தேடுதல்

Vatican News
கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் இளம் தம்பதி ஒன்று கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் இளம் தம்பதி ஒன்று  (ANSA)

மகிழ்வின் மந்திரம் - தம்பதியரின் நிலையற்ற உறவுகள்

திருமணம் தொடர்பான பிரச்சனைகள், பலவேளைகளில், பொறுமைக்கும், ஆழ்ந்த சிந்தனைக்கும், மன்னிப்புக்கும் தேவையான மனவுறுதியற்ற மனநிலையுடனும், அவசரமான முறையிலும் அணுகப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

"அன்பின் மகிழ்வு" (Amoris Latitia) திருத்தூது அறிவுரை மடலின், 'குடும்பத்தின் இன்றைய உண்மை நிலை' என்ற பகுதியில் காணப்படும் 41ம் பத்தியில், இன்றைய உலகில், தம்பதியரின் அர்ப்பணமற்ற, நிலையற்ற, உறவுகள் முன்வைக்கும் பிரச்சனையை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றைய உலகின் கலாச்சாரப் போக்குகள், மனிதரின் அன்புறவுகளில் எவ்வித வரைமுறையையும் கொண்டிருக்கவில்லை என்பதை, உலக ஆயர் மாமன்றத் தந்தையர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, தன்னலப்போக்குடன் கூடிய, நிலையற்றதான, மற்றும், மாறக்கூடிய அன்புறவுகள், ஒரு மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கு, அல்லது முதிர்ச்சிக்குத் தடையாகவே உள்ளன. இதுமட்டுமல்ல, இன்றைய நாட்களில், இழிபொருள் இலக்கியம், உடலை வியாபாரப் பொருளாக மாற்றும் நிலை, குறிப்பாக, இணையதள உதவியுடன் இவை இடம்பெறும் நிலை குறித்தும், மக்கள், தங்கள் உடலை, பாலுறவுக்காக விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் நிலைகள் குறித்தும் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர், மாமன்றத் தந்தையர்கள்.

இத்தகைய ஒரு பின்னணியில், தம்பதியர், தாங்கள் வளர்வதற்கான ஒரு சூழலை, தயக்கத்துடனும், உறுதியற்ற நிலையுடனும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அன்புறவு, மற்றும் பாலுறவின் ஆரம்ப நிலையிலேயே தம்பதியர் நின்றுவிடுகின்றனர். ஒரு தம்பதியரின் வாழ்வில் எழும் நெருக்கடிகள், குடும்ப உறவை நிலைகுலையச் செய்கிறது. இதனைத் தொடர்ந்து இடம்பெறும் பிரிவினைகளும், மணமுறிவுகளும், பெரியவர்கள், குழந்தைகள், மற்றும், சமுதாயம் முழுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தனியார், மற்றும் சமுதாய பிணைப்புகளை வலுவிழக்கச் செய்கின்றன. திருமணம் தொடர்பான பிரச்சனைகள், பலவேளைகளில், பொறுமைக்கும், ஆழ்ந்த சிந்தனைக்கும், மன்னிப்புக்கும் தேவையான மனவுறுதியற்ற மனநிலையுடனும், அவசரமான முறையிலும் அணுகப்படுகிறது. தம்பதியரின் வாழ்வில் ஏற்படும் தோல்விகள், புதிய உறவுகள், புதிய தம்பதியர், புதிதாக ஒன்றிணைந்து வாழ்தல், புதிய திருமணங்கள் ஆகியவற்றை உருவாக்கி, கிறிஸ்தவ வாழ்வுக்கு, ஒரு சிக்கலையும் பிரச்சனையையும் உருவாக்கும், புதிய குடும்ப சுழல்களை உருவாக்குகின்றது. (அன்பின் மகிழ்வு 41)

இவ்வாறு, இன்றைய உலகில், தம்பதியரின் அர்ப்பணமற்ற, நிலையற்ற, உறவுகள் முன்வைக்கும் பிரச்சனை குறித்து விவரித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.,

19 February 2021, 11:20