தேடுதல்

Vatican News
ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். (திருப்பாடல் 1:2) ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். (திருப்பாடல் 1:2) 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 1 – நற்பேறு பெற்றோர் - 2

நற்பேறு பெற்றவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். (திருப்பாடல் 1:2)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: திருப்பாடல் 1 – நற்பேறு பெற்றோர் - 2

சிறுவயதில், நம்மில் பலர், 'சைக்கிள்' எனப்படும் மிதிவண்டியை ஓட்டப் பழகியிருப்போம். பொதுவாக, இந்தப் புதிய முயற்சியை, வீட்டுக்கருகே இருக்கும் திறந்தவெளித் திடலில் துவங்கியிருப்போம். அவ்வேளையில், நமக்கு பயிற்சியளிக்க வந்தவர், அந்தத் திடலின், ஒரு பகுதியில் இருந்த ஒரு கல், அல்லது, ஒரு கம்பத்தைக் காட்டி, அதில் மோதிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையைக் கொடுந்திருக்கக்கூடும். நாம் மிதிவண்டியில் வலம்வந்த வேளையில், அவர் தந்த எச்சரிக்கையை உள்வாங்கி, கவனமாக அந்த திடலைச் சுற்றிவந்திருப்போம். ஆனால், அந்தக் கல், அல்லது, கம்பத்தின் மீது மோதிவிடக்கூடாது என்பதில் மட்டும் நம் கவனம் முழுவதும் பதிந்திருந்தால், அதில் மோதிவிடும் ஆபத்து அதிகம் இருந்திருக்கும். ஒருவேளை, அதில் மோதியும் இருப்போம்.

வாழ்வில் நாம் செய்யக்கூடிய, செய்யவேண்டிய விடயங்கள் பல இருக்கும்; அதே வேளையில், செய்யக்கூடாத, தவிர்க்கவேண்டிய ஒரு சில விடயங்களும் இருக்கும். நம் கவனத்தைக் கட்டிப்போடுவது எது என்பதைப் பொருத்து, நம் வாழ்வின் மகிழ்வும், நிம்மதியும் தீர்மானிக்கப்படும்.

பிப்ரவரி 17, இப்புதனன்று, தவக்காலத்தைத் துவக்குகிறோம். இந்த அருள்நிறை காலத்தில், நம் கவனத்தைக் கட்டிப்போடுவது எது என்பதைப் பொருத்து, தவக்காலத்தை, ஒரு வாய்ப்பாக, அல்லது, ஒரு சுமையாக நாம் கருதமுடியும். அடுத்துவரும் 40 நாள்களில், பாவங்களைத் தவிர்ப்பதிலேயே நம் கவனம் முழுவதையும் செலுத்தப்போகிறோமா? அல்லது, புண்ணியங்கள் செய்வதில் நாம் கவனம் செலுத்தப்போகிறோமா? என்ற கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் பதில் சொல்ல முயல்வோம்.

பொதுவாகவே, மதம்சார்ந்த விடயங்களில், நாம், நன்மைகளைச் செய்யும் நேர்மறைக் கண்ணோட்டம் கொண்டிருக்கிறோமா, அல்லது, தீமைகளைத் தவிர்க்கும் எதிர்மறைக் கண்ணோட்டம் கொண்டிருக்கிறோமா என்ற ஆய்வை மேற்கொள்வது நல்லது. இந்த ஆய்வுக்கு, முதல் திருப்பாடலில் நாம் துவங்கியுள்ள விவிலியத்தேடல் உதவியாக இருக்கும்.

