தேடுதல்

40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள COMECE அமைப்பின் இலச்சனை 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள COMECE அமைப்பின் இலச்சனை 

உயிர்களைக் காப்பாற்ற ஐரோப்பிய ஆயர்களின் விண்ணப்பம்

அனைத்து உயிர்களையும் காப்பாற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஆயர் பேரவைகளின் COMECE அமைப்பு, ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவருக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அனைத்து உயிர்களையும் காப்பாற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்பான COMECE அமைப்பு, ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவருக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளது.

கருக்கலைப்பை தடைசெய்து, போலந்து அரசும், அந்நாட்டின் நீதி மன்றமும் வழங்கியிருந்த உத்தரவுகளை, அந்நாடு மீள்பார்வை செய்யவேண்டும் என்று, ஐரோப்பிய பாராளுமன்றம் எடுத்திருந்த முடிவையொட்டி, ஐரோப்பிய ஆயர்கள், பாராளுமன்றத்திற்கு இம்மடலை அனுப்பியுள்ளனர்.

மிகவும் கடினமானச் சூழல்களில், கருவில் வளரும் உயிரைக் கலைப்பதற்கு பெண்கள் முடிவுகள் தேடும் வேளையில், அவர்களுக்கு உதவிகள் செய்ய கத்தோலிக்கத் திருஅவை பெரிதும் உதவியாக உள்ளது என்று இம்மடலில் கூறும் ஆயர்கள், அதே வேளையில், அனைத்து உயிர்களையும், குறிப்பாக, பிறக்காதக் குழந்தைகளின் உயிரைக் காப்பதில் திருஅவை மிகவும் அக்கறை காட்டிவருகிறது என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.

கருக்கலைப்பு நடைபெறும் மருத்துவ மனைகளில் பணியாற்றுவோர் தங்கள் மனசாட்சியின் குரலுக்கு செவிமடுத்து, அந்த முயற்சிகளிலிருந்து விலகிநிற்கும்போது, அவர்களது நிலைப்பாட்டை ஐரோப்பிய பாராளுமன்றம் கேள்வி கேட்பது சரியல்ல என்பதையும் ஐரோப்பிய ஆயர்கள் இம்மடலில் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

போலந்து நாட்டில் கருக்கலைப்பை தடை செய்த வேளையில், அதை எதிர்த்து, நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில், கிறிஸ்தவ ஆலயங்கள் சேதமாக்கப்பட்டதை, ஐரோப்பிய பாராளுமன்றம் கண்டனம் செய்யாமல் மௌனம் காத்தது சரியல்ல என்பதையும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்பான COMECE அமைப்பு, இம்மடலில் சுட்டிக்காட்டியுள்ளது.

COMECE அமைப்பின் சார்பில் ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர், David Maria Sassoli அவர்களுக்கு அனுப்பப்பட்ட இம்மடலில், இவ்வமைப்பின் தலைவர் கர்தினால் Jean-Claude Hollerich அவர்களும், துணைத்தலைவர், செயலர் என, உயர்மட்டப் பொறுப்பில் உள்ள நான்கு ஆயர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

25 February 2021, 15:16