தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணத்திற்கு தயாரிப்பு திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணத்திற்கு தயாரிப்பு 

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணத்திற்கு செபம்

ஈராக் மக்கள் அனைவரும், பொதுநலனுக்காக, ஒப்புரவு மற்றும், ஒத்துழைப்பின் முயற்சிகளை துணிவோடு மேற்கொள்ள, திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் உதவுமாறு செபிக்க அழைப்பு - கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப் பயணத்தால் மக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில், உருக்கமான இறைவேண்டல் ஒன்றை, தன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ.

வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடைபெறும், திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணத்தை ஆண்டவரின் கரங்களில் அர்ப்பணித்து செபித்துள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், இப்பயணத்தின்போது திருத்தந்தையைச் சந்திக்கும், மற்றும், அவரது குரலைக் கேட்கும் அனைவரும், கிறிஸ்துவின் தூய ஆவியரால் ஒளியூட்டப்படவேண்டும் என்று மன்றாடியுள்ளார்.

இந்த இறைவேண்டலை, திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்திற்குமுன், ஒவ்வொரு நாளும் அனைவரும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள, கர்தினால் சாக்கோ அவர்கள், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம், பல்வேறு இன, கலாச்சார மற்றும், மதத்தவருக்கிடையே ஊக்கத்தையும், ஆறுதலையும், சந்திப்பையும் கொணரவேண்டும் என்று செபித்துள்ளார்.

ஈராக் மக்கள் அனைவரும், பொதுநலனுக்காக, ஒப்புரவு மற்றும், ஒத்துழைப்பின் முயற்சிகளை துணிவோடு மேற்கொள்ள, திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் உதவுமாறு செபிக்கவும், கர்தினால் சாக்கோ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். (Fides)

27 February 2021, 15:48