தேடுதல்

மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைதி போராட்டம் மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைதி போராட்டம் 

மதமாற்றத் தடைச்சட்டத்தால் கிறிஸ்தவ மறையில் ஆர்வம்

அரசு ஏன் கிறிஸ்தவ மதத்தின் மீது இவ்வளவு அச்சம் கொண்டுள்ளது என்ற கேள்வியை, உண்மையான இந்துக்களே என்னிடம் கேட்கின்றனர் - போபால் பேராயர் லியோ கொர்னேலியோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள மதமாற்றத் தடைச்சட்டம், இந்துக்கள் உட்பட பல்வேறு மக்களை, கிறிஸ்துவ மறையைப் பற்றி அறிவதற்குத் தூண்டுதலாக அமைந்துள்ளது என்று, போபால் உயர் மறைமாவட்டப் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.

மத உரிமைச் சட்டம் என்ற பெயரில், மத்தியப் பிரதேச மாநிலம், 2020ம் ஆண்டு உருவாக்கி, 2021ம் ஆண்டு சனவரி மாதம் வெளியிட்ட சட்டத்தின்படி, அம்மாநிலத்தில், மதமாற்றமும், இரு மதத்தவருக்கிடையே திருமணங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின்படி, ஒருவர் மதமாற்றம் பெறுவதற்கு முடிவு செய்தால், அவரும், அவருக்கு உதவிசெய்ய முன்வரும் மதப்பணியாளரும், இந்த மதமாற்றம் நடைபெறுவதற்கு 60 நாள்களுக்கு முன்னர், மாவட்ட அலுவலகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமலுக்கு வந்த ஒரு மாதத்திற்குள், இந்தச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள 28 பேரில், பாதிக்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள் என்று, ஆசிய செய்தி கூறுகிறது.

இதைக் குறித்து ஆசிய செய்தியிடம் பேசிய பேராயர் கொர்னேலியோ அவர்கள், அரசு ஏன் கிறிஸ்தவ மதத்தின் மீது இவ்வளவு அச்சம் கொண்டுள்ளது என்ற கேள்வியை, உண்மையான இந்துக்களே தன்னிடம் கேட்பதாகக் கூறியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், புனித வாரம், உயிர்ப்பு பெருவிழாவையொட்டி, திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் என்று கூறிய பேராயர் கொர்னேலியோ அவர்கள், இவ்வாண்டும், கோவிட்-19 தடை உத்தரவுகளை மதித்து, திருமுழுக்குகள் நடைபெறும் என்று ஆசிய செய்தியிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 February 2021, 15:47