தேடுதல்

பிரேசில் ஆயர்கள் பிரேசில் ஆயர்கள் 

பிரேசில் நாட்டில், நம்பிக்கையின் ஒளியைக் கொணர இறைவேண்டல்

கோவிட்-19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசில் நாட்டில், நம்பிக்கை, மற்றும், ஒன்றிப்பின் அடையாளமாக, ஒவ்வொரு கத்தோலிக்கர் வீட்டிலும் மெழுகுதிரி ஏற்ற அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரேசில் நாட்டில், நம்பிக்கையின் ஒளி கொணரப்படவேண்டும் எனற நோக்கத்தில், பெப்ரவரி 2ம் தேதி, இச்செவ்வாய்க்கிழமையை இறைவேண்டலின் நாளாக கடைப்பிடிக்குமாறு கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது அந்நாட்டு தலத்திருஅவை.

இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த திருவிழாவை சிறப்பித்த இந்த செவ்வாய்க்கிழமையன்று, அன்னை மரியா, மற்றும், புனித யோசேப்பின் பரிந்துரையை பிரேசில் நாட்டிற்கு வேண்டி, இந்நாளை இறைவேண்டல் நாளாக சிறப்பிப்போம் என அழைப்பு விடுத்துள்ள பிரசில் ஆயர் பேரவையின் பொதுச்செயலர், ஆயர் Portella Amado அவர்கள், 'நம்பிக்கையின் ஒளியை அணையாமல் காப்போம்' என்ற தலைப்பில் இந்நாள் சிறப்பிக்கப்படுவதாகவும் கூறினார்.

நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பின் அடையாளமாக, ஒவ்வொருவரும், இச்செவ்வாய்க்கிழமையன்று, இரவு துவங்கும்வேளையில், தங்கள் வீட்டு ஜன்னலில் ஒரு மெழுகுதிரியை ஏற்றுமாறு, ஆயர் பேரவை அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் ஒன்றான பிரேசிலில், 92 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 இலட்சத்து 25 ஆயிரம் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

துன்புறும் மக்கள் சார்பில், ஆக்சிஜன் வழங்கும் கருவிகளுக்கென பிரேசில் திருஅவை விண்ணப்பம் ஒன்று விடுத்ததும், அதற்கு உடனடியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உதவியதும் குறிப்பிடத்தக்கது.

02 February 2021, 15:55