நம்மில் பலருக்கு, மதம் என்பது, 'இதைச் செய்யாதே', 'அதைச் செய்யாதே' என்ற கட்டளைகளின் தொகுப்பாகத் தெரியலாம். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுளாகிய ஆண்டவர் வழங்கிய பத்துக்கட்டளைகளை ஆய்வு செய்யும்போது, அங்கு, 'செய்யாதே', 'வேண்டாம்' என்ற கட்டளைகள் அடிக்கடி சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம். விடுதலைப்பயணம் 20ம் பிரிவின், முதல் 17 இறைவாக்கியங்களில் கூறப்பட்டுள்ள இறைவனின் கூற்றுகளில் நாம் காண்பது இதுதான்:

 • என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
 • விண்வெளியில், மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
 • நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம்.
 • உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே
 • ஓய்வு நாளன்று ... யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.
 • கொலை செய்யாதே.
 • விபசாரம் செய்யாதே.
 • களவு செய்யாதே.
 • பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.
 • பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. (வி.ப. 20:3-5,7,10,13-17)

'ஆகாது', 'வேண்டாம்', 'செய்யாதே' என்ற கட்டளைகளே இப்பகுதியில் ஓங்கி ஒலிக்கின்றன. மோசே வழியே இறைவன் தந்த இக்கட்டளைகளை, தலைமுறை, தலைமுறையாக, கேட்டு, வாசித்து, பின்பற்றிவந்த இஸ்ரயேல் சமுதாயத்தில்  பிறந்து வளர்ந்த தாவீது, தன் முதல் திருப்பாடலில், நற்பேறு பெற்றவர் யார் என்பதைக் கூற முயலும்போது, அவர் எதை, எதைச் செய்யமாட்டார் என்பதை முதலில் கூறியிருப்பது, நமக்கு வியப்பை உருவாக்கவில்லை.

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர். (திருப்பாடல் 1:1)

நல்லவர் ஒருவர், தீமைகளைவிட்டு விலகி, தன் உள்ளத்தை சுத்தப்படுத்தி வைத்திருப்பது மட்டும் போதாது. அந்த உள்ளத்தை நன்மைகளால் நிறைக்கவேண்டும். அவ்வாறு செய்யத் தவறும்போது, நாம் விரட்டியடித்த தீமைகள், மீண்டும் உள்ளத்தில் குடிகொள்ளக்கூடும். இந்த எச்சரிக்கையை இயேசுவே வழங்கியிருக்கிறார்:

 • லூக்கா 11: 24-26
 • இயேசு மக்களிடம் கூறியது: “ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம்தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ‘நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகு படுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்.”

இயேசு வழங்கிய இந்த எச்சரிக்கையை உணர்ந்தவர் போல், திருப்பாடலின் ஆசிரியர், நற்பேறு பெற்றவர், தீமையை விட்டு விலகி வாழும் அதே வேளை, தன் உள்ளத்தை நன்மைகளால் நிறைக்கிறார் என்ற கருத்தை, முதல் திருப்பாடலில் உடனடியாக இணைத்துள்ளார்.

ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். (திருப்பாடல் 1:2)

'ஆண்டவரின் திருச்சட்டம்' என்ற சொற்றொடர், திருப்பாடல்கள் நூலில் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொற்றொடரின் பொருள், ஆண்டவர் மோசே வழியே வழங்கிய சட்டங்கள் மட்டுமல்ல, மாறாக, 'ஆண்டவரின் சொற்கள்' அல்லது, 'ஆண்டவரின் வார்த்தை' என்ற பொருளையும், இச்சொற்றொடர் வழங்குகிறது.

'ஆண்டவரின் திருச்சட்டம்' நம்மை இரவு பகலாக மகிழ்வில் நிறைக்கவேண்டும் என்ற கருத்தில் கூறப்பட்டுள்ள இந்த இறைவாக்கியத்திற்கு, Charles Spurgeon என்ற ஆங்கிலப் போதகர் அளித்துள்ள விளக்கத்தில், அழகான ஓர் உருவகத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

"கம்பளிப்புழு இலையின் மீது ஊர்ந்துசெல்லும் வேளையில், அது, அவ்விலையை சிறிது சிறிதாக விழுங்கியபடியே செல்லும். நாமும், இறைவார்த்தையை வாசிக்கும்போது, மேலோட்டமாக அந்த வார்த்தைகளின் மீது ஊர்ந்துசெல்லாமல், அவற்றை சுவைத்து உண்பதற்கு, உள்வாங்குவதற்குப் பழகவேண்டும்" என்று Spurgeon அவர்கள் கூறியுள்ளார்.

