தேடுதல்

இந்தோனேசிய கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo இந்தோனேசிய கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo 

இந்தோனேசிய கர்தினாலின் தவக்கால சுற்றுமடல்

"இன்னும் அன்புகூர, இன்னும் ஈடுபட, இன்னும் ஆசீராக விளங்க" என்ற விருதுவாக்குடன் நாம் இந்த தவக்காலத்தைத் துவக்குவோம் - இந்தோனேசிய கர்தினால் Ignatius Suharyo

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஆட்டிப்படைத்துள்ள கோவிட்-19 பெருந்தொற்றினால் உருவான கடினமான வாழ்வை மீண்டும் ஒருமுறை நாம் இந்த தவக்காலத்தில் சந்திக்கிறோம் என்று, இந்தோனேசிய கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo அவர்கள் தன் தவக்கால சுற்றுமடலில் கூறியுள்ளார்.

பிப்ரவரி 17, திருநீற்றுப் புதனன்று துவங்கியுள்ள தவக்காலத்தையொட்டி, ஜகார்த்தா பேராயர், கர்தினால் Suharyo அவர்கள் வெளியிட்டுள்ள இந்த மடலில், நாம் எத்தனை துன்பங்களைச் சந்தித்தாலும், இறைவனின் அன்பை நம்புவதற்கு தொடர்ந்து அழைக்கும் தனிப்பட்ட காலம், இந்த தவக்காலம் என்று கூறியுள்ளார்.

நெருக்கடியில் நம்மை வீழ்த்தியுள்ள இந்த நேரம், நல்லவற்றைத் தெரிவு செய்வதற்கும் நம்மை அழைக்கும் நேரம் என்று கடந்த ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் சதுக்கத்தில் நடத்திய சிறப்பான வழிபாட்டு முயற்சியில் சொன்ன இறைவேண்டலை தன் மடலில் நினைவுறுத்தியுள்ள கர்தினால் Suharyo அவர்கள், நிரந்தமற்ற பல விடயங்களைப் புறம்தள்ளி, நிரந்தமான விடயங்களைத் தெரிவுசெய்ய தவக்காலம் நம்மை அழைக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இன்னும் அன்புகூர, இன்னும் ஈடுபட, இன்னும் ஆசீராக விளங்க" என்ற விருதுவாக்குடன் நாம் இந்த தவக்காலத்தைத் துவக்குவோம் என்று தன் மடலில் அழைப்பு விடுத்துள்ள கர்தினால் Suharyo அவர்கள், இந்த விருதுவாக்கு, வெறும் சொற்களாக தங்கிவிடாமல், செயல்வடிவம் பெறவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதில் நம், அன்பையும், ஈடுபாட்டையும், காட்டவேண்டும் என்று கூறியுள்ள கர்தினால் Suharyo அவர்கள், ஜகார்த்தா உயர் மறைமாவட்ட கத்தோலிக்கர் அனைவரும் நல்லவற்றைத் தெரிவு செய்ய, இந்த தவக்காலம் உதவி செய்யட்டும் என்ற வேண்டுதலுடன் தன் மடலை நிறைவு செய்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில், கோவிட்-19 பெருந்தொற்றினால், அதிக பாதிப்படைந்துள்ள இந்தோனேசியாவில், பிப்ரவரி 14ம் தேதி நிலவரப்படி, 1,210,703 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 32,936 பேர் இறந்துள்ளனர் என்றும் UCA செய்திக்குறிப்பு கூறுகிறது. (UCAN)

17 February 2021, 15:04