தேடுதல்

Vatican News
மியான்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து பேரணிகள் மியான்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து பேரணிகள்  (HH)

மியான்மார் பிரச்சனைக்கு உரையாடல் ஒன்றே ஒரே தீர்வு

“சமுதாய நீதி, மக்களின் சுதந்திரம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றுக்காகப் போராடும் மக்கள் இயக்கங்களில், தூய ஆவியார் செயல்படுகின்றார் - கர்தினால் போ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டு இராணுவம், இம்மாதத் துவக்கத்தில் மக்களாட்சியைக் கவிழ்த்து, அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதை எதிர்த்து, நாடெங்கும் பெருமளவில் பேரணிகள் இடம்பெற்றுவரும்வேளை, அந்நாடு எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சனைக்கு, சரியான தீர்வு காண்பதற்கு, உரையாடலை மேற்கொள்ளுமாறு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மியான்மாரின் தற்போதைய நிலவரம் குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய, அந்நாட்டின் Pyay ஆயர் Alexander Pyone Cho அவர்கள், பிப்ரவரி முதல் தேதி அதிகாலையில் இடம்பெற்றுள்ள இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை விரும்பாத மக்கள், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

மியான்மார் நாட்டில் பிரச்சனைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் தீர்வு காண்பதற்கு மிகச் சிறந்த வழி உரையாடல் மட்டுமே என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர் Pyone Cho அவர்கள், நாட்டில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழலைக் களைவதற்கு, சிறப்பாகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

கடவுளில் நம்பிக்கை வைப்பதே, நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றும் என்பதில், ஆயர் என்ற முறையில், தான் வலியுறுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்,  ஆயர் Pyone Cho.

மேலும், கச்சின் மாநிலத்தின் Banmaw ஆயர் Raymond Sumlut Gam அவர்கள் கூறுகையில், கத்தோலிக்கர், ஆயர்களின் வழிகாட்டுதல்களின்படி, உண்ணாநோன்பு, இறைவேண்டல்கள், மற்றும், திருநற்கருணை ஆராதனை ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் தலைவர்கள், வெளிப்படைத்தன்மை வழியாக, சரியான தீர்வு காண்பார்கள் என்று ஆயர்கள் நம்புவதாகத் தெரிவித்த, ஆயர் Sumlut Gam அவர்கள், தெருக்களில் மக்கள் மேற்கொண்டுள்ள அமைதியான போராட்டங்கள், வன்முறைக்கு இட்டுச்செல்லக்கூடும் என்ற தன் அச்சத்தையும் வெளியிட்டுள்ளார். 

கர்தினால் போ

மேலும், மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், பிப்ரவரி 08, இத்திங்களன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில், “சமுதாய நீதி, குடிமக்கள் சுதந்திரம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றுக்காகப் போராடும் மக்கள் இயக்கங்களில், தூய ஆவியார் செயல்படுகின்றார்” என்ற சொற்களைப் பதிவுசெய்துள்ளார்.

மியான்மாரில், 2007ம் ஆண்டில் புத்தமதத் துறவிகள் நடத்திய புரட்சிக்குப்பின், தற்போது நாடெங்கும் பெரிய அளவில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. (UCAN)

09 February 2021, 13:05