தேடுதல்

Vatican News
கேரள கத்தோலிக்க பொதுநிலையினர் அவையின் கருத்தரங்கை துவக்கிவைத்த மாநில நல அமைச்சர் K.K. சைலஜா கேரள கத்தோலிக்க பொதுநிலையினர் அவையின் கருத்தரங்கை துவக்கிவைத்த மாநில நல அமைச்சர் K.K. சைலஜா 

திருஅவை பணிகளைப்பார்த்து மற்றவர்கள் கற்க....

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கத்தோலிக்கத் திருஅவை மிகப்பெரிய அளவில் உதவியுள்ளதாக, கேரள நல அமைச்சர் பாராட்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கேரளா மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கத்தோலிக்கத் திருஅவை மிகப் பெரிய அளவில் உதவியுள்ளதாக, அம்மாநில நல அமைச்சர் தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

கேரள கத்தோலிக்க ஆயர்களின் பொதுநிலையினர் அவை ஏற்பாடுச் செய்த இரண்டு நாள் கருத்தரங்கை துவக்கிவைத்து உரையாற்றிய கேரளா மாநில நல அமைச்சர் K.K. சைலஜா அவர்கள், பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில், கேரள கத்தோலிக்க திருஅவை வழங்கிவரும் ஒத்துழைப்பும், உதவிகளும், எதனோடும் ஒப்பிட்டுக் கூறமுடியாத அளவுக்கு மிகப்பெரிது, என்றார்.

வருங்காலத்திலும் திருஅவையின் இத்தகைய உதவிகள் தொடரும் என்பதில் தான் மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளதாக உரைத்த கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர் சைலஜா அவர்கள், ஏழை மக்களுக்காக திருஅவை ஆற்றிவரும் பணிகளைப் பார்த்து அனைத்து தனியார் நல அமைப்புகளும் கற்றுக்கொள்ளவேண்டும் என தான் எப்போதும் விண்ணப்பித்து வருவதாகவும் கூறினார்.

சீரோ மலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்களும் கலந்துகொண்ட இத்துவக்க விழா நிகழ்ச்சியில், நல நெருக்கடிகளை எதிர்கொள்வதில் கேரளா கம்யூனிஸ்ட் அரசு எடுத்துவரும் சிறப்பு முயற்சிகளை பாராட்டினார் கர்தினால்.

இந்தியாவில் கோவிட்-19 நோய் பரவத் தொடங்கிய உடனேயே, கேரளாவின் 250 கத்தோலிக்க நல நிறுவனங்கள், இந்நோய் எதிர்ப்புத் திட்டங்களுக்கென தங்களை அர்ப்பணிப்பதாக கர்தினால் ஆலஞ்சேரி அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் 1 கொடியே 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1 இலட்சத்து 56,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 590 ஆகவும், இறப்புக்களின் எண்ணிக்கை 4,089 ஆகவும் உள்ளது.

23 February 2021, 15:18