக்கம் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதனன்று இன்றளவும் தொடர்கிறது.

விவிலிய ஆய்வாளர்கள் இயேசுவின் காலத்திலிருந்த எருசலேம் வாழ்க்கையிலிருந்து ஒரு சுவையான தகவலைத் தருகிறார்கள்: யூதர்களில் ஒரு பிரிவனராகிய பரிசேயர்கள், வாரத்தில் இரண்டாவது மற்றும் ஐந்தாவது நாட்களில்தான் நோன்பிருப்பார்களாம். ஏனென்றால் மோசே இறைவன் அளித்த கட்டளைகளைப் பெற சீனாய் மலைமேல் வாரத்தின் ஐந்தாம் நாள் ஏறிச் சென்று அடுத்து வந்த வாரத்தின் இரண்டாம் நாள் திரும்பி வந்தார். அதன் நினைவாகவே தாங்கள் இவ்வாறு நோன்பிருக்கிறோம் என்பார்களாம்! ஆனால் ஆய்வாளர்களின் முடிவின்படி, எருசலேமில் வாரத்தின் இரண்டாம் மற்றும் ஐந்தாம் நாட்களில் சந்தை கூடுவது வழக்கம். அந்நாட்களில் எருசலேம் நகரைச் சுற்றியிருந்த ஊர்களிலிருந்து நகருக்குப் பெருந்திரளான மக்கள் வந்து கூடுவர். அவர்கள் தங்களைப் பக்திமான்கள் என்று எண்ண வேண்டும் என்பதற்காகவே பரிசேயர்கள் தங்களுடைய தலைமுடியை  சீர் செய்யாமல், சோர்ந்த முகத்துடன் அலைந்து தாங்கள் நோன்பிருப்பதை வெற்றுப் பெருமைக்காக எல்லோருக்கும் காட்டிக் கொள்வார்களாம்.

இத்தகைய வெளிவேடங்கள் தேவையில்லை, இறைவனுக்கு உண்மையுள்ளவர்களாகச் செயல்படும்போது, வெளிவேடங்கள் வெளிப்படுவதில்லை என்கிறார் இயேசு.

இரண்டாம் விதி

“நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். மக்கள் புகழ வேண்டுமென்று, நீங்கள் உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 6:2-4) என்ற அழகிய வழிமுறையை இயேசு கற்பிக்கிறார்.

தர்மம் செய்யவேண்டும் என்பது, அனைத்து மனிதர்களிடமும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. அதிலும் குறிப்பாக, இத்தவக்காலத்தில் அதிகம் அதிகமாக கிறிஸ்தவர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. இயேசு மேலும் கூறுகிறார்,

“மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது” (மத்தேயு 6:1) என்று.

யூதர்கள் தர்மம் செய்தல், இறைவேண்டல், நோன்பு இருத்தல் ஆகிய மூவகை அறச்செயல்களை செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். யூத மதத்திற்கே இச்செயல்கள் தனிப்பெருமை தந்தன. ஆனால், காலப்போக்கில் இவை வெறுமனே மக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காகச் செய்யப்பட்டு அதன் உள்ளார்ந்த தன்மையை இழந்து விட்டன. மனிதர்களுடைய நல்ல செயல்கள் தவறான நோக்கங்களுக்காகச் செய்யப்படுவதை இயேசு கண்டித்து, விமர்சனம் செய்து, மக்கள் வெளிவேடத்தை அகற்றவும் இந்த அறச் செயல்களின் உள்தன்மையை வலியுறுத்தவும் முயற்சி செய்கிறார். வெளி ஆடம்பரமின்றிச் செய்யும் தர்மத்துக்குத்தான் பலனுண்டு, என்கிறார்.

தர்மம் செய்தல் நீதிக்குச் சமமாகக் கருதப்பட்டது. ‘‘அநீதியாகச் சேர்த்த செல்வத்தை விட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால், நீதியுடன் இணைந்த தர்மம் அதைவிட சிறந்தது. தர்மம் சாவினின்று காப்பாற்றும், எல்லா பாவத்தினின்றும் தூய்மையாக்கும். தர்மம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும்’’. (தோபித்து 12:8-9) நல்ல காரியங்களில் தர்மம்தான் தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.

