தேடுதல்

Vatican News
திருநீற்றுப் புதன் திருப்பலியில் கர்தினால் கிரேசியஸ் திருநீற்றுப் புதன் திருப்பலியில் கர்தினால் கிரேசியஸ் 

கர்தினால் கிரேசியஸ் – தவக்கால மறையுரை

தவக்காலத்தில் நாம் கடைபிடிக்கும் நோன்பு முயற்சிகளில், உணவை மட்டும் எண்ணிப் பார்க்காமல், மதுபானங்கள், தொடர்புக்கருவிகள் ஆகியவற்றிலிருந்தும் விலகியிருப்பதைப்பற்றி சிந்திக்கவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவேண்டல், உண்ணாநோன்பு, தர்மம் ஆகிய அறச்செயல்களை மேற்கொள்வதற்கு தவக்காலம் நல்லதொரு காலம், ஆயினும், இயேசு விடுக்கும் எச்சரிக்கையைப் போல, இவற்றை, நம் சொந்த புகழுக்கென்று செய்யாமல், உயர்ந்த நோக்கங்களுக்காக மேற்கொள்வோம் என்று கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 17, திருநீற்றுப் புதனன்று, மும்பை பேராயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றி மறையுரை வழங்கிய மும்பைப் பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தவக்காலத்தில் நாம் கடைபிடிக்கும் நோன்பு முயற்சிகளில் உணவை மட்டும் எண்ணிப் பார்க்காமல், மதுபானங்கள், தொடர்புக்கருவிகள் ஆகியவற்றிலிருந்தும் விலகியிருப்பதைப்பற்றி சிந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கூண்டார்.

40 என்ற எண், விவிலியத்தின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ளது என்பதை தன் மறையுரையில் நினைவுறுத்திய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், நோவா காலத்தில் 40 நாள்கள் பெய்த மழை, இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகளாக பாலை நிலத்தில் மேற்கொண்ட பயணம், இயேசு 40 நாள்களாக பாலைநிலத்தில் மேற்கொண்ட தவ முயற்சிகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார்.

வெட்டுப்புழு மற்றும் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதைக் கண்ட இறைவாக்கினர் யோவேல், அதனை இறைவனின் தண்டனையாகக் கருதி, மக்களிடம் தவமுயற்சிகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதை முதல் வாசகம் எடுத்துரைக்கிறது என்பதை, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

தர்மச்செயல்களை செய்யும்போது, யாருக்கும் தெரியாத வகையில் உதவிகளைச் செய்யுங்கள் என்ற சிறப்பான வேண்டுகோளை முன்வைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மும்பை உயர் மறைமாவட்டத்தில், இந்த தவக்காலத்தில், வறியோர் குடும்பங்கள் பசியுடன் உறங்கச் செல்வதை நாம் ஒன்றிணைந்து தடுப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

தேவைகள் மிக அதிக அளவில் பெருகிவிட்ட காலத்தில், துன்புறும் ஒரு குடும்பத்திற்கு, கல்வித் தொகை, மின்சாரக் கட்டணம், வீட்டு வாடகை, மருத்துவச் செலவு என்ற பல்வேறு தேவைகளை நாம் நிறைவு செய்வதற்கு தவக்காலம் நல்லதொரு காலம் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தன் மறையுரை வழியே விண்ணப்பித்தார். (AsiaNews)

18 February 2021, 14:42