தேடுதல்

திருத்தந்தையுடன், கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ திருத்தந்தையுடன், கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ 

ஈராக் திருத்தூதுப்பயணம், பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அல்ல

புலம்பெயர்ந்துள்ள ஈராக் கிறிஸ்தவரக்ளை, அந்நாட்டில் மீள்குடியமரச் செய்வதும், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுக்கொடுப்பதும், ஈராக் அரசின் கடமையாகும் - கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயணம், அந்நாட்டினர் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் என எதிர்பார்ப்பது சரியாக இருக்காது என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வருகிற மார்ச் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் பற்றிய எதிர்பார்ப்புகளை, பீதேஸ் செய்தியிடம் பகிர்ந்துகொண்ட, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ அவர்கள், ஈராக் கிறிஸ்தவ சமுதாயம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காக, திருத்தந்தை அந்நாட்டிற்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்று கூறினார்.

ஈராக்கிலிருந்து வெளியேறி, வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈராக் கிறிஸ்தவர்களை,  அந்நாட்டில் மீள்குடியமரச் செய்வதோ, அல்லது, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுக்கொடுப்பதோ, நிச்சயமாக திருத்தந்தையைச் சார்ந்தது அல்ல என்றுரைத்த கர்தினால் சாக்கோ அவர்கள், அந்தப் பணிகள், ஈராக் அரசின் கடமையாகும் என்பதை வலியுறுத்தினார்.

வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி முதல், 8ம் தேதி முடிய, திருத்தந்தை, ஈராக்கில் மேற்கொள்வதாய் திட்டமிடப்பட்டுள்ள திருத்தூதுப்பயணம் பற்றி, சமுதாய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக்கிலுள்ள அனைத்து புனித இடங்களுக்கும் திருத்தந்தையால் செல்லமுடியாது, மாறாக, முக்கியத்துவம் பெற்ற சில இடங்களுக்கு மட்டும் அவர் செல்வார் என்று குறிப்பிட்டார்.

Ur, Najaf, Mosul, Quaraqosh உள்ளிட்ட சில இடங்களுக்கு திருத்தந்தை சென்று, அன்பு, உடன்பிறந்த உணர்வு, ஒப்புரவு, சகிப்புத்தன்மை, வாழ்வு, மற்றும், பன்மைத்தன்மையை மதித்தல் ஆகிய நற்பண்புகளின் செய்தியைப் பரப்புவார் என்றும், இத்திருத்தூதுப் பயணத்தில், அரசியல், சமுதாயம், மற்றும், மதங்களின் பிரதிநிதிகளை, திருத்தந்தை சந்திப்பார் என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2021, 14:38