தேடுதல்

Vatican News
வெனேசுவேலா புலம்பெயர்ந்தோர் வெனேசுவேலா புலம்பெயர்ந்தோர்  (AFP or licensors)

வெனேசுவேலா மக்களுக்கு ஆதரவாக கொலம்பியா ஆயர்கள்

புலம்பெயர்ந்தோருக்காக கொலம்பியா நாடும், தலத்திருஅவையும் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, திருத்தந்தையின் பாராட்டுச் சொற்கள், பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெனேசுவேலா நாட்டிலிருந்து, கொலம்பியா நாட்டில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அந்நாட்டு அரசு, தற்காலிக குடியுரிமை வழங்கியிருப்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஞாயிறு மூவேளை செப உரையில் பாராட்டியுள்ளதற்கு, அந்நாட்டு ஆயர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

வெனேசுவேலாவிலிருந்து கொலம்பியாவில் தஞ்சம் புகுத்துள்ள 17 இலட்சம் பேருக்கு, அந்நாட்டில், பத்தாண்டுகள் தங்கும் உத்தரவை, கொலம்பிய  அரசுத்தலைவர் Iván Duque வழங்கியதை, உலகின் பல நாடுகள் வரவேற்றுள்ளதையடுத்து, திருத்தந்தையும் தன் பாராட்டுக்களையும், நன்றியையும் வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தையின் பாராட்டுச் செய்தியைக் குறித்து, வத்திக்கான் செய்திக்கு பேட்டியளித்த பொகோட்டா பேராயர் Luis Jose Rueda Aparicio அவர்கள், புலம்பெயர்ந்தோருக்காக தங்கள் நாடும், தலத்திருஅவையும் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, திருத்தந்தையின் பாராட்டுச் சொற்கள் பெரும் உந்து சக்தியாக அமைந்துள்ளன என்று கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொலம்பியா நாட்டில், இன்னும் பல பிரச்சனைகள் இருந்தாலும், புலம்பெயர்ந்தோருக்காக தங்கள் நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகளை திருத்தந்தை பாராட்டியுள்ளதால், இந்நாட்டு மக்கள், தாங்கள் செல்லும் பாதை சரியான பாதையே என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்று, பேராயர் Rueda அவர்கள் கூறினார்.

2014ம் ஆண்டு முதல் வெனேசுவேலா நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளால், இதுவரை அந்நாட்டிலிருந்து 54 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என்பதும், இவர்களில் 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொலம்பியா நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

17 February 2021, 15:15