தேடுதல்

கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ 

ஈராக்கில் திருத்தந்தையின் வருகைக்காக புதுப்பித்தல்

ஈராக்கில் வாழ்வையும், மக்களையும் பாதுகாப்பதற்கு, ஒப்புரவு, அமைதி, மற்றும், நிலையானதன்மை அவசியம் – கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப்பயணத்திற்காக காத்திருக்கும் ஈராக் மக்கள், தங்கள் வாழ்வில் கடவுளுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தவேண்டும், மற்றும், கிறிஸ்தவ நம்பிக்கையின் சாரமாக அமைந்துள்ள, கிறிஸ்துவின் மரணம், மற்றும், உயிர்ப்பு பற்றி தியானிக்கவேண்டும் என்று, அந்நாட்டு திருஅவை தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்கர், பிப்ரவரி 15, வருகிற திங்களன்று, தவக்காலத்தைத் தொடங்கவிருப்பதையொட்டி, அந்த வழிபாட்டுமுறையின் முதுபெரும்தந்தை கர்தினால் லூயில் இரபேல் சாக்கோ அவர்கள், இணையதளத்தில் வெளியிட்டுள்ள தவக்கால செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று சூழலிலும், நம்மோடும், நம்மைச் சுற்றியுள்ள உலகோடும் ஒப்புரவு கொள்ளவும், ஆன்மீக மற்றும், சமுதாயப் புதுப்பித்தலில் ஈடுபடவும்,  உண்ணாநோன்பு மற்றும், இறைவேண்டல் உதவும் என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

பல ஆண்டுகள் போர், மற்றும், ஜிகாதிகளின் வளர்ச்சிகளுக்குப் பின்னர், நாட்டைக் கட்டியெழுப்ப மேற்கொண்டுவரும் முயற்சிகளை, முன்னோக்கிச் செல்லவிடாமல் தடுக்கும்வண்ணம், அண்மையில் இடம்பெற்றுள்ள, தாக்குதல்கள் மற்றும், பிரிவினைவாத வன்முறைகள் உள்ளன என்றும், கர்தினால் சாக்கோ அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை திருஅவை, மறைசாட்சிகளையும், ஆழ்நிலை தியான துறவிகளையும் கொண்டிருக்கும், ஒரு கிழக்கத்திய திருஅவை என்றும், தற்போது, இத்திருஅவை, ஈரான், சிரியா, துருக்கி, லெபனான், எகிப்து, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும், ஐரோப்பாவில் பரவியுள்ளது என்றும் கர்தினால் சாக்கோ அவர்களின் செய்தி கூறுகிறது.

எனவே ஒருவர் ஒருவருக்கு ஆதரவாக இருக்கவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்றும், ஈராக்கில், நவீன மக்களாட்சி அரசைக் கட்டியெழுப்புவதில் கல்தேய கிறிஸ்தவர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்றும் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக்கில், வாழ்வையும், மக்களையும் பாதுகாப்பதற்கு, ஒப்புரவு, அமைதி, மற்றும், நிலையானதன்மை அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2021, 15:41