தேடுதல்

Vatican News
சிறுவயது இயேசுவை வழிநடத்திய புனித யோசேப்பு சிறுவயது இயேசுவை வழிநடத்திய புனித யோசேப்பு  

மகிழ்வின் மந்திரம் - உழைப்பை பெருமைப்படுத்திய யோசேப்பு

குடும்பங்களின் பாதுகாவலர், நன்மரணத்திற்குப் பாதுகாவலர், உழைப்பாளர்களுக்கு பாதுகாவலர், பொறியியலாளர்களின் பாதுகாவலர் - புனித யோசேப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருக்குடும்பத்தின் பாதுகாவலராக இருந்த புனித யோசேப்பு, இன்று அனைத்துக் குடும்பங்களின் பாதுகாவலராக இருக்கின்றார். இவரது மரணத்தின்போது நம் அன்னையும், நமது ஆண்டவரும் இவருக்கு அருகில் இருந்த பேற்றை இவர் பெற்றதால், இவர், நன்மரணத்திற்குப் பாதுகாவலராக போற்றப்படுகின்றார்.

திருக்குடும்பத்தைக் காக்க அயராது உழைத்தவர்; எனவே எல்லா உழைப்பாளர்களுக்கும் பாதுகாவலராக இருக்கின்றார். தச்சுத்தொழில் செய்து, அந்த உழைப்பை மூலதனமாக வைத்து, திருக்குடும்பத்தைக் காப்பாற்றிய புனித யோசேப்பு, பொறியியலாளர்களின், பொறியியல் வேலை செய்பவர்களின் பாதுகாவலராகத் திகழ்கிறார். 

இதையெல்லாம் தாண்டி, விவிலியத்தில் ஒருவார்த்தைக்கூட பேசாமல், நிறைய சாதித்துக் காட்டியுள்ளார், அதாவது, இறைமகனையே எதிரியிடமிருந்து காப்பாற்றியுள்ளார். இவரின் இந்த மௌனம், நம் ஒவ்வொருவரின் இறையனுபவம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. ஒரு வார்த்தை கூட பேச வேண்டிய அவசியம் இல்லாதபடி, பேச முடியாதபடி, அவர் இறை அனுபவத்தில் நிறைந்திருந்தார் .

இறைவன்தான் மக்களைக் காப்பாற்றவேண்டும், நானா இறைவன் மகனைக் காப்பாற்றுவது, என்ற கேள்வி அவரிடம் இல்லை. எகிப்துக்கு குடும்பத்தோடு தப்பிச் செல்கிறார். கேள்விகள் இன்றி, ஆண்டவரையும், அன்னையையும் ஏற்றுக்கொள்ள, நமக்கு கற்பிக்கிறார்.

புனிதராம் யோசேப்பிடம் நாம் கற்றக்கொள்ள வேண்டியது என்னவென்றால், எவ்வாறு அவர், அன்னையாம் மரியாவுக்கும், இயேசுவுக்கும் உறுதுணையாக இருந்தாரோ, அதே போல் நம் உழைப்பால் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம்.  சில பணிகள் நல்லவை என்றும், சில நல்லவையல்ல என்றும் பிரித்துப் பார்க்கும் மனநிலையை மாற்றுவோம். உண்மையான உழைப்பிற்கும், அன்பினால் உழைத்து குடும்ப வளர்ச்சிக்கு தியாகம் செய்யும் கணவனுக்கும், தந்தைக்கும் புனித யோசேப்பு, ஒரு சிறந்த முன்மாதிரியாவார்.

நாம் செய்கின்ற தொழிலை மதிப்போம்.  அதனை அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.  நாம் செய்கின்ற தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும் உலகிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும் வேலையின்றியிருப்போருக்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் மன்றாடுவோம்.

11 February 2021, 14:07