தேடுதல்

Vatican News
தென் ஆப்ரிக்காவில் தண்ணீருக்காக காத்திருக்கும் மக்கள் தென் ஆப்ரிக்காவில் தண்ணீருக்காக காத்திருக்கும் மக்கள்  (AFP or licensors)

சுத்தக்குடிநீர் இன்றி வாடும் மக்களுக்காக நடைபயணம்

இங்கிலாந்தின் 1,500 கத்தோலிக்கர்கள், இத்தவக்காலத்தில், தினமும் 10,000 காலடிகள் என 40 நாட்களுக்கு நடந்து, விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த உள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உலகம் முழுவதும் மக்கள் சுத்தமானக் குடிநீரின்றி வாடும் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், இங்கிலாந்தின் கத்தோலிக்கர்கள், இந்த தவக்காலத்தில், ஒவ்வொரு நாளும் நடைபயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

CAFOD என்ற கத்தோலிக்க உதவி நிறுவனத்தின் தவக்காலத் திட்டத்தின்கீழ் இடம்பெற உள்ள இம்முயற்சியில், 1,500 கத்தோலிக்கர்கள், ஒவ்வொரு நாளும், பத்தாயிரம் காலடிகள் என, நாற்பது நாள்களுக்கு நடந்து, விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதோடு, தண்ணீரின்றி துயருறும் மக்களுக்கு நிதியும் திரட்டுவர்.

'நீருக்கென நடைபயணம்' என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த திட்டத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும், ஒரு நாளைக்கு பத்தாயிரம் காலடிகள் என நாற்பது நாள்களுக்கு 4,00,000 காலடிகள் நடப்பர் என்றும், 1500 பேரும் இணைந்து, உருவாக்கும் 500 மில்லியன், அதாவது, 50 கோடி காலடிகள் தூரம், உலகை பத்து முறை வலம் வரும் தூரத்திற்கு, அல்லது, உலகுக்கும் நிலவுக்கும் இடையேயுள்ள தூரத்திற்கு சமம் என, CAFOD அமைப்பு அறிவித்துள்ளதென ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

தற்போதைய உலக அளவில் பரவியுள்ள பெருந்தொற்று நோயே, இத்தகைய விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு காரணமாக அமைந்தது எனக் கூறும் CAFOD அமைப்பு, ஒவ்வொரு சமுதாயமும், இந்நோயின் பாதிப்புக்களை அடைந்துவருவதால், அதிலேயே முடங்கிவிடாமல் வெளிவருவதற்கும், மற்றவர்களுக்கு நம்பிக்கையின் செய்தியை எடுத்துச்செல்லவும் இந்த நடைபயணம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17ம் தேதி, திருநீற்றுப் புதனிலிருந்து துவங்கும் இங்கிலாந்து, மற்றும், வேல்ஸ் கத்தோலிக்கர்களின் விழிப்புணர்வு, மற்றும், நிதி திரட்டல் நடைபயணம், உலகில் சுத்தக் குடிநீர் இன்றி வாடும் 220 கோடி மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாக இருக்கும்.

16 February 2021, 15:01