தேடுதல்

Vatican News
ஐரோப்பாவில் தடுப்பூசி ஐரோப்பாவில் தடுப்பூசி  (AFP or licensors)

பொது நலனையும் ஒருமைப்பாட்டையும் மனதில் கொள்க

தடுப்பூசி தயாரிப்பாளர்களிடையே போட்டிகளும், தடுப்பூசிகளை தங்களுக்கென மட்டும் வைத்துக்கொள்ளும் மன நிலைகளும், உலக நலப் பாதுகாப்பிற்கு பெருந்தடை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பிய அவையின் கீழுள்ள 27 நாடுகளுக்கும் பாகுபாடின்றி,  சரிநிகராக, விரைவாக  தடுப்பூசிகள் கிடைப்பதற்கு வழிவகைச் செய்யப்படவேண்டும் என ஐரோப்பிய ஆயர்களும் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பும் இணைந்து, விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளன.

அனைவருக்கும் தடுப்பூசிகள் விரைவாகப் போடப்பட வேண்டும், மற்றும், அனைத்து நாடுகளும் இதில் சரிசமமாக நடத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை, ஐரோப்பிய அமைப்பிடம் விடுத்துள்ள ஐரோப்பியத் திருஅவை, ஏனைய பணக்கார நாடுகளை ஒப்பிடும்போது, ஐரோப்பிய நாடுகளில் இதுவரை தடுப்பூசிகளை பெற்றுள்ளோரின் எண்ணிக்கை மிகக்குறைவே எனவும் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இதுவரை, அந்நாட்டின் 21 விழுக்காடு மக்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் 14 விழுக்காடு மக்களும் தடுப்பூசியை பெற்றுள்ள வேளை, ஐரோப்பிய அவையின் கீழுள்ள நாடுகளில் 5 விழுக்காட்டினருக்கே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதையும் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர், ஐரோப்பிய ஆயர்களும், கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பும்.

உலகில் தடுப்பூசி தயாரிப்பாளர்களிடையே இடம்பெற்றுவரும் போட்டிகளும், தடுப்பூசிகளை தங்களுக்கென மட்டும் வைத்துக்கொள்ளும் மன நிலைகளும், உலக நலப் பாதுகாப்பிற்கு பெருந்தடைகளாக உள்ளன எனக் கூறும் ஐரோப்பியத் திருஅவை, ஏற்கனவே வறுமையில் வாடும் நாடுகள் போதிய தடுப்பூசிகளின்றி நலப்பிரச்சனைகளையும் எதிர்நோக்கும்போது, அவைகளின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படும் என்ற கவலையையும் வெளியிட்டுள்ளது.

தடுப்பு மருந்துக்களை ஏழைநாடுகளுடன் பகிர்வது குறித்த ஐரோப்பிய அவை நாடுகளின் திட்டம் குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ள திருஅவை அதிகாரிகள், பொது நலனையும் ஒருமைப்பாட்டையும் மனதில் கொண்டதாக இத்திட்டம் செயல்பட, தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

23 February 2021, 15:10