இறைவார்த்தையை இவ்விதம் உண்பதைக் குறித்து சிந்திக்கும்போது, விவிலியத்தில் காணப்படும் இரு கூற்றுகள் நம் நினைவில் நிழலாடுகின்றன. இறைவாக்கினர் எசேக்கியேல் காணும் காட்சியில், இறைவார்த்தைகள் அடங்கிய சுருளேட்டினை அவர் உண்ணும்படி கட்டளை பிறக்கிறது:

 • எசேக்கியேல் 2:8-9, 3:2-3
 • அவர் என்னை நோக்கி, "நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள்... உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைக் தின்று விடு” என்றார். அப்போது என்னை நோக்கி ஒரு கை நீள்வதைக் கண்டேன். அதில் சுருளேடு ஒன்று இருந்தது. நானும் என் வாயைத் திறக்க, அவர் அச்சுருளேட்டை எனக்குத் தின்னக் கொடுத்தார்... நானும் தின்றேன். அது என் வாயில் தேன்போல் இனித்தது.

இதற்கு இணையான மற்றொரு காட்சியை நாம் திருவெளிப்பாடு நூலில் காண்கிறோம்:

 • திருவெளிப்பாடு 10: 9-10
 • நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப்போல் இனிக்கும்” என்று என்னிடம் சொன்னார். உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது.

இறைவார்த்தை, நம் வாயில் தேன் போலவும், வயிற்றில் கசப்பான மருந்தைப்போலவும் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ள இந்த உருவகத்தை, நம் வாழ்வின் பல தருணங்களில் உணர்ந்திருப்போம். இறைவார்த்தையை மேலோட்டமாக வாசிக்கும்போது, அல்லது, திருவழிபாடுகளில் வாசிக்கக் கேட்கும்போது, அது நம் வாயில் அல்லது, செவிகளில் தேனாக இனிக்கலாம். ஆனால், அந்த வார்த்தையை நம் வாழ்வின் மையமாக மாற்றும்வேளையில், கசப்பாக மாறலாம். மருந்துகள் கசப்பாக இருப்பினும், நம் உடல்நலனுக்கென அவற்றை உட்கொள்கிறோம், இல்லையா? அதேவண்ணம், இறை வார்த்தையையும் நாம் நமது ஆன்மீக நலனுக்காக உட்கொள்வது நல்லது.

ஒவ்வோரு வழிபாட்டு ஆண்டிலும், பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை, ‘இறைவார்த்தை ஞாயிறு’ என்ற நாளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2019ம் ஆண்டு இணைத்துள்ளார். 2020ம் ஆண்டு, சனவரி 26ம் தேதி 'இறைவார்த்தை ஞாயிறு' முதல் முறையாக சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, 'விவிலியம், இறைவன் நமக்கு எழுதிய காதல் கடிதம்' என்று, தன் மறையுரையில் கூறினார்.

அத்துடன், நற்செய்தியின் கையடக்கப் பிரதி ஒன்றை, நம் செல்லிடப் பேசியைப் போல் நாம் பயன்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும், குறைந்தது, மூன்று, அல்லது, நான்கு இறைவாக்கியங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

பிப்ரவரி 17 திருநீற்றுப் புதனன்று நாம் துவங்கியுள்ள தவக்காலத்தில், இறைவார்த்தை, நம் வாழ்வில், கூடுதல் நேரத்தையும், முக்கியத்துவத்தையும் பெறுவதற்கு, சிறப்பான முயற்சிகளை மேற்கொள்வோம்.

16 February 2021, 12:58