கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
சிரியாவிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கொணர்ந்த பொருளாதார தடைகளால், ஏழை மக்களே துயர்களை அனுபவிப்பதாகவும், ஆசாத் அரசிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் அந்நாட்டு கிரேக்க மெல்கத்திய வழிபாட்டுமுறை கத்தோலிக்க பேராயர் ஒருவர்.
ACN (Aid to the Church in Need) என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிடம் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட, அலெப்போ உயர்மறைமாவட்ட பேராயர் Jean-Clément Jeanbart அவர்கள், அதிகாரத்திலிருப்போரை பாதிக்காமல், ஏழை மக்களை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ள இத்தடைகள், அவை விதிக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராகச் சென்றுகொண்டிருக்கின்றன என்ற கவலையை வெளியிட்டார்.
சிரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் சாதாரண மக்களை மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளி, குடும்பங்கள் மாண்புடன் வாழ்வதை தடைச் செய்வதால், அனைத்துப் பொருளாதாரத் தடைகளும் அகற்றப்படவேண்டும் என மேற்கத்திய நாடுகளிடம் தான் விண்ணப்பிப்பதாகவும் கூறினார் பேராயர்.
அப்பாவி சிரியா மக்கள், போதிய உணவு, எரிசக்தி, மின்சத்தி, பணம், கடன் வசதி போன்றவை இன்றி, பெருமளவில் துன்புறுவதாக உரைத்த பேராயர் Jeanbart அவர்கள், அரசுத்தகலைவர் ஆசாத்துடன் பேசசுவார்த்தை நடத்தி, இப்பிரசனைக்கு சுமுகமான ஒரு முடிவுகாண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
2011ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு மோதல்கள் துவங்கியதிலிருந்து, ஏழைகள், நோயுற்றோர், முதியோர் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்புப் பணிகளை அந்நாட்டில் ஆற்றிவருகின்றது ACN அமைப்பு.