தேடுதல்

Vatican News
உத்தரகாண்ட்டில் பனிப்பாறை சரிவுக்குப்பின் மீட்புப்பணிகள் உத்தரகாண்ட்டில் பனிப்பாறை சரிவுக்குப்பின் மீட்புப்பணிகள்  (ANSA)

பனிப்பாறை சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரிடர் இடம்பெற்ற பகுதியில் இடர்துடைப்புப் பணிகளை ஆற்றும் அதிகாரிகளுக்கு, இந்திய காரித்தாஸ் அமைப்பு தேவையான உதவிகளைச் செய்யும் - கர்தினால் கிரேசியஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரிய பனிப்பாறை சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான, அவசரகால உதவிகளை உடனடியாக அனுப்பத் தீர்மானித்துள்ளது, இந்திய கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு.

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் அலெக்நந்தா, மற்றும், தவுலிகங்கா ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள இரண்டு நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது அங்கு பணியில் இருந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இந்தப் பேரிடரில் உயிரிழந்த, காணாமல்போயுள்ள மற்றும், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, தனது ஆறுதலையும், செபங்களையும் தெரிவித்துள்ள, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான, மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், காணாமல்போயுள்ளவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் மற்றும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் இடர்துடைப்புப் பணிகளை ஆற்றும் அதிகாரிகளுக்கு, இந்திய காரித்தாஸ் அமைப்பு தேவையான உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளது என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆயர் வின்சென்ட் நெல்லைப்பரம்பில்

இந்தப் பேரிடர் குறித்து ஆசியச் செய்தியிம் கருத்து தெரிவித்த, உத்தரகாண்ட் மாநிலத்தின் Bijnor ஆயர் வின்சென்ட் நெல்லைப்பரம்பில் (Vincent Nellaiparambil) அவர்கள், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் கிராமங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை இன்னும் சரியாகக் கணிக்க முடியவில்லை என்று கூறினார்.

பேரிடர் நடைபெற்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில், Bijno மறைமாவட்டத்தின்  அருள்பணி Ajo Thelappilly அவர்கள், நிவாரணப் பணிக்குழுவுடன் இருக்கிறார் என்றும், அப்பகுதியின் நிலவரத்தை அவரால் இன்னும் சரியாகக் கூற முடியவில்லை என்றும், அவர் கேட்கும் உதவிகளை மறைமாவட்டம் அனுப்பத் தயாராக உள்ளது என்றும், ஆயர் நெல்லைப்பரம்பில் அவர்கள் கூறியுள்ளார். 

அந்தோனியோ கூட்டேரஸ்

இதற்கிடையே, இந்த பேரிடரில் பலியான மற்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இந்திய அரசுக்கும் தன் அனுதாபங்களைத் தெரிவித்துள்ள, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், அப்பகுதியில் இடம்பெறும் மீட்புப்பணிக்கு, தேவைப்பட்டால், ஐ.நா. உதவத் தயார் என்றும் கூறியுள்ளார்.

இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 197 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அங்குள்ள நீர்மின்நிலையத்தில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதையில் பணியாளர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியும், தீவிரமாக நடைபெற்று வருகிறது. (AsiaNews/UN)

இந்த விபத்து நடந்த பகுதியையொட்டியுள்ள 13 கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

09 February 2021, 13:01