தேடுதல்

Vatican News
இத்தாலியத் தூதர் லூக்கா அத்தனாசியோ, மெய்க்காப்பாளர் வித்தோரியோ இயாக்கோவாச்சி ஆகியோரின் உடல்களுக்கு மரியாதை இத்தாலியத் தூதர் லூக்கா அத்தனாசியோ, மெய்க்காப்பாளர் வித்தோரியோ இயாக்கோவாச்சி ஆகியோரின் உடல்களுக்கு மரியாதை   (ANSA)

காங்கோ குடியரசில், இத்தாலிய தூதர் கொலை

இத்தாலிய தூதர், அவரது மெய்க்காப்பாளர், மற்றும் வாகன ஓட்டுனர் ஆகியோர் கொல்லப்பட்டதையடுத்து, நாடுகளின் அரசுத்தலைவர்களும், மதத்தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 22, இத்திங்களன்று, காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் பயணித்த ஐ.நா.நிறுவனத்தின் வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இத்தாலிய தூதர், அவரது மெய்க்காப்பாளர், மற்றும் அவ்வாகனத்தை ஓட்டிச்சென்ற ஓட்டுனர் ஆகியோர் கொல்லப்பட்டதையடுத்து, பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்களும், மதத்தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இத்தாலியத் தூதர் லூக்கா அத்தனாசியோ அவர்களும், மெய்க்காப்பாளர், வித்தோரியோ இயாக்கோவாச்சி அவர்களும், காங்கோ குடியரசின் கோமா (Goma) என்ற ஊரில் உள்ள ஒரு பள்ளியில், ஐ.நா.வின் உலக உணவு திட்டம் மேற்கொண்டிருந்த ஒரு முயற்சியை பார்வையிடச் சென்ற வேளையில், இவ்விரு இத்தாலியரும், உலக உணவுத் திட்டத்தைச் சேர்ந்த வாகனத்தை ஓட்டிச்சென்ற முஸ்தபா மிலாம்போ அவர்களும், துப்பாக்கி ஏந்திய ஒரு குழுவால் சூழப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாயினர்.

கொல்லப்பட்ட தூதர் லூக்கா, மற்றும் காவல்துறை அதிகாரி வித்தோரியோ ஆகியோரின் உடல்கள், இத்தாலிய இராணுவ விமானத்தின் உதவியுடன் இத்தாலிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட ஓட்டுனர் முஸ்தபாவின் உடல், இச்செவ்வாயன்று, நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது பற்றி அறிய, காங்கோ அரசும், இத்தாலிய அரசும், ஐ.நா.நிறுவனமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இந்தக் கொலைகளைக் குறித்து, தன் ஆழந்த அனுதாபத்தை தெரிவித்திருப்பதோடு, இந்த வன்முறையாளர்கள் நீதிக்கு முன் கொண்டுவரப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார்.

43 வயது நிறைந்த இத்தாலியத் தூதர் லூக்கா அவர்களின் மறைவு குறித்து தன் அனுதாபங்களை வெளியிட்ட மிலான் பேராயர் மாரியோ தெல்பீனி அவர்கள், தான் காங்கோ நாட்டில் 2019ம் ஆண்டில் பயணம் மேற்கொண்ட வேளையில், அங்கு பணியாற்றிவந்த லூக்கா அவர்களைக் குறித்து மிக நல்ல செய்திகளைக் கேட்டதாகக் கூறினார்.

கனிம வளங்களை அதிக அளவில் கொண்டுள்ள காங்கோ குடியரசு, இந்த கனிம வளங்களைச் சுரண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்களுக்கிடையே எழுந்துள்ள மோதல்களால், அதிக வன்முறைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றது என்றும், இதனால், அந்நாட்டு மக்கள் வறுமையிலும், பசியிலும் துன்புறுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

1999ம் ஆண்டு முதல், ஐ.நா.வின் அமைதி காக்கும் முயற்சிகளும், அதைத் தொடர்ந்து, உலக உணவுத் திட்டத்தின் முயற்சிகளும் காங்கோ குடியரசில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

24 February 2021, 15:45