தேடுதல்

Vatican News
லூர்து நகர் அன்னை மரியாவின் கெபியில் கோவிட் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் செபமாலை லூர்து நகர் அன்னை மரியாவின் கெபியில் கோவிட் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் செபமாலை  (AFP or licensors)

லூர்து நகர் அன்னை மரியா விழாவுக்கு தயாராக உள்ள திருத்தலம்

லூர்து நகர் அன்னை மரியாவின் விழாவைச் சிறப்பிக்க பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள அவ்வன்னையின் திருத்தலம், அனைத்து வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக உள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 11, இவ்வியாழனன்று, லூர்து நகர் அன்னை மரியாவின் விழாவைச் சிறப்பிக்க பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள அவ்வன்னையின் திருத்தலம், அனைத்து வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராக உள்ளது என்று அத்திருத்தலம் அறிவித்துள்ளது.

லூர்து அன்னை மரியாவின் திருநாளும், நோயாளர் உலக நாளும் சிறப்பிக்கப்படும் பிப்ரவரி 11ம் தேதி, பிரான்ஸ் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு, இத்திருத்தலத்தில் அமைந்துள்ள புனித 10ம் பயஸ் பெருங்கோவிலில், இத்திருத்தலத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள திருத்தூதுப் பிரதிநிதி, ஆயர் Antoine Hérouard அவர்களின் திருப்பலியும் மறையுரையும் கத்தோலிக்க தொலைகாட்சி நிறுவனங்கள் வழியே, நேரடியாக ஒளிபரப்பாகும்.

பிற்பகல் 2.30 மணி முதல் 5 மணி முடிய, செபமாலையின் அன்னை மரியா பெருங்கோவிலில், திருநற்கருணை ஆராதனை நடைபெறும் என்றும், அதே வேளையில், பிற்பகல் 3.30 மணிக்கு, அன்னை மரியாவின் கெபியில் செபமாலை செபிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 3ம் தேதி துவங்கிய நவநாள் பக்தி முயற்சிகளின் முடிவாக, பிப்ரவரி 11, இவ்வியாழனன்று நிகழும் அனைத்து நிகழ்வுகளின் இறுதியில், மாலையில், லூர்து திருத்தலத்தின் அதிபர், அருள்பணி Olivier Ribadeau Dumas அவர்கள் வழங்கும் திருநற்கருணை ஆசீர் இடம்பெறும்.

1858ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகரின் காவே (Gave) நதிக்கரையோரம் அமைந்துள்ள மசபியேல் குகையில், இளம்பெண் பெர்னதெத் அவர்களுக்கு, 'நானே அமல உற்பவி' என்ற அறிமுகத்துடன், அன்னை மரியா தோன்றினார். இதைத் தொடர்ந்து, நிகழ்ந்த 17 காட்சிகள், 1858ம் ஆண்டு, ஜூலை 16ம் தேதி நிறைவடைந்தன.

கடந்த 162 ஆண்டுகள், கோடிக்கணக்கான மக்களின் வருகைக்கு, குறிப்பாக நோயுற்றோரின் வருகைக்கு வழிவகுத்த லூர்து நகர் அன்னை மரியாவின் திருத்தலத்தில், சென்ற ஆண்டுமுதல், பெருந்தொற்று காரணத்தால், பக்தர்களின் வருகை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

10 February 2021, 15:27