தேடுதல்

புனித யோசேப்பு புனித யோசேப்பு 

மகிழ்வின் மந்திரம் - யோசேப்பிடமிருந்து கற்றுக்கொள்பவை

நாம் இருக்கும் இடத்திலிருந்துகொண்டே நம்மைச் சுற்றியிருப்பவைகளின், சுற்றியிருப்பவர்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றுவதே நம்மிடம் ஏதிர்பார்க்கப்படுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

'எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்' (1கொரி 10:31) என்ற புனித பவுலின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் புனித யோசேப்பு. அவர் தன் வாழ்வில் அனைத்தையும் கடவுளுக்காக, கடவுள் தனக்கு விடுத்த கட்டளைகளை நிறைவற்றவே செலவிட்டார். அவர் வாழ்ந்ததன் அர்த்தமே, அவர் கடவுளையும், கடவுளால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களையும் அன்பு கூர்ந்ததில் வெளிப்பட்டது. அவர் வாழ்ந்ததும் உழைத்ததும் அவர்களுக்காகவே. நாம் இந்த உலகில் வாழ்வது என்பது, நேரத்தை வீணடிக்கவோ, இடத்தை தேவையில்லாமல் ஆக்ரமித்துக்கொண்டிருக்கவோ அல்ல. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பணியை இறைவன் கொடுத்துள்ளார். நாம் இருக்கும் இடத்திலிருந்துகொண்டே நம்மைச் சுற்றியிருப்பவைகளின், சுற்றியிருப்பவர்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றுவதே நம்மிடம் ஏதிர்பார்க்கப்படுகின்றது. அதைத்தான் அமைதியான முறையில் ஆற்றி வெற்றி கண்டார் புனித யோசேப்பு.

புனித யோசேப்பிடமிருந்து நாம் ஐந்து விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

முதலில், அவர் தனக்கு விடப்பட்ட அழைப்புக்கு இயைந்தவகையில் வாழ்ந்தார். தான் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு கீழ்ப்படிந்தவராகச் செயல்பட்டார்.

இரண்டாவதாக, அவர் தன் குடும்பத்திற்காக, தன்னிடம் கையளிக்கப்பட்ட மரியா, மற்றும் இயேசுவுக்காக தன்னையேத் தியாகம் செய்வபவராக வாழ்ந்தார். அவருக்கென்று எதுவும் இருக்கவில்லை. அவர் வாழ்வில்,  எல்லாமே பிறருக்கானதாக இருந்தது.

மூன்றாவதாக, வார்த்தையால் அல்ல, மாறாக, தன் நடவடிக்கைகளால், முன்மாதிரிகையாக செயல்பட்டவர் புனித யோசேப்பு. இவர் எந்த வார்த்தையும் பேசியதாக விவிலியத்தில் காணோம். ஆனால், அவரைப் பற்றிப் பேசாத கிறிஸ்தவர்களே இல்லை. ஏனெனில், தன் செயல்களால் மட்டும் பேசியவர் இவர்.

நான்காவதாக, இவர் ஒரு சிறந்த தொழிலாளி. தன் தொழில் வழியாக குடுமபத்தை காப்பாற்றியதோடு, இறைவனையும் மகிமைப்படுத்தினார்.

ஐந்தாவதாக, இவர் ஒரு வழிநடுத்தும் தலைவராக உள்ளார். மரியாவின் பேறுகாலத்தின்போது, இடத்திற்காக தேடி அலைந்து, கடைசியில் மாடடைக் குடிலையாவது பெற்றுத் தருகிறார். இவரின் தலைமைத்துவப் பணியினை அறிந்திருந்ததால்தான் இறைவனும் தன் மகனை வளர்க்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைக்கிறார். குழந்தையை தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடியதிலும், அங்கிருந்து மீண்டும் கொணர்ந்ததிலும், ஒரு தலைவருக்குரிய பண்பு இவரில் வெளிப்படுவதைக் காண்கிரோம்.

அமைதியின் மனிதர், புனித யோசேப்பின் இந்த எடுத்துக்காட்டுகள் நம் வாழ்வையும் வழி நடத்தட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2021, 17:53