தேடுதல்

Vatican News
புக்குஷிமா அணுசக்தி நிலையத்தின் கழிவு நீர் கிடங்கு புக்குஷிமா அணுசக்தி நிலையத்தின் கழிவு நீர் கிடங்கு  (ANSA)

புக்குஷிமா கழிவு நீரை, கடலில் கலப்பதற்கு, ஆ.யர்கள் எதிர்ப்பு

ஜப்பானின் புக்குஷிமா அணுசக்தி நிலையத்தில் உள்ள கழிவு நீரை, கடலில் கலப்பதற்கு, அந்நாட்டு அரசு எடுத்துள்ள தீர்மானத்திற்கு, ஜப்பான் ஆயர்கள், கொரிய ஆயர்கள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜப்பானின் புக்குஷிமா அணுசக்தி நிலையத்தில் உள்ள கழிவு நீரை, கடலில் கலப்பதற்கு, அந்நாட்டு அரசு எடுத்துள்ள தீர்மானத்திற்கு, ஜப்பான் ஆயர்கள், கொரிய ஆயர்கள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

புக்குஷிமா அணுசக்தி நிலையத்தில் வெப்பத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட 10 இலட்சம் டன் நீரை, சுத்தம் செய்து, அதை, 2022ம் ஆண்டு முதல், படிப்படியாக கடலில் கலப்பதற்கு ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளதை, ஆயர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டனம் செய்துள்ளனர்.

இந்த நீர் எவ்வளவுதான் சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், அதில், tritium போன்ற கதிரியக்க பொருள்கள் இன்னும் பெருமளவு உள்ளன என்றும், இதனால், இந்நீர், கடல் வாழ் உயிரினங்களைப் பாதிப்பதுடன், அவற்றை உட்கொள்ளும் மனிதர்களையும் பாதிக்கும் என்று, ஆயர்கள் தங்கள் எதிர்ப்பை, ஓர் அறிக்கையின் வழியே வெளியிட்டுள்ளனர்.

இந்த நீர், பலமுறை வடிகட்டப்பட்டுள்ளது, மற்றும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்துள்ளபோதிலும், இந்த நீரினால் ஏற்படும் விளைவுகள் இதுவரை சரியான முறையில் ஆய்வு செய்யப்படவில்லை என்பதால், இந்த முயற்சி ஆபத்தானது என்று, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதைத் தவிர, தென் கொரியாவின் Gyeongju எனுமிடத்தில் அமைந்துள்ள Wolseong அணுசக்தி நிலையத்திலிருந்து அண்மையில் வெளியான tritium அடங்கிய கசிவைக் குறித்து, தென் கொரியாவின் ஆயர்கள் தனிப்பட்ட முறையில் மற்றொரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி, ஜப்பானில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த சுனாமி ஆகியவற்றால், புக்குஷிமா அணுசக்தி நிலையம் பாதிக்கப்பட்டது.

2021ம் ஆண்டு சனவரி 7ம் தேதி, தென் கொரியாவின் Wolseong அணுசக்தி நிலையத்திலிருந்து கசிவு ஏற்பட்டதென்ற செய்தியைத் தொடர்ந்து, அப்பகுதியில் தென் கொரிய அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. (UCAN)

18 February 2021, 14:48