தேடுதல்

Vatican News
இந்தோனேசியாவின் கத்தோலிக்கர் மெழுகு திரிகளுடன் வழிபாட்டில் கலந்துகொள்ளுதல் - கோப்புப் படம் 2017 இந்தோனேசியாவின் கத்தோலிக்கர் மெழுகு திரிகளுடன் வழிபாட்டில் கலந்துகொள்ளுதல் - கோப்புப் படம் 2017  (AFP or licensors)

பாப்புவா மாநிலத்தில் அமைதி நிலவ ஆயர்கள் அழைப்பு

பாப்புவா மாநிலத்தில், இருபது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் வன்முறையை நிறுத்துவதற்கு, போரிடும் தரப்புகள் ஒன்றிணைந்து உரையாடலை மேற்கொள்ளவேண்டும் - ஆயர்கள்

மேரி தெரேசா :வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவின் கிழக்கேயுள்ள பாப்புவா மாநிலத்தில், இந்தோனேசிய இராணுவத்திற்கும், மக்களாட்சி ஆதரவு குழுக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்குக் கொணரப்படுமாறு, அம்மாநில கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாப்புவா மாநிலத்தின் ஐந்து கத்தோலிக்க ஆயர்கள் நடத்திய மூன்று நாள் கூட்டத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையில், அம்மாநிலத்தை முடக்கிப்போட்டிருக்கும் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படவும், புதுப்பிக்கப்பட்ட நல்லிணக்கத்தோடு சிறந்ததொரு வருங்காலத்தை அமைக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாப்புவா மாநிலத்தின் சிறப்பு தன்னாட்சி சட்டம், புதிய வேலைவாய்ப்புகள், வளர்ச்சிக்குரிய வாய்ப்புகள், கல்வியை மேம்படுத்தல், தற்போதைய நெருக்கடிநிலை உட்பட, பல்வேறு விடயங்கள் பற்றி, ஆயர்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடினர்.

மேற்கு பாப்புவா, மற்றும், பாப்புவா என, இரு மாநிலங்களாக அமைந்துள்ள பாப்புவா தீவில், மக்களின் பொதுவான நலனுக்காக அனைவரும் உழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஆயர்கள், பிரிவினைவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் ஆயுத மோதல்களை, அன்பு மற்றும், அஹிம்சை முறையில் இடம்பெறும் கலந்துரையாடல் வழியாகவே முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

பாப்புவா மாநிலத்திற்கு, சிறப்பு தன்னாட்சி வழங்குவது குறித்த கெடு நாள் 2021ம் ஆண்டோடு முடிவடையும்வேளை, அப்பகுதியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் வன்முறையை நிறுத்துவதற்கு, போரிடும் தரப்புகள் ஒன்றிணைந்து உரையாடலை மேற்கொள்ளவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

பாப்புவா மாநிலத்தில் தன்னாட்சியைவிட இப்போது அதிகம் தேவைப்படுவது, கல்வியும், வேலைவாய்ப்புமே என்பதையும், ஆயர்கள்,  தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். (AsiaNews)

26 February 2021, 14:32