‘‘இறைவனுக்குப் பலியிடுவதை விட தர்மம் செய்வதே மேல்’’ என்கிறார் யூத மதத் தலைவர் ஒருவர். தான் தர்மம் செய்யும் போதெல்லாம் தர்மத்தை யார், யார் எடுக்கிறார்கள் என்பதை அறியாமலிருப்பதற்காக அவற்றைத் தனக்குப் பின்புறம் போட்டு விடுவாராம் அவர். அக்காலத்தில் கோயில்களில் தர்மம் செய்வதற்கு ஒரு பாரம்பரியம் இருந்தது. தர்மம் கொடுப்பதின் வாயிலாக தன் பாவங்களுக்கு பரிகாரம் பண்ண நினைப்பவர்கள். ‘‘The Chamber of silent’’ எனப்படுகின்ற ‘‘அமைதி அறையில்’’ பணத்தைப் போட்டுவிடுவர். இப்பணமானது கோயில் நிர்வாகிகளால், பொருளாதாரத்தில் பின் தங்கிய நல்ல குடும்பத்தினருக்குப் பகிர்ந்தளிக்கப்படும். கொடுத்தவருக்கு யார் பெற்றுக்கொண்டார் என்றோ, பெற்றுக் கொண்டவருக்கு கொடுத்தவர் யார் என்றோ தெரியாது. தர்மம் செய்பவர்களுடைய நோக்கங்கள் பலவாறாக இருக்கிறது. தர்மத்தை விரும்பிச் செய்யாமல் கடமைக்காகச் செய்பவர்களும் உண்டு. சுய விளம்பரத்திற்காக தர்மம் கொடுப்பவர்களே அநேகம் பேர். தான் கொடுக்கும் தர்மம் விளம்பரப்படுத்தாவிடில் இவர்கள் திருப்தி அடைவதில்லை.

இப்படிப்பட்ட தர்மத்தைத்தான் இயேசு சாடுகிறார். ‘‘நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். நீங்கள் தர்மம் செய்யும் போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். இப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைமாறு அளிப்பார்.’’

மூன்றாம் விதி

“மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தினார் இயேசு. காரணம், இங்கு சேர்த்து வைக்கும் யாவும் தொலைந்துவிடும், அழிந்துவிடும் என்றார். “விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” என்று சொன்ன இயேசு, அது என்றைக்கும் அழிவதில்லை என்கிறார்.

நேர்மையான வழிகளில் கடுமையாக உழைத்து, நமது தேவைகளுக்காகவும், நம்மைச் சார்ந்திருக்கும் நமது குடும்பத்தினரின் தேவைகளுக்காகவும் பணம் சம்பாதிப்பதைத் தவறென்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லை. அந்த நடைமுறை சரியானது மட்டுமல்ல, நமது கடமையும்கூட. ஆனால், மக்கள் பணியையே தன் வாழ்வாக ஏற்றுக்கொண்டோருக்கு பணத்துக்காக உழைக்க நேரம் கிடைப்பதில்லை. இத்தகையோர் தங்கள் தேவைகளை நிறைவேற்ற பிறர் மனமுவந்து தருவதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

இயேசு இப்படித்தான் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே இருந்த தொழுவத்தில்தான் அவரது தாய் மரியாள் அவரைப் பெற்றெடுத்து, விலங்குகளுக்குத் தீவனம் வைக்கும் தீவனத் தொட்டியில் கிடத்தி னார். பிற்காலத்தில், சொந்த வீடு என்று தனக்கு எதுவுமில்லை என்பதை உணர்த்த, “மனுமகனுக்கு தலைசாய்க்கவும் இடமில்லை” என்றார்.

ஏதாவதொரு தருணத்தில் முக்கியமான ஒரு நிகழ்வுக்கு பிறரின் உடைமைகளை இயேசு கேட்டுப்பெற்றார். படகில் இருந்தவாறு கரையில் அமர்ந்திருந்த மக்களோடு பேச, சீடர்களின் படகைக் கேட்டார். எருசலேம் நகருக்குள் நுழைய இன்னொருவருக்குச் சொந்தமான கழுதைக் குட்டியைக் கேட்டார். பாஸ்கா எனப்பட்ட யூதர்களின் பெருவிழாவன்று தன் சீடரோடு விருந்துண்ண ஒரு நபரின் வீட்டு மாடியறையை ஒதுக்கித் தருமாறு கேட்டார். இறுதியில், அவரை இரகசியமாய்ப் பின்பற்றிய ஒரு செல்வந்தருக்குச் சொந்தமான கல்லறையில்தான் இயேசு புதைக்கப்பட்டார். இப்படி வாழ்ந்த இயேசுதான், “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்துவைக்க வேண்டாம்” என்று தார்மீக உரிமையேடு கேட்கிறார்.

ஆனால் சிலரோ, நாங்கள் கடவுளையும் மறக்க மாட்டோம். பணம், பணம் என்றே நாங்கள் அலைந்தாலும், அவ்வப்போது ஆலயம் செல்வோம், வழிபடுவோம், சமயத் திருவிழாக்களில் உற்சாகமாகக் கலந்துகொள்வோம்’ என்ற மனநிலையோடு வாழ்கின்றனர், அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். இவர்களுக்கு இயேசு சொல்வதெல்லாம், “நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.” என்பதுதான். கடவுளும் செல்வமும் எந்த அளவுக்கு நேர்மாறானவை, ஒன்றுக்கொன்று எதிரானவை என்றால், நீங்கள் ஒரே நேரத்தில் இருவருக்கும் பணிவிடை செய்ய இயலாது என்று இயேசு தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். “உங்கள் செல்வம் எங்கே உள்ளதோ, அங்கேதான் உங்கள் உள்ளமும் இருக்கும்”என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

எதை நமது செல்வம் என்று கருதுகிறோமோ, எது நமக்கு மிக முக்கியம் என்று நம்புகிறோமோ, அதைச் சுற்றியே நம் எண்ணங்கள் வலம் வரும். அதற்கே நம் நேரத்தின் பெரும்பகுதியைச் செலவிடுவோம். அதற்கு ஒரு ஆபத்து என்றால் அலறுவோம். அதை இழக்க நமக்கு ஒருபோதும் மனம் வராது. இப்படிப்பட்டவர்கள்தான், பணத்துக்காக உறவுகளைத் தொலைப்பவர்களாகவும், பணத்துக்காக நேர்மை, இரக்கம், மனிதநேயம் போன்ற உயரிய விழுமியங்களைத் துறப்பவர்களாகவும், காசுக்காக கடமைகளை மறுதலிப்பவர்களாகவும், பணத்துக்காக சக மனிதர்களை ஏமாற்றவோ துன்புறுத்தவோ துணிபவர்களாகவும், இலஞ்சம் இல்லாமல் எதையும் செய்ய மறுப்பவர்களாகவும் மாறிப்போகிறார்கள். பணமிருந்தால் போதும், எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற பொய்க்குப் பலியாகும் பேதைகள் இவர்கள். பணத்தால் வாங்க முடியாதவை பல. உண்மை மகிழ்வும், நிறைவும் தருகிற வாழ்க்கைக்கு இன்றியமையாத சில காரியங்களை பணத்தால் வாங்க இயலாது என்பதை இவர்கள் உணர்வதில்லை.

பணத்தைக் கொண்டு கட்டில் வாங்கலாம்; தூக்கத்தை வாங்க இயலுமா? உணவைவையும் மருந்துகளையும் வாங்கலாம், உடல்நலத்தை வாங்க இயலுமா?. விலையுயர்ந்த உடைகள் வாங்கலாம்; அழகை வாங்க இயலுமா?. அடிவருடிகளை வாங்கலாம்; உண்மையான நண்பர்களை வாங்க இயலுமா? அனைத்துக்கும் மேலாக, பணத்தைக் கொண்டு இறையருளையோ விண்ணகத்தையோ வாங்க ஒருபோதும் இயலாது.

எதிர்பார்க்கப்படுவது

விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைப்பது எப்படி என்று, இயேசு இதற்கான பதிலைத் தெளிவாகச் சொல்கிறார், பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பது, தாகமாக இருப்பவர்களின் தாகத்தைத் தணிப்பது, அந்நியரை வெறுக்காமல் ஏற்றுக்கொள்வது, ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை தருவது, நோயுற்றிருப்பவர்களைக் கண்காணிப்பது… இவைதான் விண்ணகத்தில் நாம் சேர்த்து வைக்கும் செல்வம். இந்த மனிதநேய செயல்களுக்காக நாம் இங்கே பணத்தைக் கொடுக்கக் கொடுக்க, அங்கே நமது கணக்கில் செல்வம் கூடிக்கொண்டே போகும்.

ஆகவே அன்புள்ளங்களே, உடல், உள்ள ஆசைகளை அடக்குவதும், தேவையில் இருப்போருக்கு உதவுவதும் கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆன்மிகப் பயிற்சியாகவே இருக்கும் சூழலில், மண்ணுலக செல்வங்கள் மீதானப் பற்றை விடுத்து, விண்ணுலக செல்வங்கள் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளத் தூண்டுவதாக இத்தவக்காலம் நமக்கு அமையட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2021, 